ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

சரியான போட்டி

ராஜ்கோட்டில் முதல் முறையாக நடந்த டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்துக்கு எதிராக கடுமையாகப் போராடி டிரா செய்திருக்கிறது இந்தியா. சொந்த மண்ணில் நடக்கும் தொடரில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிலைமை தலைகீழாக இருந்தது.
முதல் இன்னிங்சில் மிகப் பெரிய ஸ்கோர் அடித்து நெருக்கடி கொடுத்ததுடன் முன்னிலையும் பெற்ற இங்கிலாந்து, கடைசி நாளில் டிக்ளேர் செய்து சவால் விட்டதால் ஆட்டத்தில் திடீர் விறுவிறுப்பு.அடுத்தடுத்து விக்கெட் சரிந்ததால் தோல்வி அபாயம் அச்சுறுத்திய நிலையில் கோஹ்லி, விஜய், அஷ்வின், ஜடேஜா ஆகியோர் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி டிரா செய்ய உதவினர். குறிப்பாக, கேப்டன் கோஹ்லியின் பொறுப்பான ஆட்டம் பாராட்டத்தக்கது. இவரது தலைமையில் விளையாடிய 18 டெஸ்டில் இந்தியா சந்தித்தது இரண்டு  தோல்விகள் மட்டுமே.
போட்டியை டிரா செய்வது எப்படி என்பதை இப்போது தெரிந்து கொண்டிருக்கிறோம். இதில் எங்களின் திறமை பற்றி சிலருக்கு சந்தேகம் இருந்தது உண்மைதான். அணியை காப்பாற்றுவதற்காகப் போராடுவது என்பது சரியான சவால். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வோம் என்று ஜடேஜாவிடம் கூறினேன். பதற்றம் அடையாமல் அவர் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது, தோல்வியை தவிர்க்க வெகுவாக உதவியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இதே போன்ற சூழ்நிலையை மீண்டும் எதிர்கொள்ள வேண்டி வரலாம். அப்போது இந்த அனுபவம் எங்களுக்கு நிச்சயம் உதவியாக இருக்கும்என்று கூறியிருக்கிறார் கோஹ்லி.
வங்கதேச அணியுடன் நடந்த 2வது டெஸ்டில் இங்கிலாந்து தோற்றதை பார்த்தபோது, இந்திய தொடரிலும் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறுவார்கள் என்றே கணிக்கப்பட்டது. ஆனால், இந்திய ஸ்பின்னர்களை விட ரஷித், மொயீன், அன்சாரி கூட்டணி மிகச் சிறப்பாக செயல்பட்டது ஆச்சரியமான விஷயம்.
இங்கிலாந்தை வீழ்த்தசுழல் வியூகம்மட்டுமே போதுமானது அல்ல என்பது நிரூபனமாகிவிட்டதால், இந்திய அணிக்கு சற்று நெருக்கடி ஏற்பட்டிருப்பதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.இந்திய ஆடுகளங்களில் ரன் குவிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கும் அலஸ்டர் குக், ஜோ ரூட் ஆகியோரை கட்டுப்படுத்துவதும் சவாலாக உருவெடுத்துள்ளது.
ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி அத்தனை சிறப்பான வெற்றிகளைக் குவித்தது இல்லை என்ற மோசமான வரலாறும் மிரட்டுவதால், சரியான போட்டி ஏற்பட்டுள்ளது. நம்பர் 1 அணியான இந்தியா இந்த சவாலை முறியடித்து வாகை சூடும் என எதிர்பார்க்கலாம்.
- ஷங்கர் பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக