சனி, 25 டிசம்பர், 2010

பிரதம ஓட்டம் - சோனியா நம்பிக்கை இழக்கவில்லை

சென்ற கட்டுரையில் உரசியதை மேலாகப் பார்க்கும்போது காங்கிரஸ் சற்றுத் தளர்ந்து போயிருப்பதாகத் தோன்றினாலும், அலசும் போது பிரச்சாரம் சூடுபிடித்து சரியான முறையில் தேர்தலை எதிர்கொள்ளும் பட்சத்தில், கெளரவமான வெற்றியை சோனியா தலைமையில் காங்கிரஸ் குவிப்பதற்கான வாய்ப்பு வளமாகவே உள்ளது.
உண்மையில் மரணப் படுக்கையில் இருந்த காங்கிரஸ் இன்று அகில இந்திய அளவில் ஓடி ஆடுகிறது என்றால் அதற்குக் காரணம் சோனியாதான்.

அவர் தலைமைப் பொறுப்பேற்றுக் கொண்டது மிகுந்த சோதனையான ஒரு காலகட்டத்தில் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கழுதை தேய்ந்து கட்டெறும்பானது என்ற கதையாய் 1991-'99 காலகட்டத்தில் சுமார் 100 தொகுதிகளைக் காங்கிரஸ் இழந்துள்ளது. 1991 ல் பா..., காங்கிரஸ் கட்சிகளின் வாக்குகளின் சதவிகித அடிப்படையிலான இடைவெளி 17%. தற்போதைய இடைவெளி 0.47%. சோனியா கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்காதிருந்தால் நிலைமை இதை விட மிக மோசமாக இருந்திருக்கும்.

அவரது வருகை கட்சிக்குரிய பாரம்பரிய அடையாளத்தை வெகுவாக மீட்டிருக்கிறது. அவர் கடந்து வந்த பாதை அவரை மனம் தளராத போராளியாக முன்னிறுத்துகிறது. 1965-'68 ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவியான சோனியா மய்னோ, இந்திராவின் அருகிலிருந்து அரசியலைக் கூர்ந்து கவனித்ததில் அதன் அடிப்படைச் சங்கதிகள் சோனியாவுக்குப் பிடிபட்டு விடுகிறது. ஆனாலும் 1980 ல் சஞ்சய் காந்தி விமான விபத்தில் உயிரிழந்த பிறகு ராஜீவ் அரசியலில் நுழைந்ததை, சோனியா கடுமையாக எதிர்த்திருக்கிறார். அடுத்ததாக இந்திராவின் கொடூரப் படுகொலைக்குப் பின், ராஜீவ் பிரதமராகி விட கணவருக்குப் பல வகையிலும் உதவியாகச் செயல்படுகிறார். 1991ல் ராஜீவ் படுகொலை செய்யப்பட, மனம் வெறுத்துப்போன நிலையில் காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்க மறுத்து விடுகிறார்.

நரசிம்மராவ் தலைமையில் காங்கிரஸ் கடைசி மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறது. தன் கண் முன்பே காங்கிரஸ் படும் மரண அவஸ்தையைக் காணச் சகியாமல் களத்தில் இறங்கிப் பிரச்சாரம் செய்கிறார். பல மாநிலங்களில் புத்துணர்ச்சியூட்டும் வெற்றிகள். இன்று கட்சி சோனியாவின் கட்டுப்பாட்டில்.

1998 தேர்தலில் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது 141 தொகுதிகள். சோனியா மட்டும் பிரச்சாரத்திற்கு வந்திராவிட்டால் இதில் பாதிகூடக் கிடைத்திருக்காது என்கிறார் காங்கிரஸ் கட்சியின் வெளியுறவுப் பிரிவின் தலைவர் கே. நட்வர்சிங்.

தன் முன்னால் அணிவகுக்கும் சவால்களைச் சரியாகவே சமாளித்து வருகிறார் சோனியா என்று காங்கிரசார் நம்புகிறார்கள். எழுதித் தரும் உரைகளைப் படித்துவிட்டுப் போகிறவர் என்று பா...வினர் கிண்டல் செய்தாலும், சோனியாவின் அரசியல் பதிலடிகளில் ஆவேசம் இருப்பதை மறுக்க முடியாது. இந்திராவின் செயல்பாடுகள் சோனியாவிடம் பிரதிபலிப்பதாக காங்கிரஸ் உற்சாகம் கொள்கிறது.
கார்கில் விஷயத்தை பா... அரசு கையாண்ட விதம் குறித்து இவர் கிளப்பும் சந்தேகங்களை மக்கள் காது கொடுத்துக் கேட்கிறார்கள். அரசு சரியான நேரத்தில் செயல்பட்டிருந்தால் உயிர் பலியைத் தவிர்த்திருக்கலாம் என்ற இவரது வாதம் யோசிக்க வைக்கிறது. பா... செய்த தவறுகளைச் சரியான முறையில் வாக்காளர்களிடம் எடுத்துச் செல்லும் பட்சத்தில் போட்டி கடுமையாக இருக்கும். பிரியங்காவின் பிரச்சாரம் பெரிதும் கைகொடுக்கும் என்று நம்புகிறார்கள். கார்கிலில் உளவு அமைப்பின் தோல்வி பிரச்சாரத்தில் முக்கிய இடம் பிடிக்கும் என்று தெரிகிறது. பிரச்சாரத்திற்கு சோனியா தலைமை ஏற்க ராஜேஷ் பைலட், திக்விஜய் சிங், அசோக் கெலாட் ஆகிய உப தளபதிகள் வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்குகிறார்கள்.
நிலையான ஆட்சியைத் தருவதற்கான அனுபவம், திறமை சிந்தனைத் திறம் எல்லாம் உள்ள ஒரே கட்சி காங்கிரஸ்தான் என்று முழங்குகிறார் பிரணாப் முகர்ஜி. இந்திரா குடும்பத்தின் பாரம்பரிய வசீகரம், காங்கிரஸ் கட்சியின் அமைப்பு ரீதியிலான ஆதரவு பலம், போராடும் மனஉறுதி இவற்றோடு முழுமையான வீச்சில் களம் இறங்கும்போது வாஜ்பாய்க்கு சரியான சவால் விடும் தலைவியாக சோனியா விளங்குவார் என்பதில் ஐயமில்லை.

பிரதம ஓட்டத்தில் சோனியா முந்துவதற்கான வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது. மக்கள் தீர்ப்பளிக்கும் வரை பொறுத்திருப்பதுதான் நியாயம்.
பா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக