சனி, 25 டிசம்பர், 2010

'விரிவடையும் விரிசல்கள்' - பரிதவிக்கும் காங்கிரஸ்

.தி.மு.. - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்கள் விரிவடைய ஆரம்பித்துள்ளது கண்கூடாகத் தெரிய ஆரம்பித்துள்ளது. சோனியாவுடனான கூட்டுப் பிரச்சாரத்தை ஜெயலலிதா தவிர்த்தது அக் கூட்டணிக்கு மிகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீரும், எண்ணையுமாக ஒட்டாமல் தனித்தனியே நிற்கிறது இக் கூட்டணி.

இதற்கு ஜெயலலிதாவை மட்டுமே குறை சொல்ல முடியாது. ஜெயலலிதா தனது பிரச்சாரங்களில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக சோனியா பெயரை முன்னிறுத்துவதில்லை. காங்கிரஸ் கட்சியே அதில் தயக்கம் காண்பிக்கும் போது ஜெயலலிதாவைக் குறை கூற முடியவில்லை. மின்னல் வேகத்தில் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீட்டையும் முடித்துவிட்ட ஜெயலலிதா தீவிர பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டார். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 12 தொகுதிகளில் வேட்பாளர்களை முடிவு செய்வதில் ஏற்பட்ட குழப்பமும், தாமதமும் ஜெயலலிதாவைக் கடும் எரிச்சலுக்குள்ளாக்கியது.

தி.மு.. கூட்டணியில் யார் ஜெயித்தாலும் மத்திய அமைச்சர்தான் என்று நம்பிக்கையோடு இருக்க, காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி அமைப்போம் என்று கூறி வருவதில் ஜெயலலிதாவுக்கு எரிச்சல். இந்த நிலையில் திருச்சி பொதுக்கூட்டத்தில் சோனியா, கூட்டணி ஆட்சிகளின் குழப்பங்களைக் கடுமையாகத் தாக்கிப் பேசியது 'அம்மாவுக்கு' அதிர்ச்சியளித்தது.

மன்மோகன்சிங் வேறு தன் பங்குக்கு 'ஊழல் அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதற்குரிய தண்டனையை அனுபவித்தாக வேண்டும்' என்று திருவாய் மலர்ந்தது ஜெயலலிதாவை மேலும் கோபாவேசப்படுத்திவிட்டது. இவற்றுக்கெல்லாம் தக்க முறையில் பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைத்தார் ஜெயலலிதா. சோனியாவுடன் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்யவிருந்த விழுப்புரம் பொதுக்கூட்டத்தைப் புறக்கணிப்பதென்று முடிவெடுத்தார்.

போயஸ் தோட்ட வீட்டை விட்டு மிகத் தாமதமாக மாலை 3.30 மணி அளவில் புறப்பட்ட .தி.மு.. தலைவி வழி நெடுக தெருமுனைப் பிரச்சாரம் செய்தபடி ஊர்ந்து செல்ல ஆரம்பித்தார்.

காங்கிரஸ் தரப்பு மண்டை காய்ந்துவிட்டது. பாவம் சோனியா. திருச்சியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு அவசரம் அவசரமாக விழுப்புரத்துக்குப் பறந்து வந்தார். ஒரு மணி நேரத்திற்கும் கூடுதலாக ஜெயலலிதாவிற்காகக் காத்திருந்த சோனியா விழுப்புரத்தில் தனியாகப் பிரச்சாரம் செய்தார்.

காங்கிரஸ் வேட்பாளர்கள் திண்டிவனம் ராமமூர்த்தி (திண்டிவனம்), கே.வி. தங்கபாலு (அரக்கோணம்), கிருஷ்ணசாமி (வந்தவாசி), டாக்டர் சுமதி (சிதம்பரம்), ஃபரூக் மரைக்காயர் (பாண்டிச்சேரி) ஆகியோரை மட்டும் அறிமுகப்படுத்தினார். .தி.மு.. வேட்பாளர்களைக் கண்டுகொள்ளவில்லை.

விழுப்புரம் மாவட்ட .தி.மு.. செயலர் எஸ்.எஸ். பன்னீர்செல்வம், '' மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதால் ஜெயலலிதாவால் இக் கூட்டத்திற்கு வரமுடியவில்லை'' என்று தயங்கித் தயங்கி மேடையில் விளக்கமளித்ததைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

ஜெயலலிதாவின் இந்தப் புறக்கணிப்புக்குப் பல்வேறு காரணங்கள் முன் வைக்கப்பட்டாலும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் பெரிதும் சோர்வடைந்து விட்டனர் என்றே சொல்ல வேண்டும். இரண்டு தலைவர்களும் ஒன்றாகப் பிரச்சாரம் செய்வதன் மூலம் மக்களை, குறிப்பாகத் தாய்க்குலத்தைப் பெருவாரியாகக் கவர்ந்து விடலாம் என்ற நம்பிக்கையில் மண் விழுந்ததில் காங்கிரஸ்தான் கலகலத்துப் போய் உள்ளது. சோனியாவுடன், ராகுல் காந்தியும் வந்ததால் திருச்சியிலும், விழுப்புரத்திலும் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தனர்.

ஆனால், ஜெயலலிதாவின் புறக்கணிப்பு அதை புஸ்வாணமாக்கி விட்டது. வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஒருமித்துப் பணியாற்ற வேண்டிய தேர்தல் களத்தில் இத்தகைய பிணக்குகள் எதிரிகளுக்கு சாதகமாகி விடும் என்பதை இத் தலைவர்கள் கருத்தில் கொள்ளாததுதான் ஆச்சரியம்.

'வெண்ணை திரளும்போது தாழியை உடைக்கிறாரே' என்று .தி.மு..வினரே ஆதங்கப்படுகின்றனர். ஜெயலலிதாவின் சுபாவத்தை நன்கறிந்தவர்களுக்கு இது எந்த ஆச்சர்யத்தையும் கொடுக்கவில்லை. இப்போது கூட காங்கிரஸ் கட்சிதான் சமாதானங்களைக் கூறி சமாளித்துக் கொண்டிருக்கிறது.

ஒரு தேசியக் கட்சியின் தலைவருக்கு நேர்ந்த அவமானமாக இதை பா... கூட்டணி வர்ணிக்கும்போது அதை மறுக்கும் திராணி காங்கிரசுக்கு நிச்சயம் இல்லை.

விரிசல்கள் இதே வேகத்தில் விரிவடைந்தால் .தி.மு.. கூட்டணிக்கு வெற்றியும் விரிசல் கண்டுவிடும்.

பா. சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக