ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

சபாஷ் கோஹ்லி

இங்கிலாந்துக்கு எதிராக நடந்த முதல் ஒருநாள் போட்டியில், இளம் வீரர் விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அற்புதமான வெற்றியை வசப்படுத்தியிருக்கிறது. கேப்டனாக டோனியின் சகாப்தம் முடிவடைந்த நிலையில், மூன்று வகை போட்டிகளுக்குமான தலைமைப் பொறுப்பேற்ற பிறகு கோஹ்லி சந்தித்த முதல் சவால் என்பதால் இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு சற்று அதிகமாகவே இருந்தது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து 351 ரன் என்ற கடினமான இலக்கை நிர்ணயித்தபோது, நமது வீரர்கள் சமாளிப்பார்களா என்ற சந்தேகம் எழுந்ததை தவிர்க்க முடியவில்லை. தொடக்கத்திலேயே நான்கு விக்கெட் சரிந்ததால், அந்த சந்தேகம் இன்னும் அதிகமானது. ஆனால், கேப்டன் கோஹ்லிக்கு எள்ளளவு கூட சந்தேகமோ சஞ்சலோமோ இருந்ததாகத் தெரியவில்லை. அவரது பொறுப்பான ஆட்டத்துக்கு தோள் கொடுத்தார் உள்ளூர் வீரர் கேதார் ஜாதவ்.
இருவரும் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 200 ரன் சேர்த்து வெற்றி நம்பிக்கையை விதைத்தனர். இவர்கள் விளாசிய சதங்கள் இங்கிலாந்திடம் இருந்து வெற்றியைப் பறித்துவிட்டன. கேதார் வெளிப்படுத்திய அதிரடி ஆட்டம், கோஹ்லியின் வேலையை சுலபமாக்கிவிட்டது. மிக இயல்பாக விளையாடி, இலக்கை துரத்துவதில் தனது நிபுணத்துவத்தை மீண்டும் ஒரு முறை அழுத்தம் திருத்தமாக நிரூபித்துவிட்டார். அது மட்டுமா? சேசிங்கில் 17 சதங்கள் விளாசி மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் படைத்த சாதனையையும் அவர் சமன் செய்திருக்கிறார்.
ஒருநாள் போட்டியில் கிடைத்த சாதாரண வெற்றி தானே இது. இதற்காக கோஹ்லியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டுமா? என்ற கேள்வி நியாயமானதே.டெஸ்ட் போட்டிகளில் டோனியின் ஓய்வுக்குப் பிறகு கேப்டனாக பொறுப்பேற்றதுடன் தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து, ஐசிசி தரவரிசையில் இந்திய அணியை மீண்டும் முதலிடத்துக்கு முன்னேற வைத்திருக்கிறார்.
இப்போது ஒருநள் மற்றும் டி20 போட்டிகளுக்கும் தலைமை பொறுப்பு என்ற கூடுதல் சுமை அவரது தோள்களில் சுமத்தப்பட்டிருக்கிறது. அந்த வகையில் சந்தித்த முதல் சவாலை முறியடித்திருப்பதால், இந்த வெற்றி நிச்சயமாகவே சம்திங் ஸ்பெஷல் தான்.

இமாலய இலக்கை தூரத்தினாலும் கொஞ்சம் கூட பதற்றம் அடையாமல், முன்னின்று ஆக்ரோஷமாகப் போராடியது கோஹ்லியின் மன உறுதிக்கு சான்றாக அமைந்தது. டோனியைப் போலவே, இவரது தலைமையின் கீழும் இந்தியா உலக கோப்பைகளை கைப்பற்றி சாதனை படைக்கும் என்ற நம்பிக்கை இன்னும் வலுப்பெற்றிருக்கிறது. சபாஷ் கோஹ்லி.
- ஷங்கர் பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக