இந்தியாவின் அடுத்த பிரதமராகப் போவது யார் என்ற கேள்விக்கான விடையை உலகமே ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. இன்று 'பிரதம' ஓட்டத்திற்கான களத்தில் தயார் நிலையில் நிற்கும் ஒரே வேட்பாளர் பா.ஜ.க.வின் வாஜ்பாய் மட்டும்தான்.
சோனியா காந்தியைப் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முன்னிறுத்துவதில், காங்கிரஸ் கட்சி காட்டிவரும் தயக்கத்தைக் கூட்டணிக் கட்சித் தலைவரான ஜெயலலிதாவே மறைமுகமாகக் கேலி செய்துள்ளார்.
பிரதமர் பதவிக்கான போட்டியில், வாஜ்பாயைப் பொறுத்தவரை மிக சாதகமான துவக்கம் உறுதி என்றே தெரிகிறது. பா.ஜ.க. விலும் அவரது வளர்ச்சி ஆச்சரியகரமான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு மிதவாதத் தலைவர் என்ற நிலையிலிருந்து இன்று சக்திவாய்ந்த, போற்றத்தக்க மனிதராக உயர்ந்திருக்கும் வாஜ்பாய் கடந்து வந்திருக்கும் பாதை, வகித்த பதவிகள், பலம், பலவீனம், சந்தித்த சோதனைகள் அதைத் தொடரும் சாதனைகள் ஆகியவற்றை சற்று விரிவாகவே விழியூன்றலாம்.
வாஜ்பாய் முதன்முதலில் பொதுவாழ்வில் பிரவேசித்தது 1952 இல்தான். ஜனசங்க ஸ்தாபகர் ஷ்யாமா பிரசாத் முகர்ஜியின் செயலராகப் பிள்ளையார் சுழி போடுகிறார். ஐந்தே வருடம்.... 1957 இல் நாடாளுமன்றத்தில் நல்ல பேச்சாளராக முத்திரை பதிக்கிறார். ஜனசங்கத்தின் பொதுமுகமாக வாஜ்பாய் அங்கீகரிக்கப்படுகிறார். 1967 இல் பசு வதைத் தடை, இந்திப் போராட்டம் ஆகியவற்றில் தீவிர ஈடுபாடு. தேர்தலில் ஜனசங்கம் நல்ல முன்னேற்றம் காண்கிறது. 1977 இல் மொரார்ஜி தேசாயின் அரசில் வெளியுறவு அமைச்சர் பதவி தேடி வருகிறது. அந்த காலக் கட்டத்தில் பாகிஸ்தானுடனான உறவை மேம்படுத்தித் தனது முத்திரையை அழுந்தப் பதிக்கிறார்.
1980 இல் பாரதிய ஜனதா கட்சி உதயமாகிறது. வாஜ்பாய் தலைமைப் பொறுப்பேற்கிறார். 1984 இல் சிறிது பின்னடைவு. சரண்சிங்குடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதில் தோல்வி. பா.ஜ.க. வின் அயோத்தி சம்பந்தப்பட்ட தீவிரவாதப் போக்கு வாஜ்பாய்க்குப் பொருந்தவில்லை. எனினும் கட்சிக்குக் கட்டுப்பட்டு நடந்துகொள்கிறார். எல்.கே.அத்வானியின் செல்வாக்கு உயர்கிறது. கட்சியின் பிரதான தலைவர் என்ற இடத்தை அத்வானி கைப்பற்றுகிறார்.
1996 இல் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அரசு அமைக்க வாஜ்பாய் அழைக்கப்படுகிறார். பதின்மூன்று நாள்கள் மட்டுமே நீடித்தது பதவிக்காலம். நம்பிக்கைத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதலளித்து வாஜ்பாய் பேசிய பேச்சு மக்களை வெகுவாகக் கவர்ந்தது. 1998 தேர்தலில் மீண்டும் பிரதமர் பதவியில் அமர்கிறார். கூட்டணிக் குழப்பங்களாலும், நிர்ப்பந்தங்களாலும் 13 மாத கால பா.ஜ.க. ஆட்சி முடிவுக்கு வருகிறது. அடுத்த முறை 13 வருடங்கள் பா.ஜ.க. ஆட்சி நீடிக்கும் என்று அக் கட்சியின் தலைவர்கள் நம்பிக்கையோடு சொல்கிறார்கள். அவர்களது நம்பிக்கைக்கு முக்கிய காரணம் வாஜ்பாயின் வளர்ச்சிதான். தவறான கட்சியிலிருக்கும் சரியான தலைவர் எனறு வாஜ்பாயை வர்ணிப்பவர்கள் உண்டு.
ன்று பா.ஜ.க. தீவிர இந்துத்வ ஆதரவு நிலையில் இருந்து இறங்கி வந்து, வாலாட்டாமல் அமைதி காக்கிறது என்றால், வாஜ்பாய்தான் அதற்குக் காரணம். சங்க் பரிவாரில் இருக்கும் தூய சித்தாந்தவாதிகளையே மிதவாதப் பாதைக்குத் திருப்பியவர் வாஜ்பாய். லாகூருக்குப் பேருந்துப் பயணம், போக்ரான் அணுகுண்டு வெடிப்பு, கார்கில் போரில் வெற்றி என்று இவரது சாதனைகளைப் பட்டியலிடுகிறது பா.ஜ.க. இந்திய சரித்திரத்தில் நீண்ட காலத்திற்கு காபந்து அரசைத் தலைமை ஏற்று நடத்தும் வாய்ப்பு கிடைத்ததும் வாஜ்பாய் சுதாரித்துக் கொண்டார். ஒரே ஒரு ஓட்டில் ஆட்சி கவிழ்ந்ததில் மக்களிடையே எழுந்த அனுதாபத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டார். காபந்து அரசின் அதிகாரங்கள் பற்றி அரசியல் சட்டத்தில் அறுதியிட்டுக் கூறப்படாததைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு சுதந்திரமாகச் செயல்பட ஆரம்பித்தார். ஜெயலலிதா போன்ற சுமைகள் விலகிவிட்டதால் கட்டுப்பாடு எதுவுமின்றி சுயமாகத் தீவிர முடிவுகளை அமல்படுத்துகிறார்.
அவசரப்பட்டு ஆட்சியைக் கலைத்து விட்டுத் திடீர் தேர்தல் வந்துவிட, வாஜ்பாயின் புதிய அதிரடி அரசியல் பாணியில் எதிர்க்கட்சிகள் வாய் பிளக்கின்றன. கார்கில் யுத்தத்தில் இராணுவ ரீதியாகவும், உலக நாடுகளின் ஒருமித்த ஆதரவைத் திரட்ட முடிந்ததில் ராஜ தந்திர ரீதியாகவும் வாஜ்பாய் அடைந்த வெற்றி அவரை வெற்றிகரமான தலைவராக உயர்த்திவிட்டதாக பா.ஜ.க. வினர் கருதுகிறார்கள்.
பலராலும் ஒப்புக்கொள்ளப்படும் அணுகுமுறை, பொறுப்புகளைப் பகிர்ந்தளித்தல், நாடாளுமன்றம், அமைச்சரவை, கட்சி என்று அனைத்து அமைப்புகளையும் மதித்து நடப்பது போன்றவை வாஜ்பாயின் பலங்களாகப் பட்டியலிடப்படுகின்றன. அளவுக்கதிகமான சகிப்புத் தன்மையும், பொறுத்துப் போகும் போக்கும் பலவீனங்களாகக் கூறப்பட்டாலும் அவற்றைப் புறந்தள்ளி முன்னேறுகிறார் வாஜ்பாய்.
தற்போது அதிர்ஷ்டக் காற்று வாஜ்பாய் பக்கமாக வீசுவதாகவே தோன்றுகிறது. பொருளாதாரம், சாம்பலில் இருந்து உயிர் பெற்று எழும் ஃபீனிக்ஸ் பறவையாகக் கண்விழித்துப் பார்க்கிறது. பணவீக்கம் வரலாறு காணாத அளவுக்குக் கீழிறங்கி கட்டுப்படுகிறது. உணவு தானிய உற்பத்தியும், அன்னியச் செலாவணி இருப்பும் திருப்திகரம்.
நிலையான ஆட்சி, திறமையான பிரதமர் என்ற கோஷத்தோடு களமிறங்கும் பா.ஜ.க. வாஜ்பாய் வல்லமையை முழுமையாக நம்புகிறது. தனிப்பெரும்பான்மை பெற்றாலுமே கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் பங்களிப்போம் என்ற பா.ஜ.க. வின் உறுதிமொழி கவர்ச்சியானது. கூட்டணிக் கட்சிகள் ஆர்வமாகவும், உண்மையாகவும் உழைக்கத் தூண்டுகோலாக இது அமைகிறது.
சோனியா காந்தி முழுமையாகக் களம் இறங்காத நிலையில் வாஜ்பாய் பாய்வதற்குத் தயாராகக் காத்திருக்கிறார். வெற்றிக் காற்று அவர் பக்கமாகவே வீசிக் கொண்டிருக்கிறது.
பா.சங்கர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக