சனி, 25 டிசம்பர், 2010

வன்முறை முகத்தைத் தொலையுங்கள்!

புதிய தமிழகம் கட்சியுடன் வன்முறையும் வால் பிடித்து வருவது வருத்தமளிக்கிறது. மாஞ்சோலைத் தொழிலாளர்களுக்காக நெல்லையில் நடைபெற்ற பேரணியில் கலவரம் வெடித்ததும், 18 உயிர்கள் தாமிரபரணியில் ஜலசமாதியடைந்ததும் நினைவில் இருந்து அகலும் முன்பே தேனியில் மற்றொரு சம்பவம். புதிய தமிழகம் கட்சி சார்பாகப் பெரியகுளம் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காகத் தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் சென்றபோதும் கலவரம் வெடித்துள்ளது.

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே மாட்டு வண்டிகளில் புறப்பட்ட புதிய தமிழகம், .மா.கா., விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் ஊர்வலமாக வந்துள்ளனர். மனு தாக்கலுக்காக வந்திருந்த ஃபார்வர்டு பிளாக் கட்சித் தொண்டர்களுடன் வாக்குவாதத்தில் இறங்க கல்வீச்சு நடந்துள்ளது. காவலர்கள் தலையிட்டு ஃபார்வர்டு பிளாக் கட்சித் தொண்டர்களை மாற்றுப் பாதையில் அனுப்பியுள்ளனர்.

ஆட்சியாளர் அலுவலகத்தை அடைந்த புதிய தமிழகம் கட்சியினரின் ஊர்வலம் காவலர்களின் கட்டுப்பாட்டையும் மீறி உள்ளே நுழைந்துள்ளது. புதிய தமிழகம் கட்சியின் தொண்டர்களில் சிலர், ஃபார்வர்டு பிளாக் கட்சியினரின் வாகனம் ஒன்றை (ஜீப்) அடித்து நொறுக்கி தீ வைக்கவும் முயற்சித்துள்ளனர். நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து காவலர்கள் தடியடிப் பிரயோகம் செய்துள்ளனர். இங்கும் கல்வீச்சு நடந்துள்ளது. பாண்டியன் என்ற காவலருக்கு அரிவாள் வெட்டும் விழுந்துள்ளது. அருகில் இருந்த கரும்புத் தோட்டத்திற்குத் தீ வைக்கப்பட்டது. மீண்டும் தடியடி. மாவட்ட எஸ்.பி. தலைமையில் அதிரடிப்படை வருகை. எஸ்.பி. மீதும் சரமாரி கல்வீச்சு. அதிரடிப்படையினர் கலவரக்காரர்களை விரட்டுதல் என்ற பரபரப்பான காட்சிகள். நெல்லைக் கலவரத்தின் மறு பதிப்பாகவே தேனி கலவரமும் விளங்குகிறது. ஒரே ஆறுதல் இங்கு உயிர்ப்பலி ஏதும் நிகழவில்லை என்பதுதான்.

தொண்டர்கள் உணர்ச்சிவசப்படுவதென்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அவர்களைக் கட்டுக்குள் கொண்டுவருவது, அவர்களை வழி நடத்தும் தலைவர்களின் தலையாய கடமை அல்லவா ? நெல்லையிலும், தேனியிலும் தொண்டர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் புதிய தமிழகம் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தவித்திருப்பது அவர்களின் இயலாமையை வெளிப்படுத்துகிறது. தங்கள் கட்சிக் கூட்டங்களுக்கு, ஊர்வலங்களுக்குப் பெருங்கூட்டம் கூட வேண்டும் என்று தலைவர்கள் எதிர்பார்ப்பது இயற்கைதான். அப்படிக் கூடும் கூட்டத்தை வன்முறை வழி செல்லாது கட்டுப்படுத்தும் வல்லமை புதிய தமிழகம் கட்சிக்கு இல்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. மலரும் நிலையில் உள்ள புதிய தமிழகம் போன்ற கட்சிக்கு இது போன்ற சம்பவங்கள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்ட தலித் இன மக்களுக்காகப் போராடும் இக் கட்சியும், குழுக்களும் காந்திய வழியில் அறப் போராட்டங்களில் ஈடுபடுவதை விடுத்து அடிக்கடி வன்முறையில் ஈடுபடுவது அழிவுப்பாதையில் செல்வதாக அமைந்து விடும்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தனது தொண்டர்களை நெறிமுறைப்படுத்த வேண்டும். அக் கட்சியுடன் கூட்டணி கண்டுள்ள .மா.கா. தலைவர் மூப்பனார் இது குறித்து தக்க அறிவுரை அளித்தல் மிக அவசியமாகின்றது. நாடாளுமன்ற உறுப்பினராக விரும்பும் நடிகர் மன்சூரலிகானும் தனது சினிமா பாணி வில்லத்தனங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டுப் பண்புடன் நடந்துகொள்ளப் பழக வேண்டும். எந்த ஒரு சமூகமும் வன்முறை வழி நடந்து வளம்பெற்று விட முடியாது. புதிய தமிழகம் கட்சி, மக்களிடம் இருந்து அன்னியப்பட்டுவிடும் அபாயம் இருப்பதை உணர்ந்து அமைதிப்பாதைக்கு உடனடியாகத் திரும்ப வேண்டும். இல்லையேல் தலித் இன மக்களின் நியாயமான கோரிக்கைகள் கூட சந்தேகக் கண்கொண்டே பார்க்கப்படும் பேரிழப்பு நேர்வதைத் தடுக்க முடியாது.

பா. சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக