ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

ஏமாற்று வித்தை

எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிப்பதற்காகவும் விக்கெட்டுகளை சாய்ப்பதற்காகவும், வேண்டுமென்றே பந்தை சேதப்படுத்தும் ஏமாற்று வித்தை கிரிக்கெட்டில் மீண்டும் தலைகாட்டத் தொடங்கியிருக்கிறது.
சமீபத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் ஹோபர்ட் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின்போது, பபுள்கம் போன்ற இனிப்பு கலந்த எச்சிலைத் தடவி பந்தை சேதப்படுத்த முயற்சித்ததாக தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டு பிளெஸ்ஸி மீது புகார் எழுந்தது.
போட்டியின் வீடியோ பதிவை ஆய்வு செய்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தொழில்நுட்பக் குழுவினரின் அறிக்கை அடிப்படையில் ஐசிசி தலைமை செயலதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் எழுப்பிய இந்த குற்றச்சாட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய ஐசிசி போட்டி நடுவர் ஆண்டி பைகிராப்ட், ஹோபர்ட் டெஸ்டில் டு பிளெஸ்ஸிக்கான ஊதியம் முழுவதையும் அபராதமாக விதித்தார்.
தான் குற்றம் செய்யவில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக நின்ற டு பிளெஸ்ஸி, இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக ஐசிசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பந்தின் ஒரு பக்கத்தை பளபளப்பாக வைத்துக் கொள்வதற்காக எச்சில் தடவி ஆடையில் தேய்ப்பது கிரிக்கெட்டில் வழக்கமானது தான். இதில் எந்த அணியும் விதிவிலக்கு இல்லை.
ஐசிசி விதி 42.3ன் கீழ் தடை செய்யப்பட்ட செயற்கையான பொருள் எது என்பது குறித்து தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்பதே தென் ஆப்ரிக்க தரப்பு வாதம். அதனால்தான் டு பிளெஸ்ஸி தடை விதிக்கப்படாமல் வெறும் அபராதத்துடன் தப்பினார்.
இந்த சர்ச்சை ஓய்வதற்கு முன்பாகவே இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் ஆகியோரும் கூட பபுள்கம் கலந்த எச்சிலை தடவி பந்தை சேதப்படுத்த முயன்றதாக தகவல் வெளியானதால் பிரச்னை பெரிதானது.
களத்தில் இருந்த நடுவர்கள் இந்த சம்பவங்களை கவனித்து புகார் செய்யாததாலும், குற்றச்சாட்டை பதிவு செய்வதற்கான கால வரம்பு கடந்துவிட்டதாலும் ஐசிசி இதை கண்டுகொள்ளவில்லை.‘இந்திய வீரர்களின் கவனத்தை சிதைப்பதற்காகவே இங்கிலாந்து புலனாய்வு பத்திரிகை உள்நோக்கத்துடன் இந்த பொய்யான குற்றச்சாட்டை எழுப்பியுள்ளது. அதை பொருட்படுத்த மாட்டோம்என்கிறார் கோஹ்லி.
பந்தை சேதப்படுத்தும் ஏமாற்று வித்தையை ஒரு கலையாகவே செய்யும் வீரர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 1976-77ல் இங்கிலாந்து அணி இந்தியா வந்து விளையாடியபோது, மெட்ராஸில் நடந்த 3வது டெஸ்டில் இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜான் லீவர் செய்த மோசடி வெளியானபோது மிகப் பெரிய சர்ச்சை வெடித்தது.
தலையில் அணிந்திருந்தஹெட் பேண்ட்பட்டையில் வேசலீன் கிரீமை தடவி, அதை வைத்து பந்தை பளபளப்பாக்கியது தான் ஜான் லீவர் செய்த தகிடுதத்தம். இதனால் பந்து எதிராபாராத வகையில் ஸ்விங் ஆகி இந்திய பேட்ஸ்மேன்களை திக்குமுக்காட வைத்துவிட்டது. அந்த தொடரில் இந்தியா ஒவ்வொரு இன்னிங்சிலும் 200 ரன்னை தாண்டுவதற்கே பிரம்மப்பிரயத்தனம் செய்ய வேண்டி இருந்தது.
டெல்லியில் நடந்த முதல் டெஸ்டில் அறிமுக வீரராகக் களமிறங்கிய லீவர் முதல் இன்னிங்சில் 7 விக்கெட், 2வது இன்னிங்சில் 3 விக்கெட் அள்ள, இந்திய அணி பரிதாபமாக இன்னிங்ஸ் தோல்வி கண்டது. டிவி நேரடி ஒளிபரப்பில் தற்போது அதிநவீன கேமராக்கள் உபயோகப்படுத்தப் படுவதால் வீரர்களின் ஒவ்வொரு அசைவும் பல்வேறு கோணங்களில் பதிவாகிறது. தவறு செய்பவர்கள் தப்பிக்க வாய்ப்பு இல்லை என்றாலும், ‘பந்தை சேதப்படுத்துவது பற்றிய விதிகளில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. ஐசிசி அதை தெளிவுபடுத்த வேண்டும்என்று இங்கிலாந்து கேப்டன் அலஸ்டர் குக் கூறியுள்ளதையும் அலட்சியப்படுத்த முடியாது.

விதிமுறைகள் பலவீனமாக இருந்தாலும், விளையாட்டில் வீரர்கள் நேர்மையை கடைப்பிடித்தாலே இது போன்ற சர்ச்சைகளை தவிர்த்து விடலாம்.
- ஷங்கர் பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக