புதன், 29 டிசம்பர், 2010

காமராஜர் அரங்கில் இசை மழை

மார்கழியில் அணிவகுக்கும் கர்னாடக இசை நிகழ்ச்சிகளில் லஷ்மன் ஸ்ருதியின் ‘சென்னையில் திருவையாறு’ தனி இடம் பிடித்துள்ளது. தொடர்ச்சியாக 6வது ஆண்டாக இந்த இசை வைபவத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது திருப்தியும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.
தொடர்ந்து 8 நாட்களுக்கு முன்னணி கலைஞர்களின் 45 நிகழ்ச்சிகளை நடத்துவது, உண்மையிலேயே பிரமிப்பூட்டும் இமாலய முயற்சி என்பதில் சந்தேகமே இல்லை. இதே காமராஜர் அரங்கில் 16 ஆண்டுகளுக்கு முன் தொடர்ந்து 36 மணி நேரத்துக்கு மாரத்தான் இசை நிகழ்ச்சி நடத்தி சாதனை படைத்த அனுபவம் உள்ள லஷ்மன் ஸ்ருதிக்கு இது சர்வ சாதாரணம்தான்.
மெல்லிசைக் குழுவான லஷ்மன் ஸ்ருதிக்கும் கர்னாடக இசைக்கும் கொஞ்சம் தூரம்தான்! என்றாலும் நண்பர் லஷ்மனைப் பொருத்த வரை எடுத்த காரியத்தில் இருந்து பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. ஒரு கலை சேவையாக ‘சென்னையில் திருவையாறு’ நிகழ்ச்சியை தொடர்வோம் என்ற அவரது உறுதிதான், அந்த நிகழ்ச்சிக்கு தனித்துவமான பெயரையும் பெருமையையும் பெற்றுத் தந்துள்ளது. சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியில் பங்கேற்பதில், முன்னணி கர்னாடக இசைக் கலைஞர்கள் காட்டும் ஆர்வம் அதை மேலும் உறுதி செய்கிறது.
சென்னையின் மூலை முடுக்குகளில் எல்லாம் சென்னையில் திருவையாறு சுவரொட்டிகள், கர்னாடக இசைக் கலைஞர்களின் பிரம்மாண்ட பேனர்கள். நிறைவு நாளின் கடைசி நிகழ்ச்சியான எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் நிகழ்ச்சிக்கு முதல் நாளிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தது குறிப்பிடத்தக்கது. 24ம் தேதி காலை பரசுராம் ஸ்ரீராம் – அனுராதா ஸ்ரீராம் கர்னாடக இந்துஸ்தானி ஜுகல்பந்தி நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். சுகமான அனுபவம்.
வெளியில் வரும்போது காமராஜர் அரங்கையும் அதன் எதிரே இருக்கும் ஸ்டெர்லிங் டவர்ஸ் கட்டிடத்தையும் அங்கிருந்து பொடிநடையாக பேருந்து நிறுத்தம் செல்கையில், செம்மொழிப் பூங்கா நுழைவாயிலையும் புகைப்படம் எடுத்தேன். ஒருநாள் பூங்கா முழுவதையும் சுற்றிப் பார்த்து விரிவாக எழுத வேண்டும். புத்தாண்டில் அதற்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.  







பா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக