ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

வயது பொருட்டல்ல

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் பல ஆச்சரியங்களை அளித்திருக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரரும், மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்திருக்கிறார்கள்.இருவருமே 35 வயது பூர்த்தியானவர்கள்.
அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற வீராங்கனை என்ற சாதனையை வசப்படுத்தி இருக்கிறார் செரீனா. ஜெர்மனியின் ஸ்டெபி கிராப் 22 பட்டங்களுடன் படைத்த சாதனை தகர்க்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 17 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன் முதலிடத்தில் இருந்த பெடரர் தனது பிரமிக்க வைக்கும் சாதனை எண்ணிக்கயை 18ஆக அதிகரித்துக் கொண்டார். இவர்களுடன் பைனலில் மோதிய ரபேல் நடாலுக்கு 30 வயது, வீனஸ் வில்லியம்சுக்கு 36 வயது.
ஓபன் டென்னிஸ் வரலாற்றில் ஆண்கள் மற்றும் மகளிர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற நால்வருமே 30 வயது பூர்த்தியானவர்களாக இருப்பது இதுவே முதல் முறை. டென்னிசில் சாதிக்க வயது ஒரு பொருட்டல்ல என்பதை இவர்கள் அழுத்தம் திருத்தமாக நிரூபித்திருக்கிறார்கள்.
மகளிர் பிரிவில் செரீனாவின் வெற்றி ஓரளவு எதிர்பார்த்தது தான். மற்ற மூவரும் பைனலுக்கு தகுதி பெறுவார்கள் என யாருமே கணித்திருக்க முடியாது. பெடரர் - நடால் மோதிய பைனல் டென்னிஸ் ரசிகர்களுக்கு திகட்டாத விருந்தாக அமைந்தது. மூன்றரை மணி நேரத்துக்கும் மேலாக 5 செட்களுக்கு நீடித்த ஆட்டம் பரபரப்பின் உச்சம்.
தனக்கு எதிராக பல சமயங்களில் ஆதிக்கம் செலுத்தியிருந்த நடாலின் சவாலுக்கு ஈடுகொடுத்ததுடன், நம்ப முடியாத வகையில் வெற்றியையும் வசப்படுத்தி மகத்தான சாதனை வீரராக சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கிறார் பெடரர்.
இருவருமே கடந்த ஆண்டு முழுவதும் காயங்களால் அவதிப்பட்டதுடன், பல தொடர்களில் விளையாட முடியாமல் தரவரிசையில் மிகவும் பின்தங்கி இருந்தனர். ஜோகோவிச், மர்ரே, வாவ்ரிங்கா, ரயோனிச் என்று திறமையான வீரர்கள் அணிவகுத்ததால் போட்டியும் நாளுக்கு நாள் கடுமையானது. இத்தகைய சூழலில் இவர்களின் டென்னிஸ் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவே தோன்றியது.
ஆனால், மன உறுதியும் விடா முயற்சியும் இந்த வீரர், வீராங்கனைகளை சாதிக்க வைத்திருக்கிறது. விளையாட்டில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு இவர்களின் முயற்சியும், வெற்றியும் நிச்சயம் நல்ல முன்னுதாரணமாக இருக்கும்.
- ஷங்கர் பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக