ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

வெற்றி வியூகம்

கிரிக்கெட் விளையாட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து அணியை முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது வங்கதேசம்.
வெற்றி இலக்கான 273 ரன்களை துரத்திய இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 100 ரன் எடுத்த நிலையில், வங்கதேசம் வெற்றி பெறும் என்று யாரும் கற்பனை கூட செய்திருக்க முடியாது. ஆனால், 19 வயது இளம் சுழற்பந்துவீச்சாளர் மெகதி ஹசன் மிராசின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சரணடைந்தது, வங்கதேசத்தின் நீண்ட நாள் கனவை நனவாக்கியது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிராக மட்டும் டெஸ்ட் வெற்றியை வசப்படுத்தி இருந்த அந்த அணி, கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது உண்மையிலேயே பாராட்டுக்குரிய சாதனை தான்.
டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை இன்னும் கற்றுக்குட்டியாகவே கருதப்படும் வங்கதேசத்தின் இந்த வெற்றியால், இந்திய அணியும் அதிக உற்சாகம் அடைந்துள்ளது. நாளை இந்தியா வரும் இங்கிலாந்து அணி மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பலப்பரீட்சை நடத்தப் போகிறது. தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவுக்கு, அந்த அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ள அருமையான வாய்ப்பு இது.
சுழற்பந்துவீச்சுக்கு எதிராக இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறியது, அந்த அணிக்கு எதிராக வியூகங்களை வகுக்க இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லிக்கு நிச்சயம் உதவும்.சுழலுக்கு சாதகமான ஆடுகளங்களில் அஷ்வின், ஜடேஜா, அமித் மிஷ்ராவின் தாக்குதலை தங்களால் எந்த அளவுக்கு சமாளிக்க முடியும் என்ற கேள்வி, இப்போதே இங்கிலாந்து வீரர்களை நெருக்கடிக்குள்ளாக்கி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அனுபவம் இல்லாத இளம் வீரர் மெகதி ஹசனின் பந்துவீச்சுக்கே அப்படி தடுமாறியவர்கள், இந்தியாவின் சுழல் கூட்டணி ஒருங்கிணைந்து தொடுக்கும் தாக்குதலுக்கு ஈடு கொடுப்பது இமாலய சவாலாகவே இருக்கும்.
வங்கதேசத்துக்கு எதிராக அடைந்த தோல்வியை வைத்து இங்கிலாந்து அணியை எடை போடாதீர்கள். ஆடுகளம் உள்ளூர் அணிக்கு ஒத்துழைக்கும் வகையில் அமைக்கப்படும்போது இப்படி நடப்பது சகஜம் தான். டெஸ்ட் போட்டிகளில் ஸ்பின்னர்கள் பந்துவீச்சை தொடங்கும்போது வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
வெளிநாட்டு மைதானங்களிலும் வெற்றியை வசப்படுத்தினால் மட்டுமே வங்கதேச அணியின் திறமைக்கு நிஜமான அங்கீகாரம் கிடைக்கும். இந்திய தொடரில் காத்திருக்கும் சவாலுக்கு இங்கிலாந்து வீரர்கள் தயாராகவே இருக்கிறார்கள்என்கிறார் முன்னாள் நட்சத்திரம் இயான் போதம்.
இந்தியாவின் சுழல் வியூகத்தை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக