சனி, 25 டிசம்பர், 2010

ஜெயலலிதா பிரச்சாரம் : த.மா.கா. குற்றச்சாட்டில் உண்மை உண்டா?

டி.என். சேஷன் தலைமைத் தேர்தல் ஆணையாளராக இருந்தபோது செய்த கெடுபிடிகளை நினைத்தால், அரசியல்வாதிகளுக்கு இப்போதும் கூட நடுக்கம் ஏற்படும். இந்தத் தேர்தலிலுமே விதிமுறைகளை மீறும் அரசியல் கட்சிகள் கடுமையாகத் தண்டிக்கப்படும் என்று ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் .தி.மு.. தலைவி ஜெயலலிதா, கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிப் பங்கீடு, .தி.மு.. வேட்பாளர் தேர்வு எல்லாவற்றையும் முடித்துவிட்டு தனது பிரச்சாரத்தையும் துவங்கிவிட்டார். அந்த வகையில் முதல் சுற்று வெற்றி அவருக்குத்தான். உயிர்த்தோழி சசிகலா, அணிவகுக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சகிதமாக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார் அவர்.

ஆனால் அவர்களது பிரச்சார முறை குறித்து குற்றம் சாட்டி விரல்கள் நீள்கின்றன. தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்யப்படுகிறது. ''இப்படியே போனால் தேர்தல் சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறுமா என்பது சந்தேகம்தான்'' என்கிறார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பீட்டர் அல்போன்ஸ்.

''வட மாவட்டங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஜெயலலிதா, தவறான வழிகளில் சேர்த்த ஏராளமான பணத்தை செலவழித்து ஆடம்பரமாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்'' என்று அல்போன்ஸ் குற்றம் சாட்டுகிறார். ஜெயலலிதாவின் தேர்தல் பிரச்சாரத்தை ஒளிப்பதிவு செய்ய முயன்ற தேர்தல் ஆணைய அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் கே.. செங்கோட்டையனால் மிரட்டப்பட்டதாக வரும் செய்திகளைக் கவலையோடு சுட்டிக் காட்டுகிறார். தேர்தல் அதிகாரிகளே வன்முறைக்கு அஞ்சி நடுங்கினால் பாமர வாக்காளர்கள் எப்படி அச்சமின்றி தேர்தலில் வாக்களிக்க முடியும் என அல்போன்ஸ் அங்கலாய்க்கிறார்.

நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கே ஜெயலலிதா விடும் சவால் இது என வர்ணிக்கும் பீட்டர் அல்போன்ஸ், கோடிக்கணக்கான பணம் தண்ணீராய்ச் செலவழிக்கப் படுவதாகக் குறை சொல்கிறார். பத்திரிகையாளர்களையும் பணி செய்ய விடாமல் செங்கோட்டையன் தடுப்பதாகச் சொல்லும் அல்போன்ஸ், தமிழ்நாட்டில் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

.தி.மு.. தரப்பில், தொண்டர்கள் ஆர்வ மிகுதியில் செய்யும் இது போன்ற காரியங்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. ஜெயலலிதாவின் பிரச்சாரத்திற்கும், பொதுக் கூட்டங்களுக்கும் மக்கள் திரள்வது அவருக்குள்ள ஆதரவைக் காட்டுகிறது. அதைப் பொறுக்க முடியாதவர்களின் வரட்டுப் புலம்பல் இது என்கிறார்கள்.

பிரச்சாரம் இப்போதுதான் பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது. அதற்குள்ளேயே இத்தனை கலாட்டாக்கள். மீதமுள்ள கட்சிகளும் பிரச்சாரத்தில் இறங்கும்போது, போட்டி போட்டுக் கொண்டு இதே பாணியில் செயல்பட்டால் தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிமுறைகள் கேலிக் கூத்தாகிவிடும் அபாயம் உள்ளது.

சேஷன் பல விஷயங்களில் கடுமையாக நடந்து கொண்டாலும் அவரது நடவடிக்கைகள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன என்பதை மறுக்க முடியாது. யாராக இருந்தாலும், எந்தக் கட்சியாக இருந்தாலும் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டால் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்பது அரசியல் கட்சிகளுக்கு உணர்த்தப்படுவது அவசியம். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் மக்களுக்கு நம்பிக்கையும், பாதுகாப்பும் அளிப்பதாக அமைய வேண்டும். அரசியல் கட்சிகளும் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடந்து அமைதியான முறையில் தேர்தல் நடைபெற ஒத்துழைக்க வேண்டும் என்பதே பொது மக்களின் விருப்பம்.

- பா. சங்கர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக