ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

காற்று மாசு அச்சுறுத்தல்

மூச்சு விட முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது தலைநகர் டெல்லி. அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் 15 மடங்கு அதிகமான காற்று மாசு, இயல்பு வாழ்க்கையை அடியோடு முடக்கிவிட்டது.
காற்று மாசு பிரச்னை டெல்லி மக்களுக்குப் பழக்கமாகிப்போன ஒன்றுதான். மரங்களை முற்றிலுமாக அழித்து கான்கிரீட் காடுகளை வளர்ப்பதன் பலனை ஏற்கனவே அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். பஞ்சாப், அரியானா மாநிலங்களில் அறுவடை முடிந்துள்ள நிலையில், காய்ந்து சருகாகக் கிடக்கும் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் ஏற்பட்ட புகை மூட்டமும் சேர்ந்து கொண்டதால் பிரச்னை தீவிரமாகிவிட்டது.
ஆஸ்துமா நோயாளிகள் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகள், முதியோருக்கு சுவாசக் கோளாறுடன் பல்வேறு நோய்களின் அச்சுறுத்தல். பள்ளிகளை இழுத்து மூடிவிட்டார்கள். வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம், கட்டுமானப் பணிகளை அடியோடு நிறுத்தி விடுங்கள், தொழிற்சாலைகளை இழுத்து மூடுங்கள் என்று அறிவிக்கும் அளவுக்கு நிலைமை படுமோசம்.
புழுதிப் படலத்தை கட்டுப்படுத்த சாலைகளில் தண்ணீரை பீய்ச்சி அடித்து கழுவி விடுவது, செயற்கை மழை பெய்விப்பது, ஒற்றை மற்றும் இரட்டைப்படை எண்களின் அடிப்படையில் வாகனங்களை போக்குவரத்துக்கு அனுமதிப்பதுஎன்று தீவிரமாக யோசித்து தலையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் நடந்த அமைச்சரவை அவசர கூட்டத்தில் 25 அம்ச நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. குப்பைகளை எரிக்காதீர்கள், அத்தியாவசிய தேவை தவிர்த்து வேறு எதற்காகவும் ஜெனரேட்டரை உபயோகிக்காதீர்கள் என்று உத்தரவிட்டுள்ளனர். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அனில்தேவ் தலைமையில் நிபுணர்கள் ஆலோசனை கூட்டமும் நடந்திருக்கிறது.
ஓரிரு நாளில் காற்று வேகமாக வீசத் தொடங்கும்போது புழுதிப் படலம் அகன்று நிலைமை சீராகிவிடும் என்ற வானிலை மையத்தின் அறிவிப்பு மட்டுமே டெல்லி மக்களுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. சுவாசிக்க சுத்தமான காற்று வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டங்களும், விழிப்புணர்வு பேரணிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

தற்காலிக தீர்வு கிடைத்ததும், பிரச்னையை அடியோடு மறந்துவிட்டு, வேலையை பார்க்க போய்விடுவார்கள். மத்திய, மாநில அரசுகளும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தங்களின் பொறுப்பை தட்டிக் கழிக்காமல், ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே காற்று மாசு அச்சுறுத்தலில் இருந்து மக்களை பாதுகாக்க முடியும். இது டெல்லிக்கு மட்டுமல்ல, சென்னை உள்ளிட்ட பெருநகரங்கள் அனைத்துக்குமே பொருந்தும். அலட்சியம் காட்டினால் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்காக அலைய நேரிடும்.
- ஷங்கர் பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக