வெள்ளி, 29 அக்டோபர், 2010

தமிழ் கனவு

உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் சமர்ப்பிக்க தங்கள் ஆய்வுக் கட்டுரை தெரிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தங்கள் படைப்பை தெளிவாகவும், குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாகவும் வழங்க ஆயத்தமாக வருமாறு கேட்டுக் கொள்கிறோம். நன்றி, வாழ்த்துக்கள். இப்படிக்கு, செம்மொழி மாநாட்டுக் குழு…
விரைவு அஞ்சலில் வந்த கடிதத்தை படித்தவுடன் தலை கால் புரியவில்லை.  தயார் செய்து வைத்திருந்த கட்டுரையை மறுபடி ஒரு முறை படிக்க ஆரம்பித்தேன். ஆங்கிலத்தில் இருப்பது போல, வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை சேர்த்து சுருக்கமான புதிய வார்த்தையாகப் பயன்படுத்துவது தமிழில் மிகவும் குறைவாகவே உள்ளது. பெரும்பாலும் கட்சிகளின் பெயர்களைத்தான் அப்படி பயன்படுத்தி வருகிறோம்.
இந்த வழக்கம் தமிழுக்குப் புதிது இல்லை. ஏற்கனவே பல வார்த்தைகள் இப்படி உருவாக்கப்பட்டு, காலப்போக்கில் மருவி பொருளற்ற வார்த்தைகளாக அல்லது தவறான அர்த்தத்தில் கையாளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆங்கிலத்தில் புதிய வார்த்தைகளை உருவாக்குவதும், அவற்றை உடனடியாக அகராதியில் இணைப்பதும் இடைவிடாது நடந்து கொண்டேயிருக்கிறது. குறிப்பாக அறிவியல் துறையில்.
தமிழில் இத்தகைய முயற்சிகள் அறவே இல்லை என்று சொல்ல முடியாது என்றாலும் மிகக் குறைவு என்பதை மறுக்கவும் முடியாது. வார்த்தைகளின் முதல் எழுத்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ் வார்த்தை… யோசிக்க ஆரம்பித்தபோது சென்னை தமிழுக்கே உரிய வசை வார்த்தைகளான சோமாரி, பேமானி, கைதே… ஞாபகத்துக்கு வந்தன. இவை முதல் எழுத்துக்களின் கோர்வையாக ஏன் இருக்கக் கூடாது?
சொல் மாறிப் பேசும் நபரைக் குறிப்பிடும் வகையில் சொ.மாறி என்று சுருக்கமாகக் கூறி வந்ததுதான் இப்போது சோமாரியாகி இருக்க வேண்டும். பெரிய மனுஷனா நீ என்பதையே பெ.ம.நீ. என்று சுருக்க அதை பேமானியாக்கி விட்டோம். கைதே என்பது கழுதையின் சுருக்கம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். கஞ்சத்தனமான நபரை குறிப்பிடும் வகையில் கையிலிருந்து எதுவும் தேறாது என்பதை கை.எ.தே. என்று உருவாக்கி பயன்படுத்தியது இன்று கைதே என மாறிவிட்டதோ? சோமாரி, பேமானி எல்லாம் அழகிய தமிழ் வார்த்தைகள் என்றால் யாராவது நம்புவார்களா? ஆனால், அவை நம் முன்னோர்கள் உருவாக்கிய அருமையான பொருள் பொதிந்த வார்த்தைகள் என்பதில் சந்தேகமே இல்லை.
இதில் இன்னும் தீவிரமாக ஆய்வு செய்வதுடன் இப்படியான புதிய வார்த்தை உருவாக்கத்தில் கவனம் செலுத்துவது செம்மொழியான தமிழுக்கு நாம் செய்யும் உண்மையான தொண்டாக அமையும். கட்டுரையை நிறைவு செய்ததும் கூடியிருந்த அறிஞர் பெருமக்கள் எல்லாம் எழுந்து நின்று கரவொலி எழுப்பி பாராட்ட மகிழ்ச்சியில் திக்குமுக்காடி…
என்னங்ககக… மனைவியின் குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தேன். காலங் கார்த்தாலே இப்படி பகல் கனவு கண்டுகிட்டிருந்தா என்ன அர்த்தம். பையனுக்கு ஸ்கூல் பீஸ் கட்ட இன்னிக்குதான் கடைசி நாள். இப்ப போனாத்தான் மதிய சாப்பாட்டுக்காவது வர முடியும். அவள் பேசிக்கொண்டே போக…முகத்தை கழுவி துடைத்துக் கொண்டு கிளம்பினேன்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக