சனி, 30 அக்டோபர், 2010

சண்டை… சச்சரவு… செக்ஸ்…

திணறும் இந்திய ஹாக்கி

ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை குத்தகைக்கு எடுத்திருந்த காலமெல்லாம் மலையேறிப் போய் நிர்வாகத்தில் கோஷ்டி மோதல், நடுவரின் மண்டை உடைப்பு, பயிற்சியாளர் மீது செக்ஸ் புகார், அழகிகளுடன் உல்லாசமாக இருந்த வீடியோகிராபர் டிஸ்மிஸ்...என்று இந்திய ஹாக்கியின் அந்தஸ்து அதளபாதாளத்தில் விழுந்து கிடக்கிறது.
வீரர்களை அணியில் சேர்க்க பல லட்சம் லஞ்சம் வாங்கியதாக வீடியோ ஆதாரம் வெளியானதால் இந்திய ஹாக்கி கூட்டமைப்பு கூண்டோடு கலைக்கப்பட்டு  ஹாக்கி இந்தியா என்ற புதிய அமைப்பின் கீழ் இடைக்கால நிர்வாகம் ஏதோ உருட்டிக் கொண்டிருக்கிறது. இதன் நிர்வாக பதவிகளுக்கான தேர்தலில் அரசியல் சூடு பறக்கும் நிலையில், கடந்த வாரம் இந்திய ஹாக்கிக்கு சபிக்கப்பட்ட வாரமாக அமைந்துவிட்டது.

ஜூலை 19: போபாலில் தேசிய சீனியர் ஹாக்கி போட்டி. மூன்றாவது இடத்துக்கு தமிழகம் - சண்டிகர் அணிகள் மோதிய ஆட்டம். மைதானத்துக்கு வெளியே வீரர்கள் அமரும்டக் அவுட்கூடாரத்தை இடமாற்றம் செய்வதில் தமிழக வீரர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே எழுந்த வாக்குவாதம் களேபரமாகி கைகலப்பில் முடிய, போட்டி தாமதமாகத் தொடங்கியது. இப்போட்டியில் தமிழகம் 3-2 என்ற கோல் கணக்கில் வென்று வெண்கலப் பதக்கம் வென்றது. மைதானத்துக்கு வெளியே நடந்த மோதலுக்காக தமிழ்நாடு அணி கேப்டனும் ஒலிம்பியனுமான ஆடம் சின்க்ளேர் அடுத்த ஆண்டுக்கான தேசிய போட்டியில் களமிறங்கத் தடை விதிக்கப்பட்டது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே, அடுத்த அதிர்ச்சி செய்தி சென்னையில் இருந்து.

சென்னையில் நடக்கும் முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி போட்டியில், ஓஎன்ஜிசி - ஆர்மி லெவன் அணிகள் மோதிய லீக் ஆட்டம். தமிழகத்தை சேர்ந்த நடுவர் சூரியபிரகாஷ் ஆர்மி வீரருக்கு 2 பச்சை அட்டைகளை காண்பிக்க சர்ச்சை ஆரம்பம். ஆர்மி வீரர்கள் நடுவரை சூழ்ந்து கொண்டு காரசாரமாக வாக்குவாதம் செய்த நிலையில், சூர்யபிரகாஷ் மண்டையில் ஹாக்கி மட்டையால் ஓங்கி அடித்தார் சுனில் எக்கா. இவர் இந்திய அணிக்காக விளையாடிய வீரர். ரத்தம் சொட்டச் சொட்ட மயங்கி விழுந்த நடுவருக்கு 20 தையல் போட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. முருகப்பா போட்டியில் இருந்து எக்கா உடனடியாக நீக்கப்பட்டார். ஹாக்கி போட்டிகளில் விளையாட அவருக்கு 6 மாத தடை விதிக்கப்பட்டது.
ஜூலை 20: மீடியாக்கள் இந்த செய்திகளை பரபரப்பாக போட்டு அடித்து ஓய்வதற்குள்ளாகவே அடுத்த குண்டு மகளிர் ஹாக்கி அணி தரப்பில் இருந்து வீசப்பட்டது. சமீபத்தில் மகளிர் அணி சீனா மற்றும் கனடாவில் சுற்றுப்பயணம் செய்தது. இந்த தொடர்களின்போது, அணியின் அதிகாரப்பூர்வ வீடியோ பதிவாளர் பசவராஜ் விபசார அழகிகளுடன் உல்லாசமாக இருந்த புகைப்படங்களுடன், பயிற்சியாளர் கவுஷிக் வீராங்கனைகளுக்கு செக்ஸ் தொந்தரவு கொடுப்பதாக புகார் கடிதமும் இணைக்கப்பட்டு ஹாக்கி இந்தியா நிர்வாகத்துக்கு வந்த இ-மெயில் பூதாகரமாக வெடித்தது.
பாலியல் புகார் சர்ச்சையை விசாரிக்க 4 நபர் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. வீடியோகிராபர் பசவராஜ் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார். பதவி விலகுவதாக அறிவித்த பயிற்சியாளர் எம்.கே.கவுஷிக், ‘எனக்கு எதிராக பெரிய அளவில் சதி நடக்கிறது. அணியில் இடம்பெற முடியாத சில வீராங்கனைகள் வேண்டுமென்றே செக்ஸ்புகார் கூறியுள்ளனர். நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன்’ என்று சொல்லியிருக்கிறார்.
முப்பதுக்கும் மேற்பட்ட வீராங்கனைகள் ஒன்றாக பொய் சொல்லுவார்களா? பயிற்சியாளர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர், வீராங்கனைகள் வலியுறுத்தியுள்ளனர். 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து எழுந்த சர்ச்சைகளால் இந்திய ஹாக்கி தலை குனிந்து நிற்க, கவுரவம் தரைமட்டமாகி தவழ்ந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபி போட்டியை இந்தியாவில் நடத்த (2011, டிசம்பர்) சர்வதேச ஹாக்கி சம்மேளனம் அனுமதித்துள்ளது. அதற்குள்ளாகவாவது இந்திய ஹாக்கி நிர்வாகத்தை சீர்படுத்தி,
கறுப்பு ஆடுகளை களபலி கொடுத்து சாப விமோசனம் பெற வேண்டும். செய்வார்களா?

பா.சங்கர்  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக