ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

ராயல்டி அபஸ்வரம்

இசையமைப்பாளர் இளையராஜா - பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இடையே ஏற்பட்டுள்ள மோதல் இசை ரசிகர்களின் காதில் அபஸ்வரமாய் ஒலிக்கிறது.
இருவரும் இணைந்து இரண்டாயிரத்துக்கும் அதிகமான இனிய பாடல்களை வழங்கி தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்திருக்கிறார்கள். எஸ்பிபி பாடத் தொடங்கி அரை நூற்றாண்டு பூர்த்தியானதைக் கொண்டாடும் வகையில், அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்.அந்த நிகழ்ச்சிகளில் முன் அனுமதி பெறாமல் தான் இசையமைத்த பாடல்களை பாடக் கூடாது என்று வழக்கறிஞர் மூலமாக இளையராஜா நோட்டீஸ் அனுப்பியதுதான் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அனுமதியின்றி எனது பாடல்களை இசைத்தால் அது அப்பட்டமான காப்புரிமை மீறலாகும். இதற்காக பெருந்தொகையை அபராதமாக செலுத்த நேரிடுவதுடன், சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்என்பதே நோட்டீசின் சாராம்சம்.
நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்த எஸ்பிபி மகன் சரண், பாடகி சித்ரா, ஒருங்கிணைப்பாளர்கள், அரங்க நிர்வாகிகள் ஆகியோருக்கும் இதே வகையிலான நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.‘ஏற்கனவே பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியபோதெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காமல், இப்போது அமெரிக்காவில் நடத்தும்போது திடீரென நோட்டீஸ் அனுப்பியுள்ளது ஏன் என்று தெரியவில்லை.
இது தொடர்பான சட்டம் என்ன என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும், சட்டத்தை மதிக்க வேண்டியது எனது கடமை. இனி மேடைகளில் இளையராஜாவின் பாடல்களை பாடப்போவதில்லை. ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளை நடத்தியாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இறைவன் அருளால் பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறேன். இனி நடக்கும் நிகழ்ச்சிகளில் அந்த பாடல்களைப் பாடி நிறைவு செய்வேன். ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்என்று தனது முகநூல் பக்கத்தில் எஸ்பிபி வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் சூடான வாதங்களை கிளப்பிவிட்டிருக்கிறது.
இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், பாடகருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளதுடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டதை கடுமையாகக் கண்டித்துள்ளார்.
பாடலாசிரியர் மதன் கார்க்கியோ, ‘இளையராஜா தரப்பின் நடவடிக்கை நியாயமானதே. சட்டப்படி ஒரு பாடல் இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோருக்கு மட்டுமே உரிமையானதாகும். இந்தியாவில் பாடல்கள் மற்றும் இசைத் தொகுப்புகளுக்கான காப்புரிமை விவகாரங்களை ஐபிஆர்எஸ் என்ற அமைப்பு தான் கவனித்து வருகிறது. இந்த அமைப்பின் விதிமுறைகளின் படி இசை நிகழ்ச்சிகளில் வசூலிக்கப்படும் தொகையின் குறிப்பிட்ட சதவீதம், பாடலின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும்.
இளையராஜா தரப்பில் இந்த நடவடிக்கைகளை அவர்களாகவே முனைப்புடன் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் இசை நிகழ்ச்சிகளை நடத்தினால் கூட தயாரிப்பாளர், பாடலாசிரியரிடம் முன் அனுமதி பெற வேண்டும். இதை மீறினால், இளையராஜா மீதும் வழக்கு தொடரலாம். எனவே இந்த நடவடிக்கையை முழுமனதுடன் வரவேற்கிறேன்என்கிறார்.

இசைத் துறையில் ராயல்டி தொடர்பான சர்ச்சை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. மைக்கேல் ஜாக்சன் இறந்த பிறகும் அவரது பாடல்கள்  ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருமானத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் இதை அத்தனை கடுமையாக நடைமுறைப்படுத்துவது இல்லை. இந்த விஷயத்தில் பணத்தை பெரிதாக நினைக்காமல் 40 ஆண்டு நட்புக்கு மரியாதை கொடுத்து, இருவரும் சுமூகமான தீர்வுக்கு வழிவகுக்க வேண்டும் என்பதே இசை ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
- ஷங்கர் பார்த்தசாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக