ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

தவறாக உபயோகிக்கலாமா?

டிஆர்எஸ்... நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரும் விதிமுறை. களத்தில் சில விநாடிகளுக்குள்ளாக பல்வேறு நிகழ்வுகளை கூர்மையாகக் கவனித்து, அனைத்து அம்சங்களையும் அலசி விரைவாக முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் நடுவர்களுக்கு. அவர்களும் மனிதர்கள் தானே?, தவறு செய்வதற்கான வாய்ப்பு நிச்சயம் இருக்கிறது. அப்படி ஏதும் இருப்பதாகக் கருதினால் அதை திருத்திக் கொள்வதற்காக கொடுக்கப்படும் அரிய வாய்ப்பு தான் டிஆர்எஸ்.
அவுட் கொடுக்கப்பட்டதில் சந்தேகம் இருந்தால் மட்டுமே இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். எல்லா முடிவுகளையும் சந்தேகப்பட்டால், வாய்ப்புகளை வீணடித்துவிட்டு பின்னர் தேவைப்படும் சமயத்தில் பயன்படுத்த முடியாமல் நொந்துபோக நேரிடும். டிஆர்எஸ் கோருவதா? வேண்டாமா? என்பதையும் களத்தில் இருக்கும் வீரர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதுவும், குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாக!. விதிமுறைகளை வகுப்பவர்கள் எல்லா வகையிலும் யோசித்து தான் இறுதி வடிவம் கொடுக்கிறார்கள் என்பதை வீரர்கள் மறந்துவிடக் கூடாது.
பெங்களூருவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தனக்கு கொடுக்கப்பட்ட அவுட் முடிவிலிருந்து தப்பிக்க டிஆர்எஸ் வாய்ப்பை பயன்படுத்தலாமா என்று தீர்மானிக்க முடியாமல் சற்று தடுமாறினார். எதிர் முனையில் இருந்த சக வீரருடன் ஆலோசித்ததில் தவறேதும் இல்லை. ஆனால், மைதானத்துக்கு வெளியே தங்கள் அணி முகாமில் இருந்து ஏதேனும் சமிக்ஞை கிடைக்கிறதா? என கள்ளத்தனமாக பார்த்தது தான் சர்ச்சையை கிளப்பிவிட்டது.
ஸ்மித்தின் பார்வை போகும் திசையை சரியாகக் கணித்த இந்திய கேப்டன் கோஹ்லி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன், களத்தில் இருந்த நடுவர்களிடம் புகார் செய்யவும் தவறவில்லை. நிலைமை விபரீதமாவதை உணர்ந்த ஸ்மித் மேலும் தாமதிக்காமல் உடனடியாக பெவிலியன் திரும்பியதுடன் குழப்பமான மனநிலையில் அப்படி நடந்துகொள்ள நேரிட்டதாக பின்னர் விளக்கமும் அளித்தார்.
இந்த அப்பட்டமான விதிமீறல் குறித்து இந்திய அணி நிர்வாகம் சார்பில் போட்டி நடுவரிடம் புகார் கொடுக்கப்பட்டது பிரச்னையை மேலும் சிக்கலாக்கியது. ஸ்மித் மற்றும் கோஹ்லியின் நடத்தையும் விமர்சனத்துக்குள்ளானது.
கிரிக்கெட் பிரபலங்களும், நிபுணர்களும் இரு தரப்பாக பிரிந்து நின்று கருத்து மோதலுக்கு தூபம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பிரச்னை தீவிரமாவதை உணர்ந்த இரு நாட்டு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டியிலும் விதிமுறைக்குட்பட்டு சிறப்பாக விளையாடுவதில் மட்டும் வீரர்கள் கவனம் செலுத்த வேண்டும் என முடிவெடுத்திருக்கறார்கள்.

தவறை திருத்திக் கொள்வதற்காக கொடுக்கப்படும் வாய்ப்பை பயன்படுத்துவதில் தவறு செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. புதிய விதிமுறைகள் அறிமுகமாகும்போது, அது பற்றி முழுமையாக அறிந்துகொள்ளும் முனைப்பும் அவசியம். டிஆர்எஸ் வாய்ப்பை பயன்படுத்துவதில் இனியாவது வீரர்கள் விவேகத்துடன் செயல்படுவார்கள் என எதிர்பார்க்கலாம். 
- ஷங்கர் பார்த்தசாரதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக