ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

பிடிவாதத்தால் தலைக்குனிவு

தலைவர் மற்றும் செயலாளர் என முக்கிய நிர்வாகிகள் இருவரும் ஒரே சமயத்தில் பதவிநீக்கம் செய்யப்பட்டதால், உலகின் பணக்கார விளையாட்டு நிர்வாக அமைப்பு என்று புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மிகப் பெரிய தலைக்குனிவை சந்தித்துள்ளது.
இது பிசிசிஐ வலிய வரவழைத்துக்கொண்ட தர்மசங்கடம்... சொந்தக் காசில் வைத்துக்கொண்ட சூனியம்! என்றே சொல்ல வேண்டும். ஐபிஎல் டி20 தொடரில் எழுந்த சூதாட்ட சர்ச்சை குறித்து விசாரணை நடத்திய முன்னாள் நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையிலான குழு, கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு சீர்திருத்தங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் பரிந்துரைத்திருந்தது.
நிர்வாகிகளின் வயது மற்றும் பதவிக்காலத்துக்கு உச்சவரம்பு, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பிசிசிஐ நிர்வாகிகளாக செயல்படத் தடை, ஆதாயம் தரும் இரட்டைப் பதவி வகிக்கக் கூடாது  போன்ற அதிரடியான பரிந்துரைகள், கிரிக்கெட் வாரியத்துக்கு பேரிடியாக அமைந்தன.
பல ஆண்டுகளாக அனுபவித்து வந்த பதவி, பணம், அதிகாரம் எல்லாம் பறிபோய்விடும் என்பதால், லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தாமல் இழுத்தடித்து வந்தார்கள்.சர்வாதிகாரமாக நடந்து கொள்ளாதீர்கள் என்ற உச்ச நீதிமன்றத்தின் கடுமையான எச்சரிக்கையை அலட்சியப்படுத்திவிட்டு, சிறப்பு பொதுக் குழுவை கூட்டி ஆலோசித்தவர்கள்... ஒரு சில பரிந்துரைகள் தவிர்த்து மற்றவற்றை ஏற்க முடியாது என்று ஒருமனதாக முடிவு செய்தனர்.
பிசிசிஐ தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கங்கள் நீதிபதிகளை மேலும் எரிச்சடையவே வைத்தன. வாரியத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும் என்ற நியாயமான எதிர்ப்பார்ப்பைக் கூட நிவர்த்தி செய்யாமல் அலைக்கழித்ததன் பலனாக இன்று பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் அஜய் ஷிர்கே இருவரும் உச்ச நீதிமன்றத்தால் பதவிநீக்கம் செய்யப்பட்டிருகிறார்கள்.
70 வயதுக்கு மேற்பட்ட நிர்வாகிகள் அனைவரும் உடனடியாக பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பிசிசிஐ நிர்வாகிகள் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்கள், லோதா கமிட்டி பரிந்துரைகளுக்கு கட்டுப்படுவதாக உறுதிமொழியும் அளித்தாக வேண்டும். வாரியத்தின் நிர்வாகத்தை சீரமைக்க குழு ஒன்றை நியமிக்கவும் உத்தரவிட்டுள்ள நீதிபதிகள், தகுதி வாய்ந்த நபர்களைத் தேர்வு செய்வதற்கு உதவுமாறு மூத்த வழக்கறிஞர்கள் பாலி நாரிமன், கோபால் சுப்ரமணியத்தை பணித்திருக்கிறார்கள்.
பல முறை வழங்கப்பட்ட அவகாசத்தை பயன்படுத்திக் கொள்ளாமல் பிசிசிஐ அலட்சியப் போக்குடன் நடந்துகொண்ட போதே, விளைவுகள் இப்படித் தான் இருக்கும் என நினைத்தேன். அது உண்மையாகிவிட்டது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகள், அனைத்து விளையாட்டு நிர்வாக அமைப்புகளுக்கும் ஒரு வழிகாட்டியாக அமையும்என்கிறார் நீதிபதி ஆர்.எம்.லோதா.

பிடிவாதப் போக்கை கைவிட்டு, நியாயமான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு முழு மனதுடன் ஒத்துழைப்பு கொடுத்திருந்தால் இந்த தர்மசங்கடத்தையும், தலைக்குனிவையும் தவிர்த்திருக்கலாம்.
- ஷங்கர் பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக