சனி, 30 அக்டோபர், 2010

இந்திய அணியில் புதுமுகம் புஜாரா

ஆஸ்திரேலியாவுடன் டெஸ்ட் தொடரில் மோதவுள்ள இந்திய அணியில் புதுமுக வீரராக இடம் பிடித்திருக்கிறார் 22 வயது செதேஷ்வர் புஜாரா. பார்மில் இல்லாத ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கை அதிரடியாக நீக்கிவிட்டு புஜாராவுக்கு கை கொடுத்திருக்கிறது தேர்வுக் குழு. இதுவே கொஞ்சம் லேட் என்றுதான் தோன்றுகிறது.
பேட்டிங் பாணியில் அப்படியே ராகுல் டிராவிட்டை நினைவூட்டுகிறது இந்த சவுராஷ்டிர சுவர்! 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் பரோடாவுக்கு எதிராக முச்சதம், 2006 இளைஞர் உலக கோப்பையில் அதிக ரன் குவிப்பு, இங்கிலாந்து யு19 அணிக்கு எதிராக இரட்டை சதம், ஒரே மாதத்தில் மூன்று முச்சதங்கள் (2008-2009) என்று தேர்வுக் குழுவினரை திக்குமுக்காட வைத்துதான் இந்திய அணியில் இடம் பிடித்திருக்கிறார்.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பிறந்தவர் (1988, ஜன.25). அப்பா அரவிந்த் புஜாரா ரஞ்சி போட்டியில் விளையாடியிருக்கிறார். இவரது பயிற்சியில்தான் புஜாராவின் கிரிக்கெட் திறமை மெருகேறியிருக்கிறது. தாத்தா ஷிவ்லால், சித்தப்பா பிபின் ஆகியோரும் கிரிக்கெட் வீரர்கள்தான். சிறு வயதில் இருந்தே சவுராஷ்டிர அணியில் நிரந்தர இடம் பிடித்துவிட்ட புஜாரா இந்தியா ஏ, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.
‘இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மறைந்த என் தாயின் கனவு இன்று நனவாகி இருக்கிறது. பலமான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாட தேர்வு செய்யப்பட்டுள்ளது தன்னம்பிக்கையை அதிகரித்திருக்கிறது. சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பேன்’ என்கிறார் புஜாரா. புற்றுநோயால் அவதிப்பட்ட அம்மா ரீனா, கடந்த 2005 அக்டோபரில் இறந்தபோது புஜாரா பாவ்நகரில் ஒரு போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தார். இந்திய அணிக்கு செலக்ட் ஆனதைக் கொண்டாட அம்மா இல்லாததில் புஜாராவுக்கு ரொம்பவே வருத்தம்.
அனுபவ வீரர்கள் சச்சின், டிராவிட், லஷ்மண் ஆகியோர் விரைவில் ஓய்வு பெறுவது காலத்தின் கட்டாயம் என்பதால், டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் நடுவரிசையை பலப்படுத்துவதில் புஜாராவுக்கு மிகப் பெரிய பொறுப்பு காத்திருக்கிறது. நீண்ட நேரம் களத்தில் நிற்பதும், நாள் கணக்கில் பேட் செய்வதும் இவருக்கு சகஜமான விஷயம். சரியான நேரத்தில் அணியில் இடம் பிடித்துள்ள இவர், லாராவின் 400 ரன் சாதனையை சமன் செய்யும் அளவுக்கு திறமையானவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அறிமுகமாகும் அரிய வாய்ப்பை பெற்றுள்ள இவர், அந்த கடுமையான சவாலை சமாளித்து திறமையை நிரூபிக்க வாழ்த்துவோம்.
பா.சங்கர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக