சனி, 30 அக்டோபர், 2010

டபுள்ஸ் தில்லாலங்கடி ஜ்வாலா கட்டா

எட்டு முறை தேசிய பேட்மிண்டன் மகளிர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற வீராங்கனை ஜ்வாலா கட்டா என்றால் கூட பலருக்கு தெரியாது. இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டனும் காங்கிரஸ் எம்.பி.யுமான அசாரருதீன் தனது 2வது மனைவி நடிகை சங்கீதா பிஜ்லானியை விவாகரத்து செய்துவிட்டு, ஜ்வாலா கட்டாவை மணக்கப் போகிறார் என்று கடந்த வாரம் புகையத் தொடங்கி ஜுவாலை விட்டெரிந்தது. ‘ஜ்வாலா எனது நல்ல நண்பர், அதற்கு மேல் எங்களுக்குள் எதுவும் இல்லை. பேட்மிண்டன் சங்க தேர்தலில் நான் நிற்பது பிடிக்காத சில நிர்வாகிகள்தான் இப்படி கிளப்பிவிட்டிருக்கிறார்கள்’ என்கிறார் அசார்.
இந்த புரளியால் ஜ்வாலா கட்டாவும் செம அப்செட். இந்த கலாட்டாவுக்கு அப்புறம்தான் கட்டா யார்? என்ற ஆர்வம் பல லட்சம் இந்தியர்களை இண்டர்நெட்டில் தேட வைத்திருக்கிறது. சர்ச் என்ஜினில் ஜே…டபுள்யூ என்று தட்டினாலே ஜ்வாலா கட்டா என்று வரும் அளவுக்கு பேமஸ் ஆகிவிட்டார். சானியா, சாய்னாவை தந்த அதே புண்ணிய பூமி ஐதராபாத்தான் இந்த 26 வயது தேவதைக்கும் சொந்த ஊர். 1983 செப்டம்பர் 7ல் பிறந்தவர்.
தந்தை இந்தியர், தாய் சீன இறக்குமதி. இவரது தாத்தா மகாத்மா காந்தியுடன் சேவாஸ்ரமத்தில் தங்கியிருந்து அவரது வாழ்க்கை வரலாற்றையும் பிற படைப்புகளையும் சீன மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார். கொஞ்சம் உற்றுப் பார்த்தால் ஜ்வாலா முகத்தில் ஒளிந்திருக்கும் சீன களை தெளிவாகத் தெரியும்.
பத்து வயதில் பேட்மிண்டன் பயிற்சியை ஆரம்பித்தவர், மூன்றே ஆண்டுகளில் மினி நேஷனல் சாம்பியன். புத்தாயிரமாவது ஆண்டில் தேசிய ஜூனியர் சாம்பியன் பட்டம் வென்றபோது ஜ்வாலாவின் வயது 17. அதே ஆண்டில் ஸ்ருதி குரியனுடன் இணைந்து ஜூனியர் மற்றும் சீனியர் இரட்டையர் பிரிவில் தேசிய சாம்பியன் பட்டம். டென்னிசில் பயஸ், பூபதி மாதிரி பேட்மிண்டனில் ஜ்வாலா டபுள்ஸ் ஸ்பெஷலிஸ்ட். தொடர்ச்சியாக 8 ஆண்டுகள் மகளிர் இரட்டையர் பிரிவில் தேசிய சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார். சாய்னாவின் பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த்துடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவிலும் கலக்கியிருக்கிறார். கோபிசந்த்துக்குப் பிறகு லலியவீட்டில் திஜுவுடன் இணைந்து இவரது டபுள்ஸ் வெற்றிப் பயணம் தொடர்கிறது.
சர்வதேச கிராண்ட் பிரீ பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய ஜோடி இது. கடந்த ஆண்டு டிசம்பரில், மலேசியாவில் நடந்த சூப்பர் சீரீஸ் மாஸ்டர்ஸ் போட்டியின் பைனலுக்கு முன்னேறியது திஜு – கட்டா ஜோடியின் சூப்பர் சாதனை.
தேசிய பேட்மிண்டன் சாம்பியனும் அர்ஜுனா விருது பெற்றவருமான சேத்தன் ஆனந்த், ஜ்வாலாவின் காதல் கணவர். இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாகவும் ஒரு தகவல் உலவிக் கொண்டிருக்கிறது. ’இதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்க எனக்கு நேரமில்லை. காமன்வெல்த் போட்டியில் தங்கம் அள்ள வேண்டும் என்பதில் மட்டுமே கவனம்’ என்கிறார் கட்டா. பதக்கத்துடன் போஸ் கொடுத்தால் இதே பக்கத்தில் ’கட்டா’யம் போட்டுவிடுவோம்.  

பா.சங்கர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக