புதன், 22 நவம்பர், 2017

புழுக்கம்

மரங்களே
ஏன் மவுனம் சாதிக்கிறீர்கள்?
எனை மிகவும் பாதிக்கிறீர்கள்
உறக்கமின்றி தவிக்கிறேன்
கொஞ்சம் இலைகளை அசைத்து
தென்றலை அழைத்து உதவுங்கள்.
மரங்களே
ஏன் மவுனம் சாதிக்கிறீர்கள்?
வாயு தேவனிடம்
வம்புகள் செய்தீரோ?
வேலை நிறுத்தமா… இல்லை
ஒத்துழையாமை இயக்கமா?
கப்பல்
கவிழ்ந்ததென்ற கவலையா?
கர்மேகக் கனவுகளோ!
மரம் போல் நிற்கும்!
மரங்களே
ஏன் மவுனம்ம்ம்ம்ம்ம்ம்ம்…
போதும் நிறுத்து
உவமையில் கூட உளறுகின்றாயே
அருந்திய பானம் அளவுக்கதிகமோ?
இன்னுமா புரியவில்லை
இந்த மவுனம் எதற்கென்று?
இது மவுன அஞ்சலி
இறந்து போன நண்பனுக்கு
இதய அஞ்சலி…
இயற்கை மரணமா?
இல்லையே
படுகொலையல்லவா செய்தாய் – பாவி
உயிரோடல்லவா
தோலை உரித்தாய்
அங்கம் அங்கமாய் சிதைத்தாயே
ஆறறிவு மிருகமே
இன்னுமா புரியவில்லை
இந்த மவுனம் எதற்கென்று?
பதில் சொல்….
அட! அதற்குள் உறங்கிவிட்டாயே!!
இல்லை…
இது மதுவின் மயக்கம்
நாங்களறிவோம்
இந்தச் சோலை
நாளை பாலையாகுமென்று
நீயுமறிவாய்
எங்கள் மகத்துவம் அன்று.

-    ஷங்கர் பார்த்தசாரதி 
( 1987ல் எழுதி, அகில இந்திய வானொலியில்
  வாசித்த கவிதை.



(



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக