சனி, 30 அக்டோபர், 2010

ஆக்டோபஸ் 130 கேட்கும் ரசிகர்கள்

ஒரு மாத காலமாக கால்பந்து ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய உலக கோப்பை 2010ன் சாம்பியன் யார் என்பது இந்நேரம் தெரிந்துவிட்டிருக்கும். ஸ்பெயின் அல்லது நெதர்லாந்து…யார் வென்றிருந்தாலும் 8வது புதிய சாம்பியனாக அந்த அணி கோப்பையில் தனது பெயரை பொறித்துக் கொண்டிருக்கும்.

கோல்டன் ஷூ, கோல்டன் பால் வென்ற வீரர்களை விட ஸ்பெயினிடம் அரை இறுதியில் ஜெர்மனி தோற்கும் என்று சரியாகக் கணித்த ஆக்டோபஸ் பால் தான் உலக சூப்பர் ஸ்டார். முடிவு முதலிலேயே தெரிந்துவிட்டதாலோ என்னவோ… ஜெர்மனி வீரர்கள் திக்பிரமை பிடித்தமாதிரி விளையாடினார்கள். அர்ஜெண்டினாவை ஓட ஓட விரட்டிய அணியா இது என்று ஆச்சரியமாக இருந்தது. ஜெர்மனி ஜெயிக்கும் என்று ஆக்டோபஸ் கணித்தபோது தூக்கி வைத்துக் கொண்டாடிய ரசிகர்கள், தங்கள் அணி தோற்றதற்கு ’துரோகி’ ஆக்டோபஸ் பால் தான் காரணம் என்று கொதித்தது வேடிக்கையாக இருந்தது.
‘ஆக்டோபஸ் 130’ போடுங்கள்… அப்படியே கிரில்லில் போட்டு சுக்காவாக வறுத்து எடுங்கள்… சுறா மீன் தொட்டிக்குள் தூக்கிப் போடுங்கள் என்று டுவிட்டரில் தண்டனை வழங்கிக் கொண்டிருந்தார்கள். ஸ்பெயினில் ஒரே கொண்டாட்டம். ‘அழிந்து வரும் இனமாக அறிவித்து அந்த ஆக்டோபசுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். எங்கள் சார்பில் பாடிகார்டுகளை அனுப்புவது பற்றி ஆலோசித்து வருகிறோம்’ என்று ஸ்பெயின் பிரதமர் ஜோக் அடித்தார்.

ஆக்டோபஸ் பால், வெற்றி பெறப் போகும் அணியைத் தேர்வு செய்யும் வைபவம் ஒளிபரப்பாகாத டிவி சேனலே இல்லை. ஜெர்மனியை சேர்ந்த நியூஸ் சேனல் ‘என்’ டிவி இரண்டு வர்ணனையாளர்களுடன் நேரடி ஒளிபரப்பு செய்து அமர்க்களப்படுத்தியது. வெறும் கால்பந்து போட்டியோடு நிறுத்திவிடாமல் அடுத்த தேர்தலில் எந்த கட்சி ஜெயிக்கும்? யார் பிரதமர்?... இப்படி பல்வேறு விஷயங்களுக்கும் ஆக்டோபசிடம் ஜோசியம் கேட்டு உலக அளவில் பெரிதாக பிசினஸ் செய்யலாமா என்று ஓபர்ஹாசன் நகர மீன் அருங்காட்சியக நிர்வாகிகள் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டு வயதாகும் பால் இங்கிலாந்தில் பிறந்து ஜெர்மனியில் குடியேறியவனாம்.

+ பராகுவே அணி தோற்றாலும், சிறப்பாக விளையாடிய வீரர்களை சிறப்பிக்கும் வகையில் ஏற்கனவே அறிவித்தது போல அசன்சியான் நகர வீதிகளில் நிர்வாணமாக ஓடப் போவதாகக் கூறி ரசிகர்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறார் மாடல் அழகி லரிஸா ரிகுல்மே. லைவ் ரிலே இருக்குமா? என்று  ரசிகர்கள் ஆவலோடு விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
லரிஸாவுக்கு கிடைத்த உலகப் புகழ் மற்ற நாட்டு அழகிகளையும் உசுப்பேற்றிவிட்டிருக்கிறது. நெதர்லாந்து நாட்டின் ‘நீலப் பட’ நடிகை பாபி ஈடன் ஒரு படி மேலே போய், தங்கள் அணி வென்றால் டுவிட்டரில் தன்னை பாலோ செய்யும் அத்தனை ரசிகர்களையும் திருப்திப்படுத்தப் போவதாய் படுத்தியிருக்கிறார். அறிவிப்புக்கு முன் 23 ஆயிரமாக இருந்த ரசிகர்களின் எண்ணிக்கை இப்போது ஒரு லட்சத்தையும் தாண்டிவிட்டதாம். இதெல்லாம் கொஞ்சம் ஓவர் என்று கட்டுப்பெட்டி பா(ர்)ட்டிகள் பல்லைக் கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

+ கால் இறுதியில் பிரேசில், அர்ஜெண்டினா உதை வாங்கியதுமே இந்திய ரசிகர்களின் ஆர்வம் காற்று போன பலூனாவிட்டது. ‘எங்களைப் பொருத்தவரை எல்லாம் முடிந்துவிட்டது. உடனடியாக நாடு திரும்புவதா? இல்லை தென் ஆப்ரிக்காவிலேயே தங்கியிருப்பதா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்’ என்று பத்திரிகைகள் தங்கள் நிருபர்களுக்கு இ-மெயில் அனுப்பிவிட்டன. ஆனாலும், கணிசமான இந்திய ரசிகர்கள் நள்ளிரவு போட்டிகளை கொட்டக் கொட்ட விழித்திருந்து பார்த்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வேற்று நாடுகள் ஆடும்போதே இந்த அமர்க்களம் என்றால், உலக கோப்பையில் இந்தியா விளையாடினால் எப்படி இருக்கும்!

தூரத்தில் நம்பிக்கை வெளிச்சம் தெரியாமல் இல்லை. மீர் முகமது டிராபிக்கான தேசிய சப் ஜூனியர் கால்பந்து போட்டியில் 1500 பள்ளிகளை சேர்ந்த 40 ஆயிரம் சிறுவர்கள் விளையாட உள்ளனர். இந்த தொடரில் அசத்தும் பொடியன்கள் 16 வயதுக்குட்பட்ட இந்திய அணியில் இடம் பெறுவார்களாம். அப்படியே ஒரு 100 பேரை செலக்ட் செய்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு மூச்சு, பேச்சு, உணவு, உறக்கம் எல்லாமே கால்பந்துதான் என்ற அளவுக்கு பயிற்சி அளிப்பதுடன் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் உத்தரவாதம் கொடுக்க வேண்டும். இன்போசிஸ், டிசிஎஸ், ஐபிஎம், ரிலையன்ஸ், டாடா… என்று ஒவ்வொரு கார்பரேட் கம்பெனியும் வீரர்களைத் தத்தெடுத்து அணிகளை உருவாக்கி ஆதரிக்க வேண்டும். அப்படி ஆதரித்தால் வரிவிலக்கு உட்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் என்று அரசு அறிவிக்க வேண்டும்.
இதெல்லாம் நடந்தால் 2018 உலக கோப்பையில் இந்திய அணி விளையாடுவது சர்வ நிச்சயம். கலாம் சொல்லியிருக்கிறார்… கனவு கண்டு கொண்டிருப்போம்.

பா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக