ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

வெற்றிப் பயணம்

சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 19 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி காணாமல் சாதனை படைத்திருக்கிறது இந்திய அணி. வங்கதேச அணியுடன் ஐதராபாத்தில் நடந்த டெஸ்டில் 208 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியதன் மூலமாக கோஹ்லி தலைமையிலான இந்திய அணி இந்த சாதனை மைல்கல்லை எட்டியுள்ளது.
இதற்கு முன்பு சுனில் கவாஸ்கர் தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 18 டெஸ்டில் தோல்வி காணாமல் இருந்ததே அதிகபட்சமாக இருந்தது. டெஸ்ட் போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற்ற பிறகு கேப்டனாக பொறுப்பேற்ற கோஹ்லிக்கு இது 15வது வெற்றி. முகமது அசாருதீனின் சாதனையை முறியடித்துள்ள அவர், 27 வெற்றிகளுடன் டோனி படைத்துள்ள சாதனையையும் தகர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒட்டுமொத்த அணியும் ஒருங்கிணைந்து விளையாடியதாலேயே இந்த சாதனைகள் கை கூடியுள்ளன. கேப்டன் பொறுப்பை திறம்படக் கையாள்வதுடன், தனது பொறுப்பான ஆட்டத்தால் அணியின் வெற்றியை உறுதி செய்து வரும் கோஹ்லியின் பங்களிப்பும் முக்கியத்துவம் பெறுகிறது.தொடர்ச்சியாக 4 தொடர்களில் 4 இரட்டை சதம் விளாசிய முதல் வீரர் என்ற உலக சாதனை, அணிக்காக அவர் வெளிப்படுத்தும் முழு அர்ப்பணிப்பின் பெருமைமிகு அடையாளம்.
மகத்தான சாதனை வீரர்களான சச்சின், லாரா, காலிஸ் போன்றவர்களுடன் கோஹ்லியை ஒப்பிடுவது தவறு என்றாலும், அதை தவிர்க்க முடியாத அளவுக்கு போட்டிக்கு போட்டி அவரது ஆட்டம் அமர்க்களமாக இருப்பதையும் குறிபிட்டே ஆக வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் அதிவிரைவாக 250 விக்கெட் மைல் கல்லை எட்டிய வீரர் என்ற சாதனையை படைத்திருக்கும் சுழற்பந்துவீச்சாளர் அஷ்வினின் உழைப்பும் இந்த வெற்றி பயணத்துக்கு உறுதுணையாக இருந்துள்ளது.
அடுத்ததாக பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்து டெஸ்ட் தொடரில் மோத உள்ளது. அந்த தொடரிலும் இந்திய அணியின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கும் என்பதே கிரிக்கெட் பிரமுகர்கள் மற்றும் நிபுணர்களின் கணிப்பு.‘இந்திய மண்ணில் சிறப்பாக விளையாடிவிட்டால் போதும். ஆஸ்திரேலியாவை சேர்ந்த மகத்தான வீரர்களின் வரிசையில் நாங்கள் இடம் பிடித்துவிடலாம்.

எங்களைப் பொறுத்தவரை தொடரை சமன் செய்தாலே பெரிய சாதனை தான்என்கிறார் ஆஸி. அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித். அந்த அளவுக்கு இந்திய வீரர்களின் திறமை எதிரணிகளுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. கோஹ்லி தலைமையிலான இந்திய அணியின் வெற்றிப் பயணம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் தொடரும் என நிச்சயம் நம்பலாம்.
- ஷங்கர் பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக