சனி, 30 அக்டோபர், 2010

விளையாட்டாய் ஒரு விளையாட்டு போட்டி

டெல்லியில் காமன்வெல்த் கலாட்டா

காமன்வெல்த் விளையாட்டு போட்டி இந்தியாவில் முதல் முறையாக நடக்கவுள்ளது. விழாக் கோலம் பூண்டிருக்க வேண்டிய தலைநகர் டெல்லி பல்வேறு பிரச்னைகளால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. கரைகளைத் தொட்டபடி ஓடிக் கொண்டிருக்கும் யமுனை நதி காமன்வெல்த் கிராமத்தை பயமுறுத்திக் கொண்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகள், தீவிரவாத அச்சுறுத்தல், டெங்கு நோய் பரவல், இன்னும் முழுமையாகத் தயாராகாத விளையாட்டு கிராம், ஸ்டேடியத்துக்கு வெளியே நடை மேம்பாலம் இடிந்து விழுந்தது, நட்சத்திர வீரர், வீராங்கனைகள் விலகல்… என்று அடுக்கடுக்காய் தடைகள் அணிவகுத்தாலும், போட்டி திட்டமிட்டபடி வெற்றிகரமாக நடக்கும் என்று நிர்வாகிகள் அடித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
காமன்வெல்த் போட்டிக்கும் 80 ஆண்டு வரலாறு இருக்கிறது. இங்கிலாந்து அரச பரம்பரையின் ஆடம்பரத்தை வெளிச்சம் போடுவதற்காகவே ஆரம்பிக்கப்பட்ட போட்டி. கனடாவின் ஆன்டோரியோ மாகாணம், ஹாமில்டன் நகரில் 1930ல் நடந்த முதல் போட்டிக்கு ’பிரிட்டிஷ் எம்பயர் கேம்ஸ்’ என்றுதான் பெயர் வைத்தார்கள். பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை சேர்ந்த அணிகள் மட்டுமே இந்த போட்டியில் பங்கேற்று வருகின்றன. 1954ல் ‘பிரிட்டிஷ் எம்பயர் அண்டு காமன்வெல்த் கேம்ஸ்’, 1970ல் ’பிரிட்டிஷ் காமன்வெல்த் கேம்ஸ்’ என்று மாறிக் கொண்டே இருந்த பெயர் 1978ல் இருந்து காமன்வெல்த் விளையாட்டு போட்டியாகி நீடித்து வருகிறது.
காமன்வெல்த் கூட்டமைப்பில் உள்ள 54 உறுப்பினர் நாடுகளை சேர்ந்த 71 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன. யுனைட்டட் கிங்டம் (யுகே) என்று ஒரே குடையின் கீழ் இருந்தாலும் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் நார்தர்ன் அயர்லாந்து என்று நான்கு உள்ளூர் அணிகளும் தனித் தனியாக கலந்து கொள்கின்றன.
இதுவரை நடந்துள்ள எல்லா போட்டியிலும் (18) தவறாமல் பங்கேற்ற நாடுகள் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் மட்டுமே. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த போட்டி இரண்டாம் உலகப் போரின்போது ரத்து செய்யப்பட்டது. நிறவெறிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஸ்காட்லாந்தில் (1986) நடந்த போட்டியை ஆப்ரிக்கா மற்றும் கரீபியன் நாடுகள் புறக்கணித்தன.
கடைசியாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்த போட்டி நன்றாகவே களைகட்டியது. அடுத்து 19வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி டெல்லியில் அக்டோபர் 3ம் தேதி தொடங்கி 14ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான அனுமதி 2003ம் ஆண்டிலேயே இந்தியாவுக்கு கிடைத்துவிட்டது. முழுதாக 7 ஆண்டுகள் அவகாசம், ரூ.35 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பட்ஜெட் இருந்தும்… பணிகள் இன்னும் முழுமை பெறாததுதான் ஏகத்துக்கு எரிச்சலைக் கிளப்பியுள்ளது. மைதானங்களையும், விளையாட்டு கிராமத்தையும் குறிப்பிட்ட கெடுவுக்குள் கட்டி முடித்து தடையில்லா சான்றிதழ் வாங்க முடியாமல் ஒருங்கிணைப்புக் குழு விழி பிதுங்கிவிட்டது.

சர்வதேச காமன்வெல்த் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆய்வு செய்து, இந்த வேகம் போதாது என்று எச்சரித்த பிறகுதான் இறுதிக் கட்ட பணிகளை முடுக்கிவிட்டனர். நமது போதாத காலம், வட மாநிலங்களில் வரலாறு காணாத மழை கொட்டிக் கொண்டேயிருக்கிறது. அபாய அளவைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் யமுனை நதியின் வெள்ள நீரில் டெல்லியின் தாழ்வான பகுதிகள் மூழ்கிக் கிடக்கின்றன. கொசு உற்பத்தி போர்க்கால வேகத்தில் நடப்பதால் டெங்குவைக் கட்டுப்படுத்த முடியாமல் மாநகராட்சி திணறிக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் போதாது என்று பிரதான ஸ்டேடியத்தின் வெளியே கட்டப்பட்டு வந்த நடை மேம்பாலம் உடைந்து விழுந்து நொறுங்கியது. முன்கூட்டியே வந்த சில வெளிநாட்டு அணிகள், விளையாட்டு கிராமத்தில் வசதிகள் சரியில்லை என்று அதிருப்தியில் முணுமுணுக்க… அவல் கிடைத்த சந்தோஷத்தில் சர்வதேச மீடியா அரைத்து தள்ளிக் கொண்டிருக்கிறது.
   
இவ்வளவு பெரிய போட்டியை நடத்தும்போது சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். சின்ன விஷயங்களைக் கூட ஊதிப் பெரிதாக்கி பூதாகரமாகக் காட்டுகிறார்கள். பெய்ஜிங் ஒலிம்பிக்கை விடவும் அற்புதமாக நடத்திக் காட்டுகிறோம் பாருங்கள் என்று நம்பிக்கையுடன் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் போட்டி ஒருங்கிணைப்புக் குழுவினர். பிரதமர் தலையிட்டு பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார். பல்வேறு நாடுகளின் வழியாக 240 நாட்களில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கி.மீ. கடந்துள்ள காமன்வெல்த் சுடர் டெல்லியை நெருங்கிவிட்டது. காமன்வெல்த் திருவிழா காட்சிகளுடன் மீண்டும் சந்திப்போம்.

பா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக