பிரதமர் பதவிக்கான வேட்பாளராக டாக்டர் மன்மோகன் சிங்கை முன்னிறுத்தக் காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. தேர்தல் களத்தில் இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த முடிவாகவும், திருப்பமாகவும் அமைகிறது. பிரதமர் வாஜ்பாய்க்கு சரியான சவாலாக, மக்கள் ஏற்றுக் கொள்ளத்தக்க வேட்பாளராக மன்மோகன்சிங் அமைவாரா? இம் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமையுமா? சோனியாவின் நிலை என்ன என்பது போன்ற கேள்விகள் நம் முன் அணி வகுக்கின்றன. இம் முடிவின் மூலம் சோனியா 'வெளிநாட்டவர்' என்ற பிரச்சினையை பா.ஜ.க. கையில் எடுப்பது தவிர்க்கப்பட்டு விடும் என்பது தெளிவாகிறது. ஆனால் இம் முடிவை முன்பே எடுத்திருந்தால் சரத்பவார், சங்மா, தாரிக் அன்வர் ஆகியோரைக் கட்சியில் இருந்து வெளியேற்றுவதைத் தவிர்த்திருக்கலாமே! பல மாநிலங்களில் காங்கிரஸ் உடைவதையும், பலவீனமடைவதையும் அனுமதித்த பிறகு, காலம் கடந்த இந் நடவடிக்கை ஏற்படுத்தப் போகும் தாக்கம் என்னவாக இருக்கும் என்ற கேள்விகளுக்கெல்லாம் காங்கிரஸ் வசம் பதில் இல்லை.
இந்த நிலையில் சோனியாவின் ஜாதகம் குறித்து வெளியாகும் செய்திகள் ஆச்சர்யமூட்டுகின்றன. சோனியாவின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவும், காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்புகளைக் குறைப்பதற்குமாகவே இச் செய்திகள் பரப்பப்படும் சாத்தியக் கூற்றையும் தள்ளிவிட முடியாது. ஆனால், காங்கிரஸ்காரர்களே இச் செய்திகளின் பின்னணியில் இருப்பதுதான் குறிப்பிடத்தக்க அம்சம்.
சோனியா, காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பேற்ற உடனேயே அவரது ஜாதகம் அக்கு வேறு ஆணி வேறாய் அலசப்பட்டது! உண்மைதான். ஆனால் தற்போது மாறிவரும் அரசியல் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு புதிய கணிப்புகள் களம் புகுகின்றன. ஜனதா தளத்தில் ஏற்பட்டுள்ள பிளவு, லோக் சக்தி, சமதா கட்சி மற்றும் ஷரத் யாதவ் தலைமையிலான ஜனதா தளப் பிரிவு ஆகியவைகளின் சங்கமம், சரத்பவாரின் 'தேசிய காங்கிரஸ்' உதயம் ஆகியவை காங்கிரஸ் கட்சியின் அரசியல் எதிர்காலத்தைப் பாதிக்கக் கூடிய அம்சங்களாக அமைகின்றன. இந்த நிலையில்தான் சோனியாவின் ஜாதகம் குறித்த தகவல்கள் 'கசிய விடப்படுவதாகத்' தெரிகிறது. அதில் முக்கியமானது, '2000 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து சோனியா விலகிக் கொள்வார்' என்ற தகவல்தான்.
சமீபத்தில் நடத்தப்பட்ட சில கருத்துக் கணிப்புகளின்படி பா.ஜ.க. வுக்கு சாதகமாக அரசியல் காற்று வீசுவதாகத் தெரிய வந்துள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலில் பெற்ற அதே அளவிலான தொகுதிகளில்தான் இம் முறையும் வெற்றி பெறும் என அக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸில் இருந்து வெளியேறிய பி.ஏ. சங்மா, ''100 இடங்களுக்கு மேல் காங்கிரஸுக்குக் கிடைக்காது. தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் மேலும் உடைந்து சிதறும். பெரும்பான்மை காங்கிரஸ் தொண்டர்கள் தேசிய காங்கிரசில் இணைவார்கள்'' என்கிறார். 'கை'க்கடியாரத்தைச் சின்னமாகக் கொண்டிருக்கும் தேசிய காங்கிரஸ், 'கையின்' வெற்றி வாய்ப்பை எந்த அளவு பாதிக்கும் என்பதற்குக் காலம்தான் பதில் சொல்ல முடியும். மன்மோகன்சிங் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டு காங்கிரஸ் களம் காணும்போது தேசிய காங்கிரஸ் உருவானதன் அடிப்படையே தகர்ந்து போகிறது! இதனடிப்படையில் மீண்டும் தாய்க்கட்சியான காங்கிரஸில் இவர்கள் இணைந்து கொள்ளும் சாத்தியக்கூறு இருப்பதையும் மறுப்பதற்கில்லை. இதையெல்லாம் மனதில் வைத்தே காங்கிரஸ் கட்சி மன்மோகன்சிங்கை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன்னிறுத்துகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். என்னது.. உங்களுக்கும் கொஞ்சம் ஜோசியம் தெரியுமா ! இதோ சோனியாவின் பிறந்த நாள், நேரம், இடம் ஆகிய விவரம் :
பிறந்த நாள் - 09.12.1946
நேரம் - இரவு 9.15 மணி
நாடு - இத்தாலி
இடம் - டுரின் (TURIN).
நீங்களே அலசி ஆராய்ந்து கசிய விடப்படும் தகவல்களின் நம்பகத் தன்மை குறித்து ஒரு முடிவுக்கு வாருங்களேன்.
பா.சங்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக