செவ்வாய், 25 அக்டோபர், 2016

நல்ல மாற்றம்

நியூசிலாந்துக்கு எதிராக மொகாலியில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி கேப்டன் டோனி 4வது வீரராகக் களமிறங்கி ஆச்சரியப்படுத்தினார். தொடக்க காலத்தில், ஒரு சில போட்டிகளில் முன் வரிசையில் இறங்கி தனது அதிரடி ஆட்டத்தால் சலசலப்பை ஏற்படுத்தியவர், அதன் பிறகு பின் வரிசையில் விளையாடுவதை வழக்கமாக்கிக் கொண்டார்.


பரபரப்பான கடைசி கட்டத்தில் கொஞ்சமும் பதற்றம் அடையாமல், சூழ்நிலைக்கேற்ப மிக சாதுர்யமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை வசப்படுத்துவதில் தனி முத்திரையும் பதித்தார்.பார்மில் இல்லாதபோது ஏற்படும் தடுமாற்றத்துக்கு டோனி மட்டும் விதிவிலக்கா என்ன?


தொடர்ச்சியாக போட்டிகளில் விளையாடி வருவதால் ஏற்படும் சோர்வும் சேர்ந்து கொண்டதால், சமீபத்திய போட்டிகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முடியாமல் விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிட்டது. குறிப்பாக, போட்டியை வெற்றிகரமாக முடிப்பதில் வல்லவர் என்ற தனித்திறன் கேள்விக்குறியானது. டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்ற இளம் வீரர் விராத் கோஹ்லி, வெற்றிகளைக் குவித்து வருவதுடன் தரவரிசையில் இந்திய அணியை மீண்டும் முதலிடத்துக்கு முன்னேற வைத்துள்ளதால் கூடுதல் நெருக்கடி.


இப்படி ஒரு இக்கட்டான நிலையில் தான், மொகாலி போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் 4வது வீரராக வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். துணை கேப்டன் கோஹ்லியுடன் இணைந்து அவர் 151 ரன் சேர்த்ததே வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஒருநாள் போட்டிகளில் 9,000 ரன் என்ற சாதனை மைல்கல்லை எட்டியது, அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சச்சினை முந்தியது என பல சிறப்பான விஷயங்களும் டோனிக்கு பெருமை சேர்த்தன.


‘நீண்ட காலமாக பின் வரிசையில் விளையாடிவிட்டேன். இதனால் ஆட்டத்தின் போக்கை பற்றி கவலைப்படாமல் சுதந்திரமாக விளையாடுவது சிரமமாகிவிட்டது. எனவே தான் ஆட்டத்தை முடிக்கும் பொறுப்பை மற்றவர்களிடம் விட்டுவிட முடிவு செய்தேன். கோஹ்லியுடன் இணைந்து பேட் செய்ததும் பல வகையில் உதவியாக இருந்தது. அணியின் வெற்றிக்காக அவர் முழு அர்ப்பணிப்புடன் விளையாடுகிறார்’ என்று மனம் திறந்துள்ளார் டோனி.


கோஹ்லியின் ஆட்டமும் போட்டிக்கு போட்டி மெருகேறிக் கொண்டே வருகிறது. அடுத்த சாதனை நாயகனாக உருவாகி வருகிறார். கேப்டன், துணை கேப்டன் இருவரும் நல்ல புரிதலுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது அணியின் நலனுக்கு மிகவும் முக்கியம். தங்களுக்குள் எந்தவிதமான கருத்து மோதலும் இல்லை என்பதை சிறப்பான ஆட்டத்தின் மூலம் இவர்கள் வெளிப்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக