ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

அமைதிக்கான ஆயுதம்

அக்னி-5 ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி சாதனை படைத்திருக்கிறார்கள் இந்திய விஞ்ஞானிகள். தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், நமது ராணுவ பலத்தை உலகுக்கு பறைசாற்றுவதிலும் புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறோம்.
இந்திய பாதுகாப்புத்துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் டிஆர்டிஓ சார்பில் ஒடிசா மாநிலம் பலசோர் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள கலாம் தீவில் இருந்து நேற்று காலை சீறிப் பாய்ந்தது அக்னி-5 ஏவுகணை. வெற்றிகரமாகப் பறந்தது மட்டுமல்லாமல் இலக்கையும் துல்லியமாகத் தாக்கி அழித்திருக்கிறது.
அபார சாதனை படைத்துள்ள விஞ்ஞானிகளுக்கு குடியரசுத் தலைவரும், பிரதமரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.அக்னி ஏவுகணை வரிசையில் புதிதாய் இணைந்துள்ள இதன் தாக்குதல் திறன் பிரமிக்க வைக்கிறது. ஒரு டன் எடை கொண்ட அணு ஆயுதத்தை சுமந்தபடி கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து 5,000 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து செல்வதுடன், இலக்கையும் மிகத் துல்லியமாகத் தகர்க்கும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்டது.
17 மீட்டர் நீளம், 50 டன் எடை இருந்தாலும், எதிரிகளின் ராடார் பார்வையில் சிக்காமல்தண்ணி காட்டும்என்கிறார்கள். பாகிஸ்தான், சீனா உள்பட ஒட்டுமொத்த ஆசியா மட்டுமல்லாது ஐரோப்பிய கண்டத்தையும் குறிவைக்கும் வல்லமை யாரையும் மிரள வைக்கும்.
1989ல் முதலாவது அக்னி ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டபோது, அதன் தாக்கும் திறன் வெறும் 700 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே. 2,000, 2,500, 3,500 என்று படிப்படியாக முன்னேறி தற்போது 5,000 கி.மீ. என்ற மிரட்டலான இலக்கை எட்டியிருக்கிறார்கள். மேலும் சில சோதனைகளுக்குப் பிறகு இந்திய ராணுவத்தில் முறைப்படி இணைத்துக் கொள்ளப்பட இருக்கிறது.
அடுத்ததாக அக்னி-6 தயாரிப்புக்கான ஆயத்தப் பணிகள் இப்போதே தொடங்கிவிட்டதாகவும் தகவல். அது தரையில் இருந்து மட்டுமல்லாது நீர்மூழ்கிக் கப்பல்களில் இருந்தும் கூட இயக்கும் வகையிலும், 8,000 - 10,000 கி.மீ. தூரம் பறந்து சென்று தாக்கும் திறன் கொண்டதாகவும் இருக்கும்.
ஏவுகணை தொழில்நுட்பக் கட்டுப்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் நாடாக இந்தியாக இணைந்த பிறகு நடத்தப்பட்ட முதல் அக்னி சோதனையிலேயே வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார்கள் நமது விஞ்ஞானிகள். ‘இது யாரையும் அச்சுறுத்துவதற்கான முயற்சி அல்ல. நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கடமை.

இந்தியாவை தாக்கும் எண்ணத்தை எதிரிகள் அடியோடு கைவிட வைக்கும் என்பதால், உண்மையில் இது அமைதிக்கான ஆயுதம்என்று அரசு அறிவித்துள்ளது. எல்லையில் தீவிரவாதத்தை தூண்டிவிட்டு வாலாட்ட நினைக்கும் எதிரிகளுக்கு அக்னி-5 நிச்சயம் சிம்ம சொப்பனமாக இருக்கும்.
- ஷங்கர் பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக