வெள்ளி, 29 அக்டோபர், 2010

களங்கத்தின் கனம் கூடுகிறது

கிரிக்கெட் விளையாட்டை  இதற்கு மேலும் கறைப்படுத்த முடியாது என்ற அளவுக்கு, அதன் மூகம் கரி பூசப்பட்டுக் களையிழந்துவிட்டது. தென் ஆப்பிரிக்க வீரர் 'குரோனி'யின் ஒப்புதல் வாக்குமூலத்திற்குப் பிறகு வீசத் தொடங்கிய புயல், தற்போது மிகவும் வலுவடைந்து சூதாட்டத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் இந்தியக் கிரிக்கெட் வீரர்களை அலைக்கழித்து அடித்துப் போட்டிருக்கிறது.

கடந்த வாரம் (ஜூலை 20) இந்திய வருமான வரித் துறையும், மத்திய புலனாய்வுத் துறையும் இணைந்து கூட்டாக விரித்த வலையில், கிரிக்கெட் வீரர்கள், வாரிய அதிகாரிகள் அவர்களது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், சூதாட்டத் தரகர்கள் என்று மிகப் பெரிய திமிங்கிலக் கூட்டமே சிக்கியுள்ளது. உண்மையில் திக்குமுக்காடிப் போனது சோதனை நடத்திய அதிகாரிகள்தான்.

இரண்டு நாள்களாக நடந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள், வங்கிக் கணக்குகள், தங்க நகைக் குவியல்கள், அசையாச் சொத்துக்களின் பட்டியல் போன்றவை சோதனையிட்ட அதிகாரிகளை வாய் பிளக்க வைத்திருக்கிறது.

அதிரடிச் சோதனை வலையில் இந்திய அணியின் பயிற்சியாளரும் இந்தியாவுக்கு 'உலகக் கோப்பை' யைப் பெற்றுத் தந்த முன்னாள் அணித்தலைவருமான கபில்தேவ், மற்றொரு முன்னாள் அணித் தலைவர் அசாரூதின், அஜய் ஜடேஜா, மனோஜ் பிரபாகர், நவ்ஜோத் சிங் சித்து, நிகில் சோப்ரா, அஜய் சர்மா ஆகிய வீரர்களின் வீடுகள் குறி வைக்கப்பட்டன.

சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சிலின் முன்னாள் தலைவர் ஜக்மோகன் டால்மியாவின் வீடு மற்றும் அலுவலகமும் சோதனையிடப்பட்டதுடன், ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அவரிடம் ஐந்து மணி நேரத்திற்கு விசாரணையும் நடத்தியிருக்கிறார்கள். கிரிக்கெட் உலகக் கோப்பை '96 ன் போது போட்டிகளின் ஒளிபரப்பு உரிமை வழங்கியதில் ஊழல் செய்ததாக டால்மியா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சூதாட்டத் தரகர்கள் ஹான்ஸ் ஜெயின், ஷோபன் மேத்தா, முகேஷ்குமார் குப்தா ஆகியோரது வீடுகளும் சோதனைக்குத் தப்பவில்லை. மும்பை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தையும் சோதனை அதிகாரிகள் சல்லடையிட்டனர். கிரிக்கெட் உலகக் கோப்பை '96-ன் ஒளிபரப்பு உரிமை ஒப்பந்தம் குறித்த விவரங்களைப் புலனாய்வு அதிகாரிகள் கோரியதாகத் தெரிகிறது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியப் பொருளாளர் ருங்டாவின் ஜெய்ப்பூர் அலுவலகத்தில் நடந்த சோதனையில் பல கோடி ரூபாய் நிரந்தர வைப்புகளுக்கான ஆவணங்கள் சிக்கியுள்ளன.

அகமதாபாத்தைச் சேர்ந்த ஹரன் ஹாதி, பயிற்சியாளர் கபில்தேவின் நெருங்கிய நண்பர். அவரது வீட்டையும் வளைத்த அதிகாரிகள் வங்கிக் கணக்குப் புத்தகங்களைக் கைப்பற்றியுள்ளனர். ''நான் ஒன்றும் சூதாட்டத் தரகனல்ல. கபிலின் நண்பன் என்ற வகையில் சோதனை நடத்தினார்கள். அவ்வளவே...'' என்கிறார் ஹாதி.

தில்லி, மும்பை நகரங்களில் உள்ள சூதாட்டத் தரகர்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும், வர்த்தக நிறுவனங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. தில்லியில் 37 இடங்களிலும், மும்பையில் 5 இடங்களிலும் சோதனை நடந்திருக்கிறது.

புனேயில் உள்ள தரகர் ஒருவரின் இரண்டு அடுக்குமாடி வீடுகள், எட்டு வங்கிப் பெட்டகங்கள் அதிகாரிகளால் முத்திரையிடப்பட்டு மூடப்பட்டுள்ளன.

சோதனையில் சிக்கிய ஆவணங்கள், சொத்து விவரங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்ததோடு 50-க்கும் கூடுதலான வங்கிப் பெட்டகங்கள் முத்திரையிடப்பட்டு மூடப்பட்டுள்ளன. பலரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கபில்தேவ் தனக்கு 25 லட்சம் லஞ்சம் தர முன் வந்தார் என்று புகார் கூறிப் பரபரப்பூட்டிய மனோஜ் பிரபாகர் வீட்டில் 12 மணி நேர சோதனை நடைபெற்றது. கிரிக்கெட்டைத் தூய்மைப்படுத்த இந்த சோதனை நியாயமான ஒன்றே என்று பிரபாகர் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்.

கபில்தேவும் சளைத்தவரல்லவே. சற்றும் சலனப்படாத அவர் ''கவலைப்பட என்ன இருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்று எனக்குத் தெரியாது. வருமான வரித் துறை அதிகாரிகள்தான் இதற்கு பதிலளிக்க வேண்டும்'' என்று கூறியிருக்கிறார்.

இந்திய அணியின் முன்னாள் மருத்துவர் அலி இரானி, முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர் அசோக் மல்ஹோத்ரா மற்றும் அஜய் ஜடேஜா ஆகியோர் இணைந்து குரேகான் பகுதியில் 100 ஏக்கர் நிலம் வாங்கிப் போட்டிருப்பதற்கான ஆவணமும் சிக்கியுள்ளது.

கபிலின் முதன்மைச் சீடராக விளங்கும் ஜடேஜா மீதும் அதிகபட்ச சந்தேகப் பார்வை வீழ்ந்துள்ளது. சூதாட்டத்தில் தொடர்புள்ளதாகக் கண்டுபிடிக்கப்படும் வீரர்களுக்கு மத்திய அரசு ஆயுள் தடை விதிக்கும். தவறுகள் நடக்கும்போது கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயல்பாடுகளில் தலையிட மத்திய அரசுக்கு உரிமை உண்டு என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் தின்சா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வருமான வரி ஏய்ப்புக் குற்றங்களுக்காக அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளதால் கிரிக்கெட் வீரர்கள் கலங்கிப் போயுள்ளனர்.

ஜடேஜாவின் அரசியல் தொடர்புகள், அவரது காதலி அதிதி வீட்டில் நடத்தப்பட்ட சோதனைகளும் பரபரப்பூட்டியுள்ளன.

சோதனைகளிலிருந்து, கிரிக்கெட் வீரர்கள் ஏராளமான கணக்கில் வராத சொத்துக்களை வைத்திருந்ததும், ஆடம்பரமான வாழ்க்கை மேற்கொண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. ஆனால், வீரர்களுக்கும் சூதாட்டத் தரகர்களுக்குமிடையேயான உறவுகள் குறித்து சந்தேகத்திற்கிடமில்லாத வகையில் உறுதியான ஆதாரங்கள் சிக்கியுள்ளனவா என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள்தான் தெளிவுபடுத்த வேண்டும். சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், நயன் மோங்கியா போன்ற பிரபல வீரர்களுக்கு சோதனையிலிருந்து விலக்களிக்கப்பட்டிருப்பது குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

நமது வீரர்கள் காசு வாங்கிக் கொண்டுதான் தோற்க வேண்டுமா? அதை நம்ப முடியாது என்கிறார் வீரர்களின் திறமையை! நன்கறிந்த விமர்சகர் ஒருவர்.

அதிரடிச் சோதனையை இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஏ.சி. முத்தையா வரவேற்றுள்ளார். ''சூதாட்டம் குறித்த ஆதாரங்களைத் திரட்ட இந்தச் சோதனை அவசியமானதே. கிரிக்கெட்டுக்கு நேர்ந்துள்ள களங்கத்தைப் போக்குவது மிக முக்கியமானது. குற்றம் புரிந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். அதேசமயம் அப்பாவிகள் பாதிக்கப்படக்கூடாது. வாரியத்தின் செயல்பாடு வெளிப்படையானது'' என்கிறார் முத்தையா.

செய்தி ஊடகங்களும் பரபரப்புக்காக ப் பிரச்சினையைப் பெரிதுபடுத்துகின்றன. கிரிக்கெட் வீரர்களைக் கதாநாயக அந்தஸ்துக்கு உயர்த்திய கைங்கர்யமும் இந்த ஊடகங்கள் செய்த வேலைதானே. எனவே உண்மை முழுமையாக வெளியாகும்வரைப் பொறுத்திருந்து பார்ப்பதே பொருத்தமாயிருக்கும் என்கிறார் ஒரு கிரிக்கெட் ஆர்வலர்.

வாரியத் தலைவர் முத்தையா கூறியது போல், அப்பாவிகள் பாதிக்கப்படாமல், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமுமாகும்.

சூதாட்டம் என்ற நஞ்சு வீரர்களுக்கு மேலும் பரவாதிருக்க நடத்தை நெறிகளை, வாரியம் விரைவில் வகுப்பதும் அதன் தலையாய கடமையாக அமைந்துள்ளது.

சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் விரைவாகச் செயலாற்றிக் கிரிக்கெட் மீது படிந்துவிட்ட களங்கத்தை அகற்றியாக வேண்டும்.

(ஆறாம்திணை இணைய இதழில் எழுதியது)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக