அரசியல் கட்சிகளெல்லாம் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதிலும் பிரச்சார உத்தியை வகுப்பதிலும், ஆதரவைப் பெருக்குவதிலும் பரபரப்பாக உள்ள நிலையில், ''தேர்தல் திட்டமிட்டபடி நடக்காது'' என்று சில ஜோதிடர்கள் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்கள். பத்திரிகைகள் எல்லாம் கருத்துக் கணிப்பு நடத்திக் கொண்டிருக்க, இந்த ஜோதிடர்களின் கணிப்போ வேறாக உள்ளது. கோள்களின் இயக்கத்தினால் கடைசி நேரத்தில் தேர்தல் தடைபடும் என்று இவர்கள் கூறுவது வியப்பூட்டுவதாக உள்ளது. முதலில் வாரணாசியைச் சேர்ந்த புகழ்பெற்ற ஜோதிடர் அசோக் துவிவேதி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
''இந்தியாவின் ஜாதகப்படி! தற்போது ஐந்து ஆண்டுகளுக்குக் கோள்களின் சஞ்சாரம் மோசமாக இருக்கிறது. இதனால் எந்தக் காரியமும் திட்டமிட்டபடி நடக்காது. எல்லாவற்றிலும் தடங்கல் ஏற்பட்டு அரைகுறையாக நிற்கும். இதனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தலும் இறுதிக்கட்டத்தில் நின்று போகும் வாய்ப்பு உள்ளது. ஆனால், பிரதமர் பதவிக்கு எந்த வித ஆபத்தும் ஏற்படாது.
வாஜ்பாய் தொடர்ந்து பிரதமராக நீடிப்பார். அப் பதவி அவரைவிட்டு அவ்வளவு எளிதில் போகாது. சனி பகவான் மேஷராசியில் இருந்து அடுத்த ஆண்டு மே-ஜூன் மாதகாலத்தில் ரிஷப ராசிக்கு மாறுகிறார். அதுவரையில் இந்தியாவிற்கு நல்ல காலம் இல்லை'' என்கிறார் அசோக் துவிவேதி.
மேலும், ''ரிஷப ராசியில் சனி பகவான் இருப்பது இந்தியாவிற்கு நல்ல காலமாக அமையும். ஆனாலும், இந்தியாவின் அரசியல் கோட்டில் புதிய நட்சத்திரம் ஒன்று வருகிறது. இதனால் மிகப் புகழ்பெற்ற அரசியல் நபர் ஒருவர் (ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கலாம்) ஊழல் குற்றச்சாட்டினால் மிகவும் பின்தங்கிய நிலைக்கு ஆளாவார். அரசியலை விட்டே துரத்தப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
அதே சமயத்தில் எல்லாவற்றையும் மீறி தற்போது தேர்தல் நடந்தாலும், நாடாளுமன்றத்தின் தற்போதைய ஜாதகப்படி தேர்ந்தெடுக்கப்படும் புதிய பிரதமர், பதவியிலிருந்து ஒரே வாரத்தில் இறக்கிவிடப் படுவார். இதனால் மீண்டும் ஒரு தேர்தல் நடக்கும்'' என்று அசோக் துவிவேதி அணுகுண்டு போடுகிறார்.
இரண்டாவதாக தில்லியைச் சேர்ந்த பெண் ஜோதிடரான வீணு சாண்டல் என்ன சொல்கிறார் பார்க்கலாம்.
''கோள்களின் சஞ்சாரத்தைப் பார்க்கும்போது இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் தேர்தலுக்கு முன்பாகப் போர் நடக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதனால் தேர்தல் நின்று போகும். இந்தியாவிற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து நல்ல காலம் பிறக்கிறது. முதல் கட்டத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய தினத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. இது மிகவும் அமங்கலமான நாள். ஆரம்பமே இப்படி என்றால் எப்படி நல்லது நடக்கும்'' என்கிறார் வீணு சாண்டல் தனது கணிப்பில்.
நாஸ்டர்டாம் என்பவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கணித்துச் சொன்ன பல நிகழ்வுகள் உண்மையாகி உள்ளதாகப் பலரும் கூறும் போது, இதிலெல்லாம் சிறிது நம்பிக்கை பிறக்கத்தான் செய்கிறது. நல்லதே நடக்கும் என்று நம்புவோமாக.
பா.சங்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக