சனி, 30 அக்டோபர், 2010

சத்தமில்லாமல் ஒரு இந்திய சாதனை

கோடிக்கணக்கான ந்திய ரசிகர்கள், மோசமான தலைவனின் கீழ் மூழ்கிக் கொண்டிருக்கும் இந்தியக் கப்பலைக் (டைட்டானிக்?) கிரிக்கெட் உலகக் கோப்பையில் பார்த்து கைகைளைப் பிசைந்து கொண்டிருக்க, டென்னிஸ் உலகில் ஆரவாரமின்றி இந்திய இணை வெற்றிக் கொடி கட்டியிருக்கிறது. மகத்தான போட்டிகளாகக் கருதப்படும் 'கிராண்ட் ஸ்லாம்' டென்னிஸ் போட்டி ஒன்றில் இந்திய இணை முதல்பரிசை வெல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை மண்ணில் தவழ்ந்து விளையாடிய பயஸ், பூபதி இருவரும் இதற்கு முன்பு நான்கு முறை அரை இறுதிப் போட்டிக்குத் (கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில்) தகுதி பெற்றிருந்தாலும் வெற்றி அவர்களுக்கு வசப்படாமல் விளையாட்டுக் காட்டி வந்தது. இடையில் லியாண்டர், மகேஷ் இருவருக்கும் இடையே பிணக்கு ஏற்பட்டு உறவு முறிந்துவிடும் என்று வதந்தி பரவியது.

'அது காதலர்களுக்கிடையே ஏற்பட்ட சிறு ஊடல் போன்றதே, எங்கள் உறவு மற்றெப்போதையும் விட வலுவாக உள்ளது. மேலும் பல வெற்றிகளைக் குவிப்போம்' என்று இந்த ஆண்டின் துவக்கத்தில் இந்த இணை ரசிகர்களுக்கு உறுதியளித்தது. அந்த உறுதியைக் காப்பாற்றும் விதமாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் துவக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடிய பயஸ் - பூபதி இணை, ஆடவர்  இரட்டையர் போட்டியின் இறுதி ஆட்டத்தில் குரோஷியாவின் கோரன் இவானிசெவிக், அமெரிக்காவின் ஜெப் தராங்கோ ஜோடியை வீழ்த்தி சாதனை படைத்தது.

6-2, 7-5 என்ற நேர் செட்களில் எதிரணியை வீழ்த்திய இந்திய வீரர்கள் டென்னிஸ் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மகத்தான சாதனையை நிகழ்த்தினர்.

இந்த வெற்றி இரட்டையர் தர வரிசையில் இந்திய ணையை முதலாம் இடத்துக்கு உயர்த்தியிருப்பதோடு தனிநபர் தர வரிசையில் பூபதிக்கு முதலிடத்தையும் பயஸுக்கு இரண்டாம் இடத்தையும் பெற்றுத் தந்துள்ளது.

கடந்த ஏழு கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஆறு முறை இந்திய இணை அரை இறுதிக்குத் தகுதி பெற்றிருந்தாலும் ஒருமுறை மட்டுமே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இந்த வருடம் (1999) ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் நடை பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது பூபதி, பயஸ் ஜோடி. ஆனால் மிகப் பரபரப்பாக நடைபெற்ற அப்போட்டியில் ஐந்து செட் வரை கடுமையாகப் போராடி மயிரிழையில் வெற்றியை நழுவவிட்டார்கள். இது அவர்களுக்கும், இந்திய டென்னிஸ் ரசிகர்களுக்கும் பெருத்த ஏமாற்றமாக அமைந்தது.

பூபதிக்குக் காலில் ஏற்பட்ட காயமும், லியாண்டருக்கு ஏற்பட்ட வைரஸ் நோய்க் கிருமித் தாக்குதலும் சில போட்டிகளைக் கைவிடும்படி செய்தன.

ஏப்ரல் மாதம் சென்னையில் நடைபெற்ற கோல்டு ஃபிளேக் ஓபன் போட்டியில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இரட்டையர் பிரிவில் பூபதியும், லியாண்டர் பயஸும் இதுவரை 13 ஏ.டி.பி. கோப்பைகளையும் ஒரு கிராண்ட் ஸ்லாம் கோப்பையையும் கைப்பற்றியுள்ளனர்.

இவர்கள் இருவரும் இணை பிரியாது தொடர்ந்து விளையாடி மேலும் பல இரட்டையர் போட்டிகளை வென்று கோப்பைகளைக் கைப்பற்ற வேண்டும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

புகழ்பெற்ற மார்க் உட்போர்டு, டாட் உட்பிரிட்ஜ் இணை ஒன்பது கிராண்ட் ஸ்லாம் கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளது.

ஜான் மெக்கன்ரோ, ஃபிளெமிங் இணை ஏழு கோப்பைகளுடன் இரண்டாம் இடம் பிடிக்கிறது. இந்த சாதனைகளை இந்திய இணை முறியடிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்குத் தரப்படும் முக்கியத்துவமும், ஆதரவும், விளம்பரமும் மற்ற விளையாட்டுகளுக்கும் தரப்படுமானால் உலக அளவில் இந்திய வீரர்கள் ஜொலிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதியின் சரித்திரச் சாதனைக்குப் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. ''உங்கள் வெற்றி இந்தியாவைப் பெருமை கொள்ளச் செய்திருக்கிறது, வாழ்த்துக்கள்" , என்று பிரதமர் வாஜ்பாய் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். பயஸ், பூபதி இணை மேன்மேலும் சிறப்பான வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துவோம்.

உலகக் கோப்பைப் போட்டிகளில் இந்தியாவின் தோல்விகள் நம்மை வருத்தம் கொள்ள வைத்தாலும் ,டென்னிஸில் கிடைத்திருக்கும் இந்த வெற்றி மீண்டும் நம்மை நெஞ்சை நிமிர்த்திப் பெருமிதம் கொள்ள வைத்திருக்கிறது

பா. சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக