ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

வரம்பு மீறலாமா?

விளையாட்டு போட்டிகளின் நேர்முக வர்ணனையை கேட்டு ரசிப்பது ஒரு இனிமையான அனுபவம். அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகும் கிரிக்கெட் வர்ணனையை கேட்பதற்கென்றே ரசிகர்கள் தவம் கிடந்த நாட்கள் உண்டு.
டிரான்சிஸ்டர் ரேடியோக்களை காதுகளில் ஒட்டிக் கொண்டு அலைவார்கள். டிவி நேரடி ஒளிபரப்பு வந்த பிறகும் கூட வர்ணனையாளர்களுக்கான முக்கியத்துவம் குறையவில்லை.தொலைக்காட்சிப் பெட்டியின் ஒலி அளவை குறைத்துவிட்டு அப்துல் ஜபார், கூத்தபிரான், ராமமூர்த்தி ஆகியோரது அழகிய தமிழ் வர்ணனையுடன் போட்டிகளை ரசித்தவர்கள் ஏராளம்.
அப்போதெல்லாம் வர்ணனையாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும். எதையெல்லாம் செய்யக் கூடாது என்பதற்கான விதிமுறைகள் அடங்கிய கையேட்டில் கையெழுத்திட்ட பிறகே ஒப்பந்தத்தை உறுதி செய்வார்கள்.
மொழி ஆளுமை, விளையாட்டின் நுணுக்கங்கள் பற்றிய தெளிவான அறிவு, களத்தில் நடக்கும் நிகழ்வுகளை ரசிகர்களின் மனக் கண்ணில் காட்சிப்படுத்தக் கூடிய வல்லமை, புள்ளி விவரங்களை தொகுக்கும் திறன், வியூகங்களை அலசும் விவேகம் என்று பல்வேறு அம்சங்களையும் கவனித்து தான் இவர்களை தேர்வு செய்வார்கள்.
களத்தில் இருக்கும் வீரர்களை தரக்குறைவாக பேசக் கூடாது, அவர்களது செயல்பாடுகளை கடுமையாக விமர்சிக்கக் கூடாது, எந்த ஒரு அணிக்கும் ஆதரவாக ஒருதலைப்பட்சமான கருத்துகளை சொல்லக் கூடாது என்பதெல்லாம் அடிப்படையான விதிமுறைகள்.
இப்போது எல்லாமே தலைகீழ். வர்ணனையாளர்களுக்கான இலக்கணம் மாறிவிட்டது. பெரும்பாலும் முன்னாள் வீரர்களேமைக்பிடிக்கிறார்கள். விளையாடிக் கொண்டிருப்பவர்களின் சிறு சிறு தவறுகளைக் கூட பூதக்கண்ணாடி கொண்டு பார்த்து பூதாகரமாக்கி, கிண்டலடித்து கேவலப்படுத்துகிறார்கள்.
சமீபத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் போலார்டை கடுமையான வார்த்தைகளால் காய்ச்சி எடுத்தார் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ரேக்கர்.
முன் வரிசையில் களமிறங்கி பேட் செய்யும் அளவுக்கு போலார்டு திறமையானவர் அல்ல. அதற்கான அறிவு அவரிடம் இல்லை. நான்கு அல்லது ஐந்து ஓவர் தான் அவரால் தாக்குப்பிடிக்க முடியும். அதற்கு மேல் அவர் சரிப்பட்டு வர மாட்டார்என்று சகட்டு மேனிக்கு போட்டுத் தாக்கினார்.
போலார்டு 17 பந்தில் 17 ரன் எடுத்ததை தான் மஞ்ரேக்கர் இப்படி வர்ணித்தார்! இதை கேள்விப்பட்ட போலார்டுஉங்கள் வாயில் இருந்து நல்ல விஷயம் ஏதாவது வெளிப்படும் என நினைக்கிறீர்களா... பேசுவதற்காக காசு வாங்குகிறீர்கள், உங்களின் வாய்வழி வயிற்றுப்போக்கை! தொடருங்கள்என்று ட்விட்டர் இணையதளத்தில் பதிவிட்டு பதிலடி கொடுத்தார்.
அவருக்கு ஆதரவாக கிரிக்கெட் பிரபலங்களும், ரசிகர்களும் வரிந்துகட்ட கண்டனக் கணைகள் வைரலாகி அனல் பறக்கிறது.அடுத்தடுத்த லீக் ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு போலார்டின் அதிரடி பேட்டிங் முக்கியப் பங்களிக்க, மஞ்ரேக்கர் இப்போது அசடு வழிந்துகொண்டிருக்கிறார்.

வர்ணனையில் இயல்பான நகைச்சுவை இழையோடலாம், வன்மம் தலைதூக்கி வரம்பு மீறக்கூடாது என்பது அவருக்கு மட்டுமல்ல அனைவருக்குமே பொருந்தும்.
- ஷங்கர் பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக