சனி, 30 அக்டோபர், 2010

நிர்வாணமாக ஓடுவாரா? ரசிகர்கள் ஆர்வம்

உலக கோப்பை கிளைமாக்சை நெருங்கிக் கொண்டிருக்கிறது. புதிய சாம்பியன் யார் என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும். இரண்டாவது சுற்று வரை தென் அமெரிக்க நாடுகளின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. ஸ்பெயின், நெதர்லாந்து, கானா என மூன்று அணிகள் மட்டுமே மற்ற கண்டங்களில் இருந்து தப்பிப் பிழைத்திருந்தன.

பராகுவே அணி முதல் முறையாக கால் இறுதிக்குள் அடியெடுத்து வைத்த மகிழ்ச்சியில் ரொம்பவே அலட்டிக் கொண்டிருந்தது. பெனால்டி ஷூட்  அவுட்டில் பராகுவேயிடம் கோட்டை விட்ட ஜப்பான் வீரர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. பராகுவே அணியை விட, அந்த நாட்டு ரசிகையும் சூப்பர் மாடலுமான லரிஸா ரிகெல்மேதான் இன்றைக்கு பட்டி தொட்டியெல்லாம் பேமஸ். இந்த ஐஸ்கிரீம் அழகியின் அமர்க்களமான போஸ்கள் அலங்கரிக்காத பத்திரிகை, இணையதளமே இல்லை. எல்லோரும் போட்டுவிட்டார்கள் என்பதற்காக நாம் போடாமல் இருந்தால் ரசிகர்களின் சாபத்துக்கு ஆளாக நேரிடும் என்பது எங்களுக்குத் தெரியாதா? இவரது செல் போன் ஸ்டாண்ட்தான் டாக் ஆப் தி வேர்ல்டு கப். பராகுவே அணி கோப்பையை ஜெயித்தால் ஆடைகளைக் களைந்து அம்மணமாக ஓடுவேன் என்ற அம்மணியின் அறிக்கை உலக ரசிகர்களை உண்டு இல்லை என்றாக்கிக் கொண்டிருக்கிறது. அடுத்த படத்துக்கு இவரை புக் பண்ணலாமா? என்று கோலிவுட் இயக்குனர்கள் ரூம் போட்டு யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அர்ஜெண்டினா ஜெயித்தால் தலைநகர் பியூனஸ் அயர்ஸ் வீதிகளில் நிர்வாணமாக ஓடுவேன் என்று பயிற்சியாளர் மரடோனா ஏற்கனவே சபதம் செய்திருந்தார்.

அப்படியெல்லாம் நடக்காது, பயப்படாதீர்கள். கால் இறுதியில் ஜெர்மனிதான் ஜெயிக்கும்’ என்று ஆக்டோபஸ் ஜோசியர் திருவாளர் பால் அவர்கள் அருள் வாக்கு கூற ஜெர்மனி ரசிகர்கள் கற்பனையில் மிதந்தனர். முடிவு என்னாயிற்று என்பது இந்நேரம் தெரிந்துவிட்டிருக்கும். ஆக்டோபஸை எங்கே வாங்கலாம்? வளர்ப்பது எப்படி என்று நம்மூர் ஜோசியக்காரர்கள் வலையில் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

+ இங்கிலாந்து வீரர் லம்பார்டு அடித்த கோலை அனுமதிக்காத நடுவரும், அர்ஜெண்டினா வீரர் டெவேஸ் அடித்த ஆப்-சைடு கோலை அனுமதித்த நடுவரும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். கிரிக்கெட், டென்னிஸ் போல டிவி ரீப்ளே தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஆவேசமாக நிராகரித்த ‘பிபா’ தலைவர் செப் பிளாட்டர் அந்தர் பல்டி அடித்து அடுத்த உலக கோப்பைக்கு பரிசீலிக்கிறோம் என்று இறங்கி வந்ததுடன், நடுவர்களின் தவறுகளுக்காக மன்னிப்பு கேட்டார். ஒவ்வொரு தவறுக்கும் 50 கசையடி கொடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட அணிகளின் ரசிகர்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட நடுவர்களுக்கு எக்ஸ் ஒய் இஸட் என எல்லா பிரிவு பாதுகாப்பும் போடப்பட்டிருக்கிறது.

+ உலக கோப்பை தோல்வியால் உருண்டு கொண்டிருக்கும் தலைகளும் ஏராளம். தோற்ற அணிகளின் பயிற்சியாளர்கள் ராஜினாமா கடிதத்தை ரெடியாக வைத்திருக்கிறார்கள். தோல்விக்கான காரணங்கள் பற்றி விசாரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட அமைக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் ஜப்பான் வீரர்கள் கொடுத்து வைத்தவர்கள். பராகுவேயிடம் பெனால்டியில் கோட்டைவிட்டாலும், எதிர்பார்த்ததற்கு மேலாகவே அபாரமாக விளையாடி அசத்திய வீரர்களை ஜப்பான் ரசிகர்கள் சிவப்புக் கம்பளம் விரித்து ராஜ வரவேற்பு கொடுத்ததில் உச்சி குளிர்ந்து போயுள்ளனர்.  

+ ஆட்டங்களின் நெருக்கடியால் ஏற்படும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட, வீரர்கள் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்று பிரேசில், அர்ஜெண்டினா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற அணிகளின் பயிற்சியாளர்கள் அனுமதி கொடுத்திருந்தனர். மனைவி, கேர்ள் பிரண்டு என்று கூட்டி வந்திருந்த வீரர்கள் குஷியாக என்ஜாய் செய்தார்கள். போட்டிக்கு முன்பாக செக்ஸ் என்பது காலம் காலமாகவே சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்த விஷயத்தில் ஆதரவும் எதிர்ப்பும் 50/50 தான்.
‘போட்டிக்கு முன் தினம் இரவு பார்ட்னரோடு ரிலாக்சாக இருந்தால், விளையாடும்போது அப்படியே பறக்கிற மாதிரி இருக்கும். அது இல்லாவிட்டால் ஏதோ ஒன்று குறைந்த பீலிங்’ என்று அலுத்துக் கொள்கிறார் பிரேசில் முன்னாள் நட்சத்திரம் ரொமாரியோ. 1994ல் எங்கள் அணி கோப்பையை வென்றதற்கே இதுதான் முக்கிய காரணம் என்று ரகசியத்தை உடைக்கிறார் பிரான்கோ. நம்ம கிரிக்கெட் அணி பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனும் இதே போன்ற ஆலோசனைகளை வழங்கியதற்காக வாங்கிக் கட்டிக் கொண்டது ஞாபகத்துக்கு வருகிறது.
அரை இறுதி அமர்க்களம் முடிந்து பைனலில் கால்கலக்கப் போகும் அணிகள் எவை என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும். அது வரை கோப்பை யாருக்கு? கோல்டன் ஷூ யாருக்கு? என்று கணக்குப் போட்டுக் கொண்டே இருங்கள்.

பா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக