ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

எச்சரிக்கை மணி

ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 333 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்திருக்கிறது. தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேச அணிகளுக்கு எதிராக சிறப்பான வெற்றிகளைப் பதிவு செய்ததுடன் தொடர்ச்சியாக 19 போட்டியில் தோல்வி காணாமல் இருந்த இந்திய அணியின் சாதனைப் பயணம், எதிர்பாராத வகையில் முடிவுக்கு வந்தது துரதிர்ஷ்டமே.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அணி, சொந்த மண்ணில் இப்படியொரு அவமானகரமான தோல்வியை சந்தித்ததை இன்னும் கூட ஜீரணிக்க முடியவில்லை. முதல் நாளில் இருந்தே சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் வகையில் ஆடுகளம் அமைந்திருந்தும் அஷ்வின், ஜடேஜா, ஜெயந்த் கூட்டணியின் தாக்குதல் அவ்வளவாக எடுபடவில்லை.
ஆனால், ஆஸ்திரேலிய ஸ்பின்னர்கள் ஸ்டீவ் கீப், நாதன் லயன் இருவரும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்பட்டு இந்திய பேட்ஸ்மேன்களை துளைத்தெடுத்தனர். கீப் இரண்டு இன்னிங்சிலும் தலா 6 விக்கெட் கைப்பற்றி உண்மையிலேயே மிரட்டி விட்டார். புனே டெஸ்ட் தோல்விக்கு எதிரணியின் பலத்தை விட, இந்திய வீரர்களின் அலட்சியமே காரணம் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.
தேவையில்லாமல் தூக்கி அடித்து விக்கெட் தானம் செய்தது, பீல்டிங்கில் மெத்தனமாக செயல்பட்டு பல கேட்ச் வாய்ப்புகளை வீணடித்தது, நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரும் டிஆர்எஸ் முறையை தவறாகக் கையாண்டது என தவறுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அடுக்கடுக்கான வெற்றிகளால் சற்று அலட்சியப் போக்குடன் விளையாடியதற்கு சரியான தண்டனை கிடைத்துவிட்டது. தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். இது எங்களுக்கு சரியான சமயத்தில் அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணிஎன்கிறார் கேப்டன் கோஹ்லி.
இரண்டரை நாளில் தோல்வியைத் தழுவியது ஏமாற்றமளிக்கிறது. கடைசி வரை போராட வேண்டும், களத்தில் நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்ற உறுதியை இந்திய பேட்ஸ்மேன்களிடம் பார்க்க முடியவில்லைஎன கண்டிக்கிறார் கவாஸ்கர்.

பல தரப்பில் இருந்தும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், ‘ஒரு போட்டியில் தோற்றதற்காக, தொடரையே இழந்துவிட்டோம் என்று அர்த்தமில்லை. இன்னும் நிறைய வாய்ப்பு இருக்கிறது. இந்திய வீரர்கள் கடுமையாகப் போராடி இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு சாதிப்பார்கள்என்ற சச்சினின் வார்த்தைகள் நம்பிக்கை அளிக்கின்றன. எதிர்வரும் போட்டிகளில் இந்திய வீரர்கள் அதை நிஜமாக்குவார்கள் என நம்பலாம்.
- ஷங்கர் பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக