ஜூன் 2010… இந்திய பேட்மிண்டன் வரலாற்றில் மறக்க முடியாத மாதம். தொடர்ச்சியாக மூன்று ஞாயிற்றுக் கிழமைகள்; இந்தியன் ஓபன், சிங்கப்பூர் ஓபன், இந்தோனேசிய ஓபன் என்று மூன்று சர்வதேச போட்டிகளில் இந்திய வீராங்கனை சாய்னா நெஹ்வால் சாம்பியன் பட்டங்களை வென்று ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்திருக்கிறார்.
விம்பிள்டனில் சானியா ஏமாற்றினாலும், இந்தோனேசியாவில் இந்தியக் கொடியை உயர்த்திப் பிடித்து ஈடுகட்டியது இந்த சக ஐதராபாத் தேவதை. 1980ல் ஸ்வீடிஷ் ஓபன், டேனிஷ் ஓபன், ஆல் இங்லேண்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக வென்று உலகின் நம்பர் 1 வீரராக பிரகாஷ் படுகோன் அசத்தியிருந்தார்.
அதற்கு இணையானதொரு அஸ்வமேத யாகத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டியிருக்கும் சாய்னா, உலக அளவில் 3வது ரேங்க்கை எட்டிப் பிடித்திருக்கிறார். சாய்னாவின் எழுச்சியால், இதுவரை ஆதிக்கம் செலுத்தி வந்த சீன வீராங்கனைகளின் சப்பை மூக்குகள் வியர்த்துப் போயுள்ளன. ‘விரைவில் நம்பர் 1’ என்ற சாய்னாவின் முழக்கம் அவர்களின் காதுகளில் எச்சரிக்கை மணியாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
‘ரேங்க் ஒரு பக்கம் இருந்தாலும், அடுத்தடுத்த தொடர்களில் பட்டம் வெல்வதில் மட்டுமே கவனம் செலுத்துவேன். சீன வீராங்கனைகள் மட்டுமல்ல… யாரைப் பார்த்தும் எனக்கு பயம் கிடையாது. பிட்னஸ்தான் ஒரே பிராப்ளம். காயம் ஏதும் ஏற்படாமல் இருந்தால் போதும். வெற்றி நடை தொடரும்’ என்று நம்பிக்கை பொங்கி வழிய உற்சாகமாகக் கூறுகிறார் சாய்னா. ஹரியானாவில் பிறந்தாலும் இவருக்கு சொந்த ஊர் என்றால் ஐதராபாத் தான். அப்பா டாக்டர் ஹர்வீர் சிங், அம்மா உஷா நெஹ்வால் இருவருமே பேட்மிண்டன் பிளேயர்கள் என்பதால் சாய்னாவின் ஒவ்வொரு செல்லிலும் இந்த விளையாட்டு ஊறியிருக்கிறது.
‘விடா முயற்சி, நம்மால் முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, எப்படிப்பட்ட நெருக்கடியாக இருந்தாலும் மனம் தளராமல் போராடுவது சாய்னாவின் ஸ்பெஷாலிடி. இந்திய வீரர், வீராங்கனைகளில் இத்தனை துணிச்சலானவரை பார்ப்பது மிக மிக அபூர்வம்’ என்று பாராட்டுகிறார் பிரகாஷ் படுகோன். பயிற்சியாளர்கள் கோபிசந்த், அதிக் ஜவுஹாரி இருவரும் தங்கள் மாணவியைப் பற்றி புகழ்ந்து தள்ளுகிறார்கள். பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும் சாய்னாவின் பிராண்ட் வேல்யூ ரூ.40 கோடியையும் தாண்டி எக்கச்சக்கமாய் எகிறிக் கொண்டிருக்கிறது.
ஐதராபாத்தில் நடந்த விழாவில் மாநில முதல்வர் ரோசய்யா ரூ.25 லட்சம் ரொக்கப் பரிசு அறிவித்திருக்கிறார். இந்திய பேட்மிண்டன் சங்கம் தன் பங்குக்கு ரூ.5 லட்சம் வழங்க உள்ளது. காமன்வெல்த், ஆசிய விளையாட்டு, உலக சாம்பியன்ஷிப், ஒலிம்பிக் என்று 20 வயது சாய்னாவின் இலக்கு விரிந்து கொண்டிருப்பதால் இந்தப் பரிசெல்லாம் ‘டோக்கன் அட்வான்ஸ்’ தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
பா.சங்கர்