சனி, 25 டிசம்பர், 2010

புகுந்து விளையாடும் தேர்தல் ஆணையம்

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் தேர்தல்களைச் சுமூகமாக நடத்தி முடிப்பதென்பது உண்மையிலேயே மிகப் பெரிய சாதனைதான். இந்தியத் தேர்தல் ஆணையத்தை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். அதன் கெடுபிடியில் அரசியல் கட்சிகள் அஞ்சி ஒடுங்குவது வேடிக்கையாக உள்ளது. இப்படி ஒரு நல்ல அங்குசம் இல்லாவிட்டால் அரசியல் யானையை அடக்கி ஆள்வது மிகச் சிரமம். அதிலும் தேர்தல் காலங்களில் இந்த யானைக்கு 'மதம்' பிடித்துவிடுமே.

ஆளும் கட்சி வாக்காளர்களைக் கவரும் விதமாக மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதைத் தடைசெய்வது நியாயமான ஒன்றே. இதற்காக அங்கலாய்த்துக் கொள்பவரை அலட்சியப் படுத்திதான் ஆக வேண்டும்.

'அங்குசத்தை' அலட்சியமாக, லாவகமாக அழுத்தமாக பிரயோகித்த பெருமை டி.என். சேஷனுக்கு உரியது. அவரைத் தொடர்ந்து வந்த ஆணையர்களும் அவரது வழிமுறைகளைப் பின்பற்றத் துவங்கியுள்ளனர். அரசியல் கட்சிகள் ஆணையத்தின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்வதுதான் நியாயமாகும்.

இம்முறை தேர்தல் செலவுகள் குறித்து அவ்வளவு இறுக்கமான கட்டுப்பாட்டை ஆணையம் வற்புறுத்தாமல் இருப்பதே அரசியல் கட்சிகளுக்குக் காட்டப்படும் பெரிய சலுகை எனச் சொல்லலாம்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் செல்லும் அரசு விமானத்தில் செய்தியாளர்களை அழைத்துச் செல்ல ஆணையம் அனுமதி மறுத்துள்ளது. இந்தத் தடை புதிய ஒன்றல்ல. நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள விதிதான். முந்தைய பிரதமர்களுக்கும் இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. இதை அரசுக்கும், ஆணையத்திற்கும் இடையேயான மோதலாகச் சித்தரிக்க முனைவது சரியல்ல. ஆணையம் அதன் கடமையை சுதந்திரமாகச் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.

கார்கில் போர் தொடர்பான விவரணப் படம் ஒன்றைத் திரையிடவும் ஆணையம் தடை விதித்துள்ளது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நமது இராணுவத்தினரின் நடுநிலைமையை எந்த வகையிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ மற்றவர்கள் கருத்துக் கூறவோ, குறை கூறவோ இடம் தரக் கூடாது என்று ஆணையம் சுட்டிக் காட்டியுள்ளது. தமிழகத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவும் தன் பங்குக்குக் கலக்க ஆரம்பித்துள்ளார்.

இரவு 10 மணிக்கு மேல் கண்டிப்பாகத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசக்கூடாது. விதியை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

இரவு 10 மணிக்கு மேல் மைக் இல்லாமல் பேசுவது கூட விதியை மீறுவதாகும். சைகை மூலம் பிரச்சாரம் செய்வது, ஊர்வலமாகச் செல்வது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் .தி.மு.. பொதுச் செயலாளர் வைகோ இரவு 10 மணிக்குப் பின்னர் ஒலிபெருக்கி இல்லாமல் பிரச்சாரம் செய்துள்ளார். .தி.மு.. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரவு 10 மணிக்குப் பின்னர் சைகை மூலம் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் குரலுக்கு அரசியல்வாதிகள் செவிகொடுத்துத்தான் தீரவேண்டும்.

பா.சங்கர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக