புதன், 15 டிசம்பர், 2010

சேப்பாக்கத்தில் ஒருநாள்...

டிசம்பர் 10, சேப்பாக்கத்தில் நியூசிலாந்து – இந்தியா மோதிய கடைசி ஒருநாள் போட்டி. உலக கோப்பைக்காக எம்.ஏ.சிதம்பரம் அரங்கம் உருமாறிக் கொண்டிருந்தது. ரிப்போர்ட்டர் மகேஷுடன் சென்றிருந்தேன்.
சில ஆண்டுகளுக்கு முன் இங்கு இந்தியா – நியூசிலாந்து ஒருநாள் போட்டி நடந்தபோது, அகில இந்திய வானொலி வர்ணனையாளர் குழுவில் இடம்பெற்றிருந்தது ஞாபகத்துக்கு வந்தது. அப்துல் ஜபார் போன்ற ஜாம்பவான்களுடன் ‘மைக்’ பிடித்தது மறக்க முடியாத அனுபவம். பீல்டிங் வியூக அமைப்பை ஜபார் அவர்கள் விவரிக்கும் அழகே தனி. கற்றுக்குட்டி என்றாலும் என்னால் இயன்ற வரையில் தாக்குப்பிடித்தேன். ‘நன்றாக சொன்னீர்கள்… தம்பி’ என்று ஜபார் தட்டிக் கொடுத்தது இப்போதும் எனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாய் அந்த போட்டி மழையால் ரத்தானது. 18 ஓவர் என்று நினைக்கிறேன். அத்துடன் என்னுடைய வர்ணனையாளர் அனுபவம் ஓவர். அதற்கு பிறகு சேப்பாக்கத்தில் தமிழ் வர்ணனைக்கே தடை போட்டு விட்டார்கள் என்று கேள்விப்பட்டேன்.
அகில இந்திய வானொலியின் தமிழ் பிரிவு காலம் காலமாய் கட்டி எழுப்பிய ஒரு உன்னதமான பாரம்பரியத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது கொடுமையான விஷயம். வர்ணணையில் பாரபட்சம் காட்டக் கூடாது. எந்த ஒரு வீரரையும் தவறாக விமர்சிக்க கூடாது... இப்படி ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், விதிமுறைகள் அடங்கிய கையேட்டை எங்களுக்கு கொடுப்பார்கள். இப்போது எப்எம் சேனல்களில் வரும் வர்ணனைகளை கேட்கும்போது சிரிப்பு வருகிறது. அவன், இவன் என்று ஏகவசனத்தில் ஏளனமாகப் பேசுகிறார்கள்.
செய்தியாளர் மாடத்துக்கு செல்லும் வழி மாற்றப்பட்டிருந்ததால் சற்று தடுமாற்றத்துக்குப் பிறகு அடையாளம் கண்டு படியேறிச் சென்றோம். சுமார் 200 இருக்கைகளுடன் கூடிய பிரம்மாண்டமான காலரியை அச்சு ஊடக செய்தியாளர்களுக்காக ஒதுக்கியிருக்கிறார்கள். ’வை-பை இண்டர்நெட்’ உட்பட நவீன வசதிகளுடன் அற்புதமான ஏற்பாடுகள். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இழைத்து உழைத்திருக்கிறது. பணிகள் முழுமையடையாத நிலையிலும் பிரமிப்பூட்டும் வகையில் இருந்தது.

நியூஸ் டுடே பரத், டிசி பாலாஜி என்று மகேஷ் ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினார். பலர் ஏற்கனவே பரிச்சயமானவர்கள்தான். விகடன் பேப்பர் நண்பர் பி.எம்.சுதிரை (தற்போது குமுதத்தில் பணியாற்றி வருகிறார்) நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி.
நியூசிலாந்து டாசில் வென்று முதலில் பேட் செய்ய ஆரம்பித்தது. தொடக்கத்திலேயே விக்கெட்டுகள் சரிந்து ஸ்கோர் ஆமை வேகத்தில் நகர்ந்ததால் கொட்டாவிதான் வந்தது. நியூசிலாந்து நூறு ரன்னை தாண்டியதே பெரிய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும்.
‘டி20 போட்டின்னு நெனச்சு ஆடியிருந்தா கூட இதைவிட அதிகமா எடுத்திருக்கலாம்’ என்ற கமெண்ட் நியாயமானதாகவே தோன்றியது. இதுவரை பார்த்ததே போதும்…என்று இந்திய இன்னிங்ஸ் தொடங்குவதற்கு முன்பாகவே அலுவலகத்துக்கு புறப்பட்டேன். பகல்/இரவு ஆட்டம்… முடிவதற்கு இரவு பத்தரை மணிக்கு மேலாகி விடும். தாமதமாகத்தான் வீட்டுக்கு செல்ல வேண்டியிருக்கும் என்று பயந்தது அர்த்தமற்றதாகிவிட்டது. மாலை 6 மணிக்கு முன்பாகவே ஆட்டத்தை முடித்துவிட்டார்கள். உலக கோப்பை… அதை தொடர்ந்து ஐபிஎல் சீசன் 4 என்று அடுத்தடுத்து போட்டிகள் வருகின்றன. ஒரு சுவாரசியமான ஆட்டத்துடன் மீண்டும் சந்திப்போம்.

பா.சங்கர்  



  



1 கருத்து:

  1. தங்களுடைய புதிய வலைப்பதிப்புக்கு வாழ்த்துக்கள்.

    தங்களுடைய எழுத்தினை மேலும் எதிர்பார்க்கும் ஆவலுடன்

    வெங்கடேசன்

    பதிலளிநீக்கு