சனி, 30 அக்டோபர், 2010

இந்தியா ----------- பாகிஸ்தான்… ஒரு டென்னிஸ் பாலம்

எந்த விளையாட்டில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதினாலும் ஜென்ம விரோதிகள் மோதும் ஆட்டமாக வர்ணித்து உலகமே பரபரப்பாக எதிர்பார்ப்பது வழக்கம். கென்யா, ஜிம்பாப்வே போன்ற மொக்கை அணிகளிடம் மண்ணைக் கவ்வினால் கூட மன்னித்து விடுவார்கள். இந்தியா – பாகிஸ்தான் மோதலில்… தோற்கும் அணிக்கு ரசிகர்களின் ஸ்பெஷல் ‘கவனிப்பு’ நிச்சயம். இப்படி எல்லா விஷயத்திலும் டாம் அண்ட் ஜெர்ரியாக இருக்கும் இரு நாடுகளை சேர்ந்த இரண்டு வீரர்கள் இணைந்து டென்னிஸ் அரங்கில் வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கியிருப்பது உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்தியாவின் ரோகன் போபண்ணா – பாகிஸ்தானின் அய்சம் அல் குரேஷி ஜோடி, கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து விளையாடி வருகிறது. தென் ஆப்ரிக்காவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த ஏடிபி டென்னிஸ் போட்டியில் போபண்ணா – குரேஷி ஜோடி பட்டம் வென்றபோது எல்லோருமே அதிசயித்தனர். தொடர்ந்து பல போட்டிகளில் கால் இறுதி, அரை இறுதி வரை முன்னேறியதை அடுத்து, இந்த ஜோடி மீதான கவனம் அதிகரித்தது.
சமீபத்தில் நடந்த யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி ஜோடிகள் கூட ஓரம்கட்டி ஒதுங்கிக் கொள்ள, போபண்ணா – குரேஷி ஜோடி பைனலுக்கு முன்னேறியபோது பரபரப்பு பற்றிக் கொண்டது. இறுதிப் போட்டியைக் காண இரு நாட்டு தூதர்களும் ஆஜர். துரதிர்ஷ்டவசமாக, நம்பர் 1 ஜோடியான பாப் பிரையன் – மைக் பிரையன் சகோதரர்களிடம் போபண்ணா ஜோடி போராடி தோற்றாலும், ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெறத் தவறவில்லை.
இவர்கள் ஜோடி சேர்ந்து விளையாடுவதற்கு சில எதிர்ப்புக் குரல்கள் எழுந்தாலும், எதைப்பற்றியும் கவலைப்படாமல் ‘எங்கள் 10 ஆண்டு கால நட்பு தொடரும். விரைவில் உலகின் நம்பர் 1 ஜோடியாகி அசத்துவோம்’ என்கிறார்கள் ஒரே குரலில். யுஎஸ் ஓபன் பைனலுக்கு முன்னேறியதால், உலக தரவரிசையில் 6வது இடத்துக்கு எகிறியிருக்கிறது இந்த ஜோடி.
‘’விளையாட்டின் மூலமாக நட்பு, அமைதி, சகோதரத்துவத்தை வளர்க்க முயற்சிக்கிறோம். எந்த அரசியல் காரணங்களையும் நாங்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. நாங்கள் இணைந்து விளையாடுவதைப் போல இரு நாட்டு மக்களும் ஒற்றுமையாக இருக்க முடியாதா என்ன?” என்று நம்பிக்கையுடன் கேட்கிறார் குரேஷி.
பெங்களூரில் பிறந்த போபண்ணாவும் லாகூரில் பிறந்த குரேஷியும் இணைந்து கட்டியிருக்கும் இந்த டென்னிஸ் பாலம் உறுதியாக நிலைத்து நிற்க வாழ்த்துவோம்.
பா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக