சக வீரரை அவமதிக்கும்
வகையில் கருத்துகளை
வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி ஆல் ரவுண்டர்
கிளென் மேக்ஸ்வெல்,
போட்டியில் களமிறங்கும் வாய்ப்பை இழந்து மாற்று
வீரராக குளிர்பானங்களை
சுமக்க நேரிட்டது
சரியான தண்டனை
என்றே தோன்றுகிறது.
அதிரடியாக ரன் குவிப்பதுடன்,
பந்துவீச்சிலும் பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு அணியின்
வெற்றிக்கு முழுமையாக பங்களிப்பவர் மேக்ஸ்வெல் என்பதில்
யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. அதே
சமயம், எத்தனை
திறமையான வீரராக
இருந்தாலும் பார்மில் இல்லாதபோது சற்று தடுமாற
வேண்டியிருக்கும்.
அது போன்ற சமயங்களில்
அணியில் இடத்தை
தக்கவைத்துக் கொள்வது சிரமம் என்பதை அவர்
உணர்ந்ததாக தெரியவில்லை.ஆஸ்திரேலியாவில்
நடைபெறும் உள்ளூர்
கிரிக்கெட் தொடரில் தன்னை பின் வரிசையில்
களமிறங்க வைத்ததை
சகித்துக் கொள்ள
முடியாமல் விக்டோரியா
அணி கேப்டன்
மேத்யூ வேட்
உள்பட சக
வீரர்களை தரக்குறைவாக
விமர்சித்துவிட்டார்.
‘என்னை விட
திறமை குறைவான
பேட்ஸ்மேன்களுக்குப் பிறகு களமிறங்குவது
மிகுந்த மன
வேதனையாக இருக்கிறது.
குறிப்பாக, மேத்யு வேட் சுத்த வேஸ்ட்’
என்று உணர்ச்சிவசத்தில்
உளறியது அவரது
சர்வதேச போட்டி
வாய்ப்பையே பறித்துவிட்டது.
மேக்ஸ்வெல்லின் துடுக்குத்தனமான பேச்சால்
எரிச்சலடைந்த தேசிய அணி கேப்டன் ஸ்டீவன்
ஸ்மித், பயிற்சியாளர்
லீமேன் இருவரும்
கலந்தாலோசித்து நியூசிலாந்து அணிக்கு எதிராக சிட்னியில்
நடந்த முதல்
ஒருநாள் போட்டியில்
அவரை சேர்க்காமல்
கழட்டிவிட்டனர். வாய்ப்பை இழந்து மாற்று வீரராக
களத்துக்கு வெளியே உட்கார நேர்ந்ததுடன், சக
வீரர்களுக்காக குளிர்பானங்களை சுமக்கவும் நேரிட்டது துரதிர்ஷ்டவசம்
தான்.
‘மேக்ஸ்வெல் செய்தது தவறு
என்பதில் மாற்றுக்
கருத்து இல்லை
என்றாலும், அவரைப் போன்ற சிறந்த ஆல்
ரவுண்டரை அணியில்
சேர்க்காமல் விட்டது சரியல்ல. ஆனால், எவ்வளவு
தான் திறமை
இருந்தாலும், ஒழுக்கமும் அவசியம் என்பதை இந்த
சம்பவத்தின் மூலமாக புரிந்து கொண்டிருப்பார் என
நம்புகிறேன்.
அடிக்கடி இப்படி சர்ச்சையில்
சிக்கிக் கொள்வதை
அவர் வாடிக்கையாகவே
வைத்துள்ளார். தகுந்த ஆலோசனைகள் கூறி மனதை
ஒருமுகப்படுத்த அவருக்கு உதவ வேண்டும். இதற்காக
மைக்கேல் ஹஸி,
மார்க் டெய்லர்
போன்ற பிரபலங்களை
பிரத்யேகமான ஆலோசகராக நியமிப்பது பற்றி கூட
யோசிக்கலாம்’ என்கிறார் முன்னாள் வீரர் டீன்
ஜோன்ஸ்.
இந்தியாவுக்கு எதிராக நடக்க
உள்ள டெஸ்ட்
தொடரில் விளையாட
வேண்டும் என்று
விருப்பம் தெரிவித்துள்ள
மேக்ஸ்வெல், அதற்கு ஆட்டத் திறனை விட
சக வீரர்களை
மதிக்கும் மனப்
பக்குவம் அவசியம்
என்பதை உணர்ந்திருப்பார்
என நம்பலாம்.
- ஷங்கர் பார்த்தசாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக