சனி, 25 டிசம்பர், 2010

ராகுல் காந்தி வருகிறார் பராக்... பராக்...

காங்கிரஸ் வட்டாரத்தில் உற்சாகம் பொங்கி வழிகிறது. அன்னைக்குத் தோள் கொடுக்கப் பிரச்சாரத்தில் குதிக்கிறார் ராகுல் காந்தி என்ற செய்திதான் இந்தப் புதிய உற்சாகத்துக்குக் காரணம். லண்டனில் தான் பார்த்து வந்த வேலையைக் கூட ராகுல் உதறிவிட்டதாகத் தகவல் வந்துள்ளது. முழுநேர அரசியல்வாதியாகும் அரவது லட்சியத்துக்கான வெள்ளோட்டமாக இதைக் கருதுகிறார்கள். சோனியாவும் பச்சைக் கொடி காட்டி விட்டதாகத் தெரிகிறது. கட்சியின் மதிப்பு வாய்ந்த பதவியில் ராகுல் அமர்த்தப்படலாம். இதெல்லாம் தேர்தலுக்குப் பின்னர்தான். தற்போதைக்குப் பிரச்சாரத்தில்தான் கவனமெல்லாம். கடந்த சில மாதங்களாகவே இந்திய அரசியல் நிலவரம் குறித்து ராகுல் அவ்வப்போது அன்னையிடம் அலசி வந்துள்ளார்.

இணையத்தில் வரும் செய்திகளையும் மிகவும் கூர்ந்து கவனித்து வந்துள்ளார். சோனியா காந்தி வெளிநாட்டவர் என்று கிளப்பப்பட்ட பிரச்சினைதான் ராகுலை வெகுவாகப் பாதித்துள்ளது. அதிலும் சரத்பவார், சங்மா, தாரிக் அன்வர் போன்ற மூத்த காங்கிரஸ் தலைவர்களே முதுகில் குத்தியதைப் பார்த்து மனம் புழுங்கியுள்ளார். அச் சமயத்தில் இந்தியாவில் இருந்த ராகுல், நாடு முழுவதும் சோனியாவுக்கு ஆதரவாகக் காங்கிரசார் திரண்டது ; பல தொண்டர்கள் உயிரையும் தரத் தயாரானது ஆகிய சம்பவங்களால் மனம் நெகிழ்ந்துள்ளார். அன்னையின் வெற்றிக்காகவும் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்திற்காகவும் தீவிரமாக உழைப்பது என்று அப்போதே முடிவு செய்துவிட்டார் அவர் என்று அவரது குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ்காரர்களுக்கே இது ஆச்சரியமுட்டும் விஷயம்தான். பிரியங்கா காந்திதான் தீவிர அரசியலில் ஈடுபடுவார். அடுத்த வாரிசு அவர்தான் என்றே பலரும் நினைத்திருந்தனர். எதிர்பாராத திருப்பமாக ராகுல் நேரடியாகக் களத்தில் குதிப்பது கட்சிக்காரர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. பிரியங்கா, அமேதி தொகுதியில் அன்னைக்காகப் பிரச்சாரத்தை மேற்கொள்ள; ராகுலும், சோனியாவும் இந்தியா முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணத்தில் ஈடுபடுவார்கள் எனத் தெரிகிறது. ராகுல் தேர்தலில் போட்டியிடுவார் என்ற ஊகமும் இருந்து வந்தது. ஆனால், இம்முறை பிரச்சாரம் மட்டுமே செய்வதென்று அவர் முடிவெடுத்திருக்கிறார்.

ராகுலின் வருகை, சோனியா வெளிநாட்டவர் என்ற வாதத்தை முடக்கிவிடும் என்று காங்கிரசார் நம்புகின்றனர்.

சோனியா, ராகுல், பிரியங்கா மூவருமாகப் பிரச்சாரத்தில் ஈடுபடும்போது அக் குடும்பத்தின் மீது மக்களுக்குள்ள அபிமானம் பன்மடங்கு உயரும் என்றும், குறிப்பாகத் தாய்க்குலத்தின் வாக்குகளை பெருமளவில் கவர முடியும் என்றும் காங்கிரஸ் கணக்குப் போடுகிறது.

ராகுல் காந்தி நேரடியாகப் பிரச்சாரத்தில் குதிப்பது பெரிய திருப்பம் என்றே கருதப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சி தனது வியூகத்தை மாற்றியமைத்துப் பிரச்சார உத்திகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. குறிப்பாகத் தென் மாநிலங்களில் ராகுலின் பிரச்சாரம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கிறார்கள். உத்தரப்பிரதேசத்திலும் தனி கவனம் கொடுத்து பிரச்சாரம் செய்வார்கள் எனத் தெரிகிறது.

பொதுக் கூட்டங்களில் கார்கில் பிரச்சினையை எழுப்பும் சோனியா, வாஜ்பாய் அரசின் தவறான அணுகுமுறைகளே நமது இழப்புகளுக்குக் காரணம் என கடுமையாகத் தாக்கத் துவங்கியுள்ளார். தொலைத் தொடர்புத் துறையில் ஊழல், பிரதமரின் குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் அதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதும் பிரச்சாரத்தில் முக்கிய இடம் வகிக்கும். இதோடு ராகுல் காந்தியும் உடன் வந்து தாக்குதலைத் தொடங்கும்போது பா... திணறிப் போகும் என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். மொத்தத்தில் பிரச்சாரம் களைகட்டத் தொடங்கிவிட்டது.

பா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக