ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

வரம்பு மீறலாமா?

விளையாட்டு போட்டிகளின் நேர்முக வர்ணனையை கேட்டு ரசிப்பது ஒரு இனிமையான அனுபவம். அகில இந்திய வானொலியில் ஒலிபரப்பாகும் கிரிக்கெட் வர்ணனையை கேட்பதற்கென்றே ரசிகர்கள் தவம் கிடந்த நாட்கள் உண்டு.
டிரான்சிஸ்டர் ரேடியோக்களை காதுகளில் ஒட்டிக் கொண்டு அலைவார்கள். டிவி நேரடி ஒளிபரப்பு வந்த பிறகும் கூட வர்ணனையாளர்களுக்கான முக்கியத்துவம் குறையவில்லை.தொலைக்காட்சிப் பெட்டியின் ஒலி அளவை குறைத்துவிட்டு அப்துல் ஜபார், கூத்தபிரான், ராமமூர்த்தி ஆகியோரது அழகிய தமிழ் வர்ணனையுடன் போட்டிகளை ரசித்தவர்கள் ஏராளம்.
அப்போதெல்லாம் வர்ணனையாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும். எதையெல்லாம் செய்யக் கூடாது என்பதற்கான விதிமுறைகள் அடங்கிய கையேட்டில் கையெழுத்திட்ட பிறகே ஒப்பந்தத்தை உறுதி செய்வார்கள்.
மொழி ஆளுமை, விளையாட்டின் நுணுக்கங்கள் பற்றிய தெளிவான அறிவு, களத்தில் நடக்கும் நிகழ்வுகளை ரசிகர்களின் மனக் கண்ணில் காட்சிப்படுத்தக் கூடிய வல்லமை, புள்ளி விவரங்களை தொகுக்கும் திறன், வியூகங்களை அலசும் விவேகம் என்று பல்வேறு அம்சங்களையும் கவனித்து தான் இவர்களை தேர்வு செய்வார்கள்.
களத்தில் இருக்கும் வீரர்களை தரக்குறைவாக பேசக் கூடாது, அவர்களது செயல்பாடுகளை கடுமையாக விமர்சிக்கக் கூடாது, எந்த ஒரு அணிக்கும் ஆதரவாக ஒருதலைப்பட்சமான கருத்துகளை சொல்லக் கூடாது என்பதெல்லாம் அடிப்படையான விதிமுறைகள்.
இப்போது எல்லாமே தலைகீழ். வர்ணனையாளர்களுக்கான இலக்கணம் மாறிவிட்டது. பெரும்பாலும் முன்னாள் வீரர்களேமைக்பிடிக்கிறார்கள். விளையாடிக் கொண்டிருப்பவர்களின் சிறு சிறு தவறுகளைக் கூட பூதக்கண்ணாடி கொண்டு பார்த்து பூதாகரமாக்கி, கிண்டலடித்து கேவலப்படுத்துகிறார்கள்.
சமீபத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக நடந்த ஐபிஎல் லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் போலார்டை கடுமையான வார்த்தைகளால் காய்ச்சி எடுத்தார் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ரேக்கர்.
முன் வரிசையில் களமிறங்கி பேட் செய்யும் அளவுக்கு போலார்டு திறமையானவர் அல்ல. அதற்கான அறிவு அவரிடம் இல்லை. நான்கு அல்லது ஐந்து ஓவர் தான் அவரால் தாக்குப்பிடிக்க முடியும். அதற்கு மேல் அவர் சரிப்பட்டு வர மாட்டார்என்று சகட்டு மேனிக்கு போட்டுத் தாக்கினார்.
போலார்டு 17 பந்தில் 17 ரன் எடுத்ததை தான் மஞ்ரேக்கர் இப்படி வர்ணித்தார்! இதை கேள்விப்பட்ட போலார்டுஉங்கள் வாயில் இருந்து நல்ல விஷயம் ஏதாவது வெளிப்படும் என நினைக்கிறீர்களா... பேசுவதற்காக காசு வாங்குகிறீர்கள், உங்களின் வாய்வழி வயிற்றுப்போக்கை! தொடருங்கள்என்று ட்விட்டர் இணையதளத்தில் பதிவிட்டு பதிலடி கொடுத்தார்.
அவருக்கு ஆதரவாக கிரிக்கெட் பிரபலங்களும், ரசிகர்களும் வரிந்துகட்ட கண்டனக் கணைகள் வைரலாகி அனல் பறக்கிறது.அடுத்தடுத்த லீக் ஆட்டங்களில் மும்பை இந்தியன்ஸ் வெற்றிக்கு போலார்டின் அதிரடி பேட்டிங் முக்கியப் பங்களிக்க, மஞ்ரேக்கர் இப்போது அசடு வழிந்துகொண்டிருக்கிறார்.

வர்ணனையில் இயல்பான நகைச்சுவை இழையோடலாம், வன்மம் தலைதூக்கி வரம்பு மீறக்கூடாது என்பது அவருக்கு மட்டுமல்ல அனைவருக்குமே பொருந்தும்.
- ஷங்கர் பார்த்தசாரதி

அச்சம் அர்த்தமற்றது

ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரின் 10வது சீசன் நாளை தொடங்கப் போகிறது. உலகின் மிகப் பணக்கார கிரிக்கெட் தொடர் என புகழ் பெற்றுள்ள இதில் பங்கேற்கும் புனே சூப்பர்ஜயன்ட் அணியின் கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக கிளென் மேக்ஸ்வெல் செயல்பட உள்ளனர்.
நடப்பு சாம்பியன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வழிநடத்தப் போகிறார் டேவிட் வார்னர். மூவருமே ஆஸ்திரேலியர்கள்.சமீபத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளிடையே நடந்த டெஸ்ட் தொடரில் இரு அணி வீரர்களுக்கும் இடையே அடிக்கடி வார்த்தைப் போர் வெடித்ததால், களத்தில் ஒருவிதமான பதற்றம் இருந்து கொண்டே இருந்தது.
தலைமையேற்று வழி நடத்திய கேப்டன்கள் கோஹ்லி, ஸ்மித் இருவருமே மோதல் போக்கை கடைப்பிடித்தது பிரச்னையை மேலும் தீவிரமாக்கியது. கோஹ்லி இயல்பாகவே ஆக்ரோஷமான அணுகுமுறையைக் கையாள்பவர். அவருக்கு இணையாக ஸ்மித்தும் சிலிர்த்துக் கொண்டு நிற்க, நடுவர்களின் பாடு திண்டாட்டமாகி விட்டது.
டெஸ்ட் தரவரிசையில் முன்னிலை வகிக்கும் தரமான அணிகள் மோதும்போது இப்படி சர்ச்சைகள் எழுவதை தவிர்க்க முடியாது. இரு அணிகளுமே வெற்றியை குறிவைத்து முழுவீச்சில் தாக்குதல் நடத்தியதால், நெருக்கடியான கட்டங்களில் சில தவறான வார்த்தைகளை பிரயோகிக்க நேர்ந்ததை அவர்களால் தவிர்க்க முடியவில்லை.
தொடரை கைப்பற்றிய பின்னர், ‘ஆஸ்திரேலிய வீரர்களுடனான நட்பு முறிந்துவிட்டதுஎன்று கோஹ்லி வெளிப்படையாக அறிவித்தது கசப்புணர்வை மேலும் அதிகரிக்கவே செய்தது. அதே சமயம், ஸ்மித் தனது தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
கோஹ்லி உணர்ச்சி வேகத்தில் அப்படி சொல்லி இருக்கலாம். ஆனால், அவர் விரைவில் தனது நிலையை மாற்றிக்கொள்வார் என ஆஸி. முன்னாள் பிரபலங்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்தனர்.டெஸ்ட் தொடரில் முட்டிக்கொண்டு நின்றவர்கள், இப்போது ஐபிஎல் போட்டியில் கை கோர்த்து விளையாட வேண்டிய கட்டாயம். ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்த ஏழு வீரர்கள் பல்வேறு அணிகளுக்காக களமிங்கப் போகிறார்கள். ஸ்மித், மேக்ஸ்வெல் இருவருக்கும் கேப்டன் பொறுப்பு வேறு அளிக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக அவர்களை இந்திய ரசிகர்கள் கேலி செய்து கேவலமாக நடத்தப் போகிறார்கள்... என்று ஆஸ்திரேலிய மீடியா தூபம் போட்டிருக்கிறது.
அதிலும், புனே அணியின் கேப்டனாக இருந்த டோனியை பதவிநீக்கம் செய்து, அவருக்கு பதிலாக ஸ்மித்திடம் பொறுப்பை ஒப்படைத்திருப்பதால் ரசிகர்கள் மிகவும் ஆத்திரம் அடைந்துள்ளனர். நிச்சயமாக அதை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய வீரர்களை அவமதிப்பார்கள் என்கிறது பாக்ஸ்போர்ட்ஸ் இணையதளம்.

இத்தகைய அச்சம் அர்த்தமற்றது. இந்திய ரசிகர்கள் பக்குவமானவர்கள். திறமையான ஆட்டத்துக்கே முன்னுரிமை கொடுப்பவர்கள். எதிரணி வீரர் சிறப்பாக விளையாடும்போதும் அதை பாராட்டத் தயங்காதவர்கள் என்பதை பல்வேறு சமயங்களில் நிரூபித்துள்ளார்கள். ஐபிஎல் தொடரின்போதும் எந்தவிதமான பாரபட்சமும் காட்டாமல் ஆஸ்திரேலிய மீடியாவின் தவறான பிரசாரத்தை தவிடுபொடியாக்குவார்கள்.   
- ஷங்கர் பார்த்தசாரதி 

அப்பட்டமான அநாகரீகம்

நாகரீக உலகில் தான் வாழ்கிறோமா? இல்லை... காட்டுமிராண்டிகள் காலத்திலா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது, சிவசேனா எம்பி ரவீந்திர கெயிக்வாட் நடந்துகொண்ட விதம்.
பிசினஸ் வகுப்பில் பயணிப்பதற்கான டிக்கெட் வாங்கிவிட்டு, புனேவில் இருந்து டெல்லி செல்வதற்காக ஏர் இந்தியா விமானத்தில் ஏறினார் கெயிக்வாட். அந்த விமானத்தில் அனைத்து இருக்கைகளும் எகானமி வகுப்புக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன. சொகுசு வசதி இல்லை.
வேறு விமானத்தில் செல்லுமாறு ஊழியர்கள் வலியுறுத்தியதை ஏற்காமல் தொடர்ந்து பயணம் செய்தவர், டெல்லி வந்த பிறகும் இறங்காமல் இருக்கையிலேயே அமர்ந்திருந்தார். இதுபற்றி மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர் வந்து சமாதானப்படுத்த முயற்சி செய்தார். எதையும் காதில் வாங்காத கெயிக்வாட், வெறிபிடித்தவர் போல அந்த 60 வயது மேலாளரின் சட்டையை கிழித்து, மூக்குக் கண்ணாடியை உடைத்ததுடன் நில்லாமல் செருப்பை கழட்டி 25 முறை அடித்து தனது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த அநாகரீகமான செயல் வைரல் வீடீயோவாக சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பானது. தனது செயலுக்காக கொஞ்சமும் வருத்தப்படாத கெயிக்வாட், அதை நியாயப்படுத்தும் வகையில் திமிராகப் பேட்டி கொடுத்தது பிரச்னையை மேலும் தீவிரமாக்கியது.
ஊழியரை தாக்கி தரக்குறைவாக நடந்து கொண்ட எம்பி, இனி தங்கள் விமானத்தில் பயணம் செய்ய தடை விதிக்கப்படுவதாக அறிவித்தது ஏர் இந்தியா நிர்வாகம். மற்ற விமான நிறுவனங்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து கை கோர்த்துக் கொண்டதால் நிலைமை மோசமானது. கடுமையான பிரிவுகளின் கீழ் டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
விமானப் பயணம் இனி சாத்தியமில்லை என்ற நிலையில், மும்பை செல்ல ரயிலில் ஏறினார் கெயிக்வாட். இடையிலேயே இறங்கி தலைமறைவாகிவிட்டார். அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடு முழுவதும் கண்டனக் குரல் ஓங்கி ஒலித்தாலும், சிவசேனா தரப்பில் எந்த பதிலும் இல்லை.
அதோடு நிறுத்தியிருந்தால் கூட பரவாயில்லை. கெயிக்வாடின் உஸ்மனாபாத் தொகுதியில் ஏர் இந்தியா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முழு அடைப்பு போராட்டம் நடந்திருக்கிறது. மாநிலங்களவையில் காங்கிரஸ், சமாஜ்வாதி உறுப்பினர்கள் செருப்படி புகழ் எம்பிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார்கள்.
சட்டம் அனைவருக்கும் பொதுவானது. எம்பிக்கும் அது பொருந்தும். விமான சேவையின் பாதுகாப்பு அம்சங்களில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லைஎன்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் அஷோக் கஜபதி ராஜு கூறியிருப்பது ஆறுதல் அளிக்கிறது. மக்கள் பிரதிநிதி என்ற வகையில் சட்டத்தின் மான்பைக் காக்க வேண்டிய ஒருவர், கொஞ்சம் கூட மனிதாபிமானமே இல்லாமல் ஒரு மூத்த அதிகாரியை மூர்க்கத்தனமாக தாக்கி இருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

இது போன்ற அத்துமீறல்களுக்கு நீதிமன்றம் தான் உறுதியான தீர்ப்பின் மூலம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியம். வைப்பார்கள் என நம்பலாம்.
- ஷங்கர் பார்த்தசாரதி

ராயல்டி அபஸ்வரம்

இசையமைப்பாளர் இளையராஜா - பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இடையே ஏற்பட்டுள்ள மோதல் இசை ரசிகர்களின் காதில் அபஸ்வரமாய் ஒலிக்கிறது.
இருவரும் இணைந்து இரண்டாயிரத்துக்கும் அதிகமான இனிய பாடல்களை வழங்கி தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்திருக்கிறார்கள். எஸ்பிபி பாடத் தொடங்கி அரை நூற்றாண்டு பூர்த்தியானதைக் கொண்டாடும் வகையில், அமெரிக்காவில் இசை நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்.அந்த நிகழ்ச்சிகளில் முன் அனுமதி பெறாமல் தான் இசையமைத்த பாடல்களை பாடக் கூடாது என்று வழக்கறிஞர் மூலமாக இளையராஜா நோட்டீஸ் அனுப்பியதுதான் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அனுமதியின்றி எனது பாடல்களை இசைத்தால் அது அப்பட்டமான காப்புரிமை மீறலாகும். இதற்காக பெருந்தொகையை அபராதமாக செலுத்த நேரிடுவதுடன், சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்என்பதே நோட்டீசின் சாராம்சம்.
நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்த எஸ்பிபி மகன் சரண், பாடகி சித்ரா, ஒருங்கிணைப்பாளர்கள், அரங்க நிர்வாகிகள் ஆகியோருக்கும் இதே வகையிலான நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன.‘ஏற்கனவே பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியபோதெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காமல், இப்போது அமெரிக்காவில் நடத்தும்போது திடீரென நோட்டீஸ் அனுப்பியுள்ளது ஏன் என்று தெரியவில்லை.
இது தொடர்பான சட்டம் என்ன என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும், சட்டத்தை மதிக்க வேண்டியது எனது கடமை. இனி மேடைகளில் இளையராஜாவின் பாடல்களை பாடப்போவதில்லை. ஏற்கனவே ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளை நடத்தியாக வேண்டிய கட்டாயம் உள்ளது. இறைவன் அருளால் பல இசையமைப்பாளர்களுடன் இணைந்து ஏராளமான பாடல்களை பாடியிருக்கிறேன். இனி நடக்கும் நிகழ்ச்சிகளில் அந்த பாடல்களைப் பாடி நிறைவு செய்வேன். ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்என்று தனது முகநூல் பக்கத்தில் எஸ்பிபி வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் சூடான வாதங்களை கிளப்பிவிட்டிருக்கிறது.
இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன், பாடகருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளதுடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டதை கடுமையாகக் கண்டித்துள்ளார்.
பாடலாசிரியர் மதன் கார்க்கியோ, ‘இளையராஜா தரப்பின் நடவடிக்கை நியாயமானதே. சட்டப்படி ஒரு பாடல் இசையமைப்பாளர், பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆகியோருக்கு மட்டுமே உரிமையானதாகும். இந்தியாவில் பாடல்கள் மற்றும் இசைத் தொகுப்புகளுக்கான காப்புரிமை விவகாரங்களை ஐபிஆர்எஸ் என்ற அமைப்பு தான் கவனித்து வருகிறது. இந்த அமைப்பின் விதிமுறைகளின் படி இசை நிகழ்ச்சிகளில் வசூலிக்கப்படும் தொகையின் குறிப்பிட்ட சதவீதம், பாடலின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படும்.
இளையராஜா தரப்பில் இந்த நடவடிக்கைகளை அவர்களாகவே முனைப்புடன் மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் இசை நிகழ்ச்சிகளை நடத்தினால் கூட தயாரிப்பாளர், பாடலாசிரியரிடம் முன் அனுமதி பெற வேண்டும். இதை மீறினால், இளையராஜா மீதும் வழக்கு தொடரலாம். எனவே இந்த நடவடிக்கையை முழுமனதுடன் வரவேற்கிறேன்என்கிறார்.

இசைத் துறையில் ராயல்டி தொடர்பான சர்ச்சை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. மைக்கேல் ஜாக்சன் இறந்த பிறகும் அவரது பாடல்கள்  ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருமானத்தை கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவில் இதை அத்தனை கடுமையாக நடைமுறைப்படுத்துவது இல்லை. இந்த விஷயத்தில் பணத்தை பெரிதாக நினைக்காமல் 40 ஆண்டு நட்புக்கு மரியாதை கொடுத்து, இருவரும் சுமூகமான தீர்வுக்கு வழிவகுக்க வேண்டும் என்பதே இசை ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
- ஷங்கர் பார்த்தசாரதி

அளவுக்கு மிஞ்சினால்

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளிடையே நடந்து வரும் டெஸ்ட் போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு சரியான விருந்தாகி இருக்கிறது. வெற்றியை வசப்படுத்துவதற்காக இரு தரப்பும் களத்தில் ஆக்ரோஷமாக மோதி வருவதால் ஆட்டத்தில் அனல் பறக்கிறது.
எதிரணி வீரரின் கவனத்தை சிதைக்கும் வகையில் கிண்டலடித்து வார்த்தைப்போருக்கு இழுக்கும் போக்கும் அதிகரித்துள்ளது.வழக்கமாக, ஆஸ்திரேலிய அணி வீரர்கள் தான் இதை ஒரு வியூகமாகவே உபயோகிப்பார்கள். வம்புக்கு இழுப்பதில் அவர்களுக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம் என்ற அளவுக்கு அவர்களின் அட்டூழியம் கொடிகட்டிப் பறக்கும்.
கிளென் மெக்ராத், ஸ்டீவ் வாஹ், ஷேன் வார்ன், கில்கிறிஸ்ட் போன்ற மகத்தான வீரர்கள் கூட, இந்தஸ்லெட்ஜிங்ஆயுதத்தை பிரயோகிக்க தயங்கியதே இல்லை.நடப்பு தொடரில் இந்திய வீரர்களும் இதை கையாளத் தொடங்கி இருக்கிறார்கள். குறிப்பாக, கேப்டன் கோஹ்லி இதில் சற்று தீவிரமாகவே இறங்கியிருக்கிறார்.
ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர்கள் எதிராபாராத வகையில் ஆதிக்கம் செலுத்துவதும், அவர்களை சமாளித்து ரன் குவிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறுவதும் கோஹ்லியை விரக்தியில் ஆழ்த்தியிருக்க வேண்டும். அந்த பாதிப்பில் தான் ஆஸி. கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் தொடக்க வீரர் ரென்ஷாவை கேலியும், கிண்டலுமாக வெறுப்பேற்றி இருக்கிறார். நல்ல வேளையாக நிலைமை எல்லை மீறவில்லை. நடுவர்களும் சிறப்பாக செயல்பட்டு களத்தில் பெரிய அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
கோஹ்லி மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகம் இல்லை. அவரது ஆக்ரோஷமான செயல்பாடு மற்ற வீரர்களையும் துடிப்பாக விளையாட ஊக்குவித்தது உண்மை தான். ஆனால், அவர் கேப்டன் பொறுப்பேற்ற பிறகும் அதே வகையான அணுகுமுறையை கையாள்வது சரியல்ல. இதனால் சக வீரர்களுக்கும் நெருக்கடி அதிகரித்து விடுகிறது. அஷ்வின் முகத்தை பார்த்தாலே அது தெளிவாகத் தெரிகிறது. கோஹ்லி மீதான மரியாதை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறதுஎன்கிறார் ஆஸி. முன்னாள் விக்கெட் கீப்பர் இயான் ஹீலி.
கிரிக்கெட்டில் இதெல்லாம் சகஜம். இதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. உண்மையில் இரண்டு கேப்டன்களுமே தங்களின் பொறுப்பை உணர்ந்து சரியாகவே செயல்படுகிறார்கள். அதனால் தான் நிலைமை கட்டுக்குள் இருக்கிறதுஎன்கிறார் மற்றொரு பிரபலமான கேடிச்.

இரு அணி வீரர்களுமே இது போன்ற தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்தாமல், தங்களின் திறமை மீது நம்பிக்கை வைத்து விளையாடுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
- ஷங்கர் பார்த்தசாரதி

தவறாக உபயோகிக்கலாமா?

டிஆர்எஸ்... நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யக் கோரும் விதிமுறை. களத்தில் சில விநாடிகளுக்குள்ளாக பல்வேறு நிகழ்வுகளை கூர்மையாகக் கவனித்து, அனைத்து அம்சங்களையும் அலசி விரைவாக முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம் நடுவர்களுக்கு. அவர்களும் மனிதர்கள் தானே?, தவறு செய்வதற்கான வாய்ப்பு நிச்சயம் இருக்கிறது. அப்படி ஏதும் இருப்பதாகக் கருதினால் அதை திருத்திக் கொள்வதற்காக கொடுக்கப்படும் அரிய வாய்ப்பு தான் டிஆர்எஸ்.
அவுட் கொடுக்கப்பட்டதில் சந்தேகம் இருந்தால் மட்டுமே இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம். எல்லா முடிவுகளையும் சந்தேகப்பட்டால், வாய்ப்புகளை வீணடித்துவிட்டு பின்னர் தேவைப்படும் சமயத்தில் பயன்படுத்த முடியாமல் நொந்துபோக நேரிடும். டிஆர்எஸ் கோருவதா? வேண்டாமா? என்பதையும் களத்தில் இருக்கும் வீரர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். அதுவும், குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாக!. விதிமுறைகளை வகுப்பவர்கள் எல்லா வகையிலும் யோசித்து தான் இறுதி வடிவம் கொடுக்கிறார்கள் என்பதை வீரர்கள் மறந்துவிடக் கூடாது.
பெங்களூருவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் தனக்கு கொடுக்கப்பட்ட அவுட் முடிவிலிருந்து தப்பிக்க டிஆர்எஸ் வாய்ப்பை பயன்படுத்தலாமா என்று தீர்மானிக்க முடியாமல் சற்று தடுமாறினார். எதிர் முனையில் இருந்த சக வீரருடன் ஆலோசித்ததில் தவறேதும் இல்லை. ஆனால், மைதானத்துக்கு வெளியே தங்கள் அணி முகாமில் இருந்து ஏதேனும் சமிக்ஞை கிடைக்கிறதா? என கள்ளத்தனமாக பார்த்தது தான் சர்ச்சையை கிளப்பிவிட்டது.
ஸ்மித்தின் பார்வை போகும் திசையை சரியாகக் கணித்த இந்திய கேப்டன் கோஹ்லி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததுடன், களத்தில் இருந்த நடுவர்களிடம் புகார் செய்யவும் தவறவில்லை. நிலைமை விபரீதமாவதை உணர்ந்த ஸ்மித் மேலும் தாமதிக்காமல் உடனடியாக பெவிலியன் திரும்பியதுடன் குழப்பமான மனநிலையில் அப்படி நடந்துகொள்ள நேரிட்டதாக பின்னர் விளக்கமும் அளித்தார்.
இந்த அப்பட்டமான விதிமீறல் குறித்து இந்திய அணி நிர்வாகம் சார்பில் போட்டி நடுவரிடம் புகார் கொடுக்கப்பட்டது பிரச்னையை மேலும் சிக்கலாக்கியது. ஸ்மித் மற்றும் கோஹ்லியின் நடத்தையும் விமர்சனத்துக்குள்ளானது.
கிரிக்கெட் பிரபலங்களும், நிபுணர்களும் இரு தரப்பாக பிரிந்து நின்று கருத்து மோதலுக்கு தூபம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பிரச்னை தீவிரமாவதை உணர்ந்த இரு நாட்டு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள இரண்டு டெஸ்ட் போட்டியிலும் விதிமுறைக்குட்பட்டு சிறப்பாக விளையாடுவதில் மட்டும் வீரர்கள் கவனம் செலுத்த வேண்டும் என முடிவெடுத்திருக்கறார்கள்.

தவறை திருத்திக் கொள்வதற்காக கொடுக்கப்படும் வாய்ப்பை பயன்படுத்துவதில் தவறு செய்வதை ஒருபோதும் ஏற்க முடியாது. புதிய விதிமுறைகள் அறிமுகமாகும்போது, அது பற்றி முழுமையாக அறிந்துகொள்ளும் முனைப்பும் அவசியம். டிஆர்எஸ் வாய்ப்பை பயன்படுத்துவதில் இனியாவது வீரர்கள் விவேகத்துடன் செயல்படுவார்கள் என எதிர்பார்க்கலாம். 
- ஷங்கர் பார்த்தசாரதி 

எச்சரிக்கை மணி

ஆஸ்திரேலிய அணியுடன் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 333 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்திருக்கிறது. தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வங்கதேச அணிகளுக்கு எதிராக சிறப்பான வெற்றிகளைப் பதிவு செய்ததுடன் தொடர்ச்சியாக 19 போட்டியில் தோல்வி காணாமல் இருந்த இந்திய அணியின் சாதனைப் பயணம், எதிர்பாராத வகையில் முடிவுக்கு வந்தது துரதிர்ஷ்டமே.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அணி, சொந்த மண்ணில் இப்படியொரு அவமானகரமான தோல்வியை சந்தித்ததை இன்னும் கூட ஜீரணிக்க முடியவில்லை. முதல் நாளில் இருந்தே சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் வகையில் ஆடுகளம் அமைந்திருந்தும் அஷ்வின், ஜடேஜா, ஜெயந்த் கூட்டணியின் தாக்குதல் அவ்வளவாக எடுபடவில்லை.
ஆனால், ஆஸ்திரேலிய ஸ்பின்னர்கள் ஸ்டீவ் கீப், நாதன் லயன் இருவரும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்பட்டு இந்திய பேட்ஸ்மேன்களை துளைத்தெடுத்தனர். கீப் இரண்டு இன்னிங்சிலும் தலா 6 விக்கெட் கைப்பற்றி உண்மையிலேயே மிரட்டி விட்டார். புனே டெஸ்ட் தோல்விக்கு எதிரணியின் பலத்தை விட, இந்திய வீரர்களின் அலட்சியமே காரணம் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது.
தேவையில்லாமல் தூக்கி அடித்து விக்கெட் தானம் செய்தது, பீல்டிங்கில் மெத்தனமாக செயல்பட்டு பல கேட்ச் வாய்ப்புகளை வீணடித்தது, நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரும் டிஆர்எஸ் முறையை தவறாகக் கையாண்டது என தவறுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அடுக்கடுக்கான வெற்றிகளால் சற்று அலட்சியப் போக்குடன் விளையாடியதற்கு சரியான தண்டனை கிடைத்துவிட்டது. தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். இது எங்களுக்கு சரியான சமயத்தில் அடிக்கப்பட்ட எச்சரிக்கை மணிஎன்கிறார் கேப்டன் கோஹ்லி.
இரண்டரை நாளில் தோல்வியைத் தழுவியது ஏமாற்றமளிக்கிறது. கடைசி வரை போராட வேண்டும், களத்தில் நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்ற உறுதியை இந்திய பேட்ஸ்மேன்களிடம் பார்க்க முடியவில்லைஎன கண்டிக்கிறார் கவாஸ்கர்.

பல தரப்பில் இருந்தும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், ‘ஒரு போட்டியில் தோற்றதற்காக, தொடரையே இழந்துவிட்டோம் என்று அர்த்தமில்லை. இன்னும் நிறைய வாய்ப்பு இருக்கிறது. இந்திய வீரர்கள் கடுமையாகப் போராடி இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு சாதிப்பார்கள்என்ற சச்சினின் வார்த்தைகள் நம்பிக்கை அளிக்கின்றன. எதிர்வரும் போட்டிகளில் இந்திய வீரர்கள் அதை நிஜமாக்குவார்கள் என நம்பலாம்.
- ஷங்கர் பார்த்தசாரதி

தவிர்த்திருக்கலாம்

எந்த ஒரு நல்ல விஷயமும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தாக வேண்டும் என்பார்கள். ‘வெற்றிக் கேப்டன்டோனிக்கும் அது நேர்ந்திருக்கிறது. இந்திய அணிக்காக இரண்டு உலக கோப்பைகளை வென்றவர், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை முத்தமிட்டவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இரண்டு முறை ஐபிஎல் சாம்பியனாக்கியவர் என்ற பெருமைகள் எல்லாம் இன்று செல்லாக் காசாகியிருக்கிறது.
எந்த நெருக்கடியிலும் கொஞ்சமும் பதற்றம் அடையாமல் செயலாற்றும் திறன், சக வீரர்களின் திறமைகளுக்கு ஏற்ப அவர்களை சரியான தருணத்தில் பயன்படுத்திக் கொள்ளும் சாதுரியம், வித்தியாசமான வியூகங்கள் மட்டுமல்லாது தொட்டதெல்லாம் பொன்னானதால் அதிர்ஷ்ட கேப்டனாகவும் அடையாளம் காணப்பட்ட டோனியிடம் இருந்து அந்த பதவி பறிக்கப்பட்டிருக்கிறது.
டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து கேப்டனாக செயல்பட்டு வந்தவர், சமீபத்தில் தான் அந்த பொறுப்பில் இருந்து விலகி விராத் கோஹ்லிக்கு வழி விட்டிருந்தார். ஐபிஎல் தொடரின் 10வது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில், ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து டோனி நீக்கப்பட்டிருப்பதாகவும், புதிய கேப்டனாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஸ்டீவன் ஸ்மித் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அணி நிர்வாகம் அறிவித்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டோனி மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். அணியின் முக்கியத்துவம் வாய்ந்த வீரராக அவர் நீடிப்பார். கேப்டன் பதவியில் இருந்து அவராக விலகவில்லை. கடந்த சீசனில் எங்கள் அணி சிறப்பாக செயல்படவில்லை. எனவே, இந்த முறை அணியை வழிநடத்தவும், வலுவானதாக கட்டமைக்கவும் ஒரு இளம் வீரரை தலைமை பொறுப்பில் நியமிக்க முடிவு செய்தோம். எதிர்வரும் ஐபிஎல் சீசனுக்கான எங்கள் அணியின் கேப்டனாக ஸ்மித்தை நியமித்துள்ளோம்என்கிறார் புனே அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா.
அணியை வழிநடத்தப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் முழு உரிமை அவருக்கு உள்ளது. அதில் யாரும் தலையிட முடியாது. ஆனால், டோனி போன்ற இணையற்ற சாதனையாளரிடம் இருக்கும் பொறுப்பை, வேறு ஒருவருக்கு வழங்கிய விதம் ஏற்புடையதாக அமையவில்லை.
இரு தரப்பும் கலந்தாலோசித்து, சம்பந்தப்பட்ட வீரரின் புகழுக்கு கொஞ்சமும் களங்கம் ஏற்படாத வகையில் சுமுகமான முடிவை எடுத்திருக்க வேண்டுய்ஒரு வெற்றிகரமான கேப்டனுக்கான புதிய இலக்கணத்தை வகுத்தவருக்கு கவுரவமான முறையில் விலகிக் கொள்ளும் வாய்ப்பை அளித்திருந்தால், இந்த தர்மசங்கடமான நிலையை நிச்சயம் தவிர்த்திருக்கலாம்.
- ஷங்கர் பார்த்தசாரதி