ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

அச்சம் அர்த்தமற்றது

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரின் 10வது சீசன் நாளை தொடங்கப் போகிறது. உலகின் மிகப் பணக்கார கிரிக்கெட் தொடர் என புகழ் பெற்றுள்ள இதில் பங்கேற்கும் புனே சூப்பர்ஜயன்ட் அணியின் கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக கிளென் மேக்ஸ்வெல் செயல்பட உள்ளனர்.
நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வழிநடத்தப் போகிறார் டேவிட் வார்னர். மூவருமே ஆஸ்திரேலியர்கள்.சமீபத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளிடையே நடந்த டெஸ்ட் தொடரில் இரு அணி வீரர்களுக்கும் இடையே அடிக்கடி வார்த்தைப் போர் வெடித்ததால், களத்தில் ஒருவிதமான பதற்றம் இருந்து கொண்டே இருந்தது.
தலைமையேற்று வழி நடத்திய கேப்டன்கள் கோஹ்லி, ஸ்மித் இருவருமே மோதல் போக்கை கடைப்பிடித்தது பிரச்னையை மேலும் தீவிரமாக்கியது. கோஹ்லி இயல்பாகவே ஆக்ரோஷமான அணுகுமுறையைக் கையாள்பவர். அவருக்கு இணையாக ஸ்மித்தும் சிலிர்த்துக் கொண்டு நிற்க, நடுவர்களின் பாடு திண்டாட்டமாகி விட்டது.
டெஸ்ட் தரவரிசையில் முன்னிலை வகிக்கும் தரமான அணிகள் மோதும்போது இப்படி சர்ச்சைகள் எழுவதை தவிர்க்க முடியாது. இரு அணிகளுமே வெற்றியை குறிவைத்து முழுவீச்சில் தாக்குதல் நடத்தியதால், நெருக்கடியான கட்டங்களில் சில தவறான வார்த்தைகளை பிரயோகிக்க நேர்ந்ததை அவர்களால் தவிர்க்க முடியவில்லை.
தொடரை கைப்பற்றிய பின்னர், ‘ஆஸ்திரேலிய வீரர்களுடனான நட்பு முறிந்துவிட்டதுஎன்று கோஹ்லி வெளிப்படையாக அறிவித்தது கசப்புணர்வை மேலும் அதிகரிக்கவே செய்தது. அதே சமயம், ஸ்மித் தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
கோஹ்லி உணர்ச்சி வேகத்தில் அப்படி சொல்லி இருக்கலாம். ஆனால், அவர் விரைவில் தனது நிலையை மாற்றிக்கொள்வார் என ஆஸி. முன்னாள் பிரபலங்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்தனர்.டெஸ்ட் தொடரில் முட்டிக்கொண்டு நின்றவர்கள், இப்போது ஐபிஎல் போட்டியில் கை கோர்த்து விளையாட வேண்டிய கட்டாயம். ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்த ஏழு வீரர்கள் பல்வேறு அணிகளுக்காக களமிங்கப் போகிறார்கள். ஸ்மித், மேக்ஸ்வெல் இருவருக்கும் கேப்டன் பொறுப்பு வேறு அளிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக அவர்களை இந்திய ரசிகர்கள் கேலி செய்து கேவலமாக நடத்தப் போகிறார்கள்... என்று ஆஸ்திரேலிய மீடியா தூபம் போட்டிருக்கிறது.
அதிலும், புனே அணியின் கேப்டனாக இருந்த டோனியை பதவிநீக்கம் செய்து, அவருக்கு பதிலாக ஸ்மித்திடம் பொறுப்பை ஒப்படைத்திருப்பதால் ரசிகர்கள் மிகவும் ஆத்திரம் அடைந்துள்ளனர். நிச்சயமாக அதை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய வீரர்களை அவமதிப்பார்கள் என்கிறது பாக்ஸ்போர்ட்ஸ் இணையதளம்.

இத்தகைய அச்சம் அர்த்தமற்றது. இந்திய ரசிகர்கள் பக்குவமானவர்கள். திறமையான ஆட்டத்துக்கே முன்னுரிமை கொடுப்பவர்கள். எதிரணி வீரர் சிறப்பாக விளையாடும்போதும் அதை பாராட்டத் தயங்காதவர்கள் என்பதை பல்வேறு சமயங்களில் நிரூபித்துள்ளார்கள். ஐபிஎல் தொடரின்போதும் எந்தவிதமான பாரபட்சமும் காட்டாமல் ஆஸ்திரேலிய மீடியாவின் தவறான பிரசாரத்தை தவிடுபொடியாக்குவார்கள்.   
- ஷங்கர் பார்த்தசாரதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக