சனி, 25 டிசம்பர், 2010

அரசியல் சமுத்திரத்தில் (கு)களிக்கும் முன்னாள் அதிகாரிகள்

மிகச் சிறந்த கல்வியாளர்கள், நிர்வாகிகள் அரசியலுக்கு வருவது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான். ஆனால் அரசு ஊழியராகக் கடைசி நாள் வரை பதவியில் இருந்து, பல சுகபோகங்களை அனுபவித்துவிட்டு ஓய்வு பெற்றதும், ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் சேர்ந்து மீண்டும் பதவி நாற்காலியைக் கைப்பற்றி விடத் துடிக்கும் சிலரின் மனப்போக்கு அதிர்ச்சியளிக்கிறது. அரசியலையும், அரசியல்வாதிகளையும் மிகக் கடுமையாக விமர்சித்த இவர்கள், இன்று அதே அரசியல் சமுத்திரத்தில் குளித்துக் களிக்கும் அவலத்தை என் சொல்வது.

உண்மையிலேயே நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் உழைக்கும் ஆர்வம் இருந்தால் அதற்கென தனி அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி தூய்மையானவர்களை மட்டும் அதில் இணைத்துக் கொண்டு தன்னலமற்ற மக்கள் சேவையில் சில காலமாவது இவர்கள் ஈடுபட வேண்டும்.

அதன் பிறகு தேர்தலைத் தங்களின் பிரத்யேகக் கொள்கையின் அடிப்படையில் சந்திப்பதுதான் இவர்கள் இதுவரை பேசி வந்த சித்தாந்தத்திற்குப் பொருத்தமாகவும் இருக்கும். ஆனால் நடப்பதோ வேதனை தருவதாக இருக்கிறது.

தமிழகத்தின் முன்னாள் ..எஸ். அதிகாரி மலைச்சாமி ஓய்வு பெற்ற பிறகு ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பிரதிநிதியாகச் சித்தரித்துக் கொண்டு தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ள முனைந்தார். திடீரென்று இவர் .தி.மு..வில் இணைந்து கொண்டதோடு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பையும் தட்டிச் சென்றுள்ளார். இவரைப் பின்பற்றி முன்னாள் நீதிபதி ராமசாமி.,எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் டாக்டர் பி.பி. ராஜன் ஆகியோரும் .தி.மு..வில் இணைந்து கொண்டதோடு இன்று நாடாளுமன்ற வேட்பாளர்களாக மக்கள் முன் வலம் வருகின்றனர்.

நன்கு படித்தவர்களையே நாடாளுமன்ற வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் புதிய கொள்கை முடிவின் அடிப்படையில் இவர்களுக்கெல்லாம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது ! இன்று ஜெயலலிதாவின் பிரச்சார மேடையில் கைகூப்பியபடி மணிக்கணக்கில் சிலைகளைப் போல இவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடுவது போல் அமைந்துள்ளது முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையாளர் டி.என். சேஷனின் அரசியல் பிரவேசம். குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் உள்துறை அமைச்சர் எல்.கே. அத்வானியை எதிர்த்துக் காங்கிரஸ் வேட்பாளராகக் களம் காண்கிறார் டி.என். சேஷன் என்ற செய்தி நாடெங்கும் அதிர்வலைகளைப் பரப்பியுள்ளது. அரசியல் கட்சிகளையும், அரசியல்வாதிகளையும் சேஷனை விட மிக மோசமாக விமர்சித்தவர்கள் யாரும் இருக்க முடியாது.

பதவிக்காலத்தில் சேஷன் எடுத்த கடுமையான நடவடிக்கைகள் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றன. அரசியல்வாதிகள் மீது பொதுமக்களுக்கிருந்த வெறுப்பும், கோபமும் இவரது பேச்சில் எதிரொலித்ததால் அரசியல் கட்சிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார்.

விதிமுறைகளைத் துணிச்சலாக அமல்படுத்தித் தேர்தலில் முறைகேடுகளைக் களைய, இவர் எடுத்த முயற்சிகள் பாராட்டத் தக்கவை.

அரசியல் குறித்து, சேஷன் உதிர்த்த சில முத்தான கருத்துகளைப் பார்ப்போம் :

''ஊழல் செய்த அரசியல்வாதிகள் எல்லாம் இப்போது சிறைக்குப் போவதில்லை, கோட்டைக்குத்தான் போய்க் கொண்டிருக்கிறார்கள்.''

''அமைச்சர் (Minister), பணபலம் (Money), அடியாட்கள் (muscle) அகிய மூன்று 'M'கள்தான் தேர்தலைத் தீர்மானிக்கின்றன.''

''சாதி (caste), ஊழல் (corruption), குற்றச் செயல் (criminality) அகிய மூன்று 'C' க்களும் தேர்தலில் முக்கிய பங்காற்றுகின்றன"

என்று பேசிய சேஷனின் கருத்துகள் நடுநிலையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.

ஓய்வு பெற்ற பிறகு நிஜலிங்கப்பா தலைமையிலான காந்திய அமைப்பில் இணைந்தார். பின்னர் தேசபக்த அறக்கட்டளை என்று ஒன்றைத் துவக்கினார். இந்த அறக்கட்டளையில் சுயநல அரசியல்வாதிகளை அனுமதிக்கமாட்டேன் என முழங்கினார். சிவசேனை ஆதரவுடன் குடியரசுத் தலைவராக முயற்சித்தார். கே. ஆர். நாராயணனை எதிர்த்துப் போட்டியிட்டு வைப்புத் தொகையை இழந்தார். இன்று கட்டெறும்பாகியுள்ள இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேர்தலைச் சந்திப்பதன் மூலம் எஞ்சியிருந்த நன்மதிப்பையும் இழந்துள்ளார்.

இவரது இந்த செயல் இதுவரையிலான கொள்கை முழக்கங்களையெல்லாம் வெற்றுப் பிதற்றல்களாக்கி விட்டதுதான் பெரிய சோகம். உண்மையில் கைதேர்ந்த அரசியல்வாதியாகும் முயற்சியின் படிப்படியான அணுகுமுறையாகவும், பரிணாம வளர்ச்சியாகவுமே சேஷனின் நடவடிக்கைகளை நினைக்க வேண்டியுள்ளது.

தனது புதிய முடிவை நியாயப்படுத்தித் தனக்கே உரிய பாணியில் மிகச் சிறந்த விளக்கங்களை சேஷனால் தரமுடியும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு வகையில் 'அத்வானியை பிழைத்த வேட்பாளராக' முடிவு செய்திருக்கும் சேஷனின் பேராண்மையைப் பாராட்டத்தான் வேண்டும்.

பா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக