புதன், 29 டிசம்பர், 2010

சச்சின் 50

டெஸ்ட் சதத்திலே 
அரைசதம் கண்டாய் போற்றி
சர்வதேச சதத்திலே 
சதம் காண்பாய் போற்றி
ஒருநாளிலே 
இருசதம் கண்டாய் போற்றி
ரன் குவிப்பிலும் 
முதல்வனாய் நீயே போற்றி
அதிக போட்டிகளில் ஆடினாய் போற்றி
அந்நிய மண்ணில் அதிக ரன், 
அதிக சதம் அடித்தாய் போற்றி
ஓராண்டில் ஏழு சதம் விளாசினாய் போற்றி
கங்காரு கொண்டான் போற்றி
பகைவரும் போற்றும் 
பண்பாளனே போற்றி
விருதுகள் பல வென்றாய் போற்றி
பத்மவிபூஷனனே போற்றி
கொடுத்தாலும் இல்லை என்றாலும் 
பாரத ரத்தினம் நீயே போற்றி
சாதனை நாயகனே 
சச்சினே போற்றி போற்றி...

பா.சங்கர்

காமராஜர் அரங்கில் இசை மழை

மார்கழியில் அணிவகுக்கும் கர்னாடக இசை நிகழ்ச்சிகளில் லஷ்மன் ஸ்ருதியின் ‘சென்னையில் திருவையாறு’ தனி இடம் பிடித்துள்ளது. தொடர்ச்சியாக 6வது ஆண்டாக இந்த இசை வைபவத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது திருப்தியும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.
தொடர்ந்து 8 நாட்களுக்கு முன்னணி கலைஞர்களின் 45 நிகழ்ச்சிகளை நடத்துவது, உண்மையிலேயே பிரமிப்பூட்டும் இமாலய முயற்சி என்பதில் சந்தேகமே இல்லை. இதே காமராஜர் அரங்கில் 16 ஆண்டுகளுக்கு முன் தொடர்ந்து 36 மணி நேரத்துக்கு மாரத்தான் இசை நிகழ்ச்சி நடத்தி சாதனை படைத்த அனுபவம் உள்ள லஷ்மன் ஸ்ருதிக்கு இது சர்வ சாதாரணம்தான்.
மெல்லிசைக் குழுவான லஷ்மன் ஸ்ருதிக்கும் கர்னாடக இசைக்கும் கொஞ்சம் தூரம்தான்! என்றாலும் நண்பர் லஷ்மனைப் பொருத்த வரை எடுத்த காரியத்தில் இருந்து பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை. ஒரு கலை சேவையாக ‘சென்னையில் திருவையாறு’ நிகழ்ச்சியை தொடர்வோம் என்ற அவரது உறுதிதான், அந்த நிகழ்ச்சிக்கு தனித்துவமான பெயரையும் பெருமையையும் பெற்றுத் தந்துள்ளது. சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியில் பங்கேற்பதில், முன்னணி கர்னாடக இசைக் கலைஞர்கள் காட்டும் ஆர்வம் அதை மேலும் உறுதி செய்கிறது.
சென்னையின் மூலை முடுக்குகளில் எல்லாம் சென்னையில் திருவையாறு சுவரொட்டிகள், கர்னாடக இசைக் கலைஞர்களின் பிரம்மாண்ட பேனர்கள். நிறைவு நாளின் கடைசி நிகழ்ச்சியான எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் நிகழ்ச்சிக்கு முதல் நாளிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தது குறிப்பிடத்தக்கது. 24ம் தேதி காலை பரசுராம் ஸ்ரீராம் – அனுராதா ஸ்ரீராம் கர்னாடக இந்துஸ்தானி ஜுகல்பந்தி நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். சுகமான அனுபவம்.
வெளியில் வரும்போது காமராஜர் அரங்கையும் அதன் எதிரே இருக்கும் ஸ்டெர்லிங் டவர்ஸ் கட்டிடத்தையும் அங்கிருந்து பொடிநடையாக பேருந்து நிறுத்தம் செல்கையில், செம்மொழிப் பூங்கா நுழைவாயிலையும் புகைப்படம் எடுத்தேன். ஒருநாள் பூங்கா முழுவதையும் சுற்றிப் பார்த்து விரிவாக எழுத வேண்டும். புத்தாண்டில் அதற்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன்.  







பா.சங்கர்

சனி, 25 டிசம்பர், 2010

தேர்தல் முன்னோட்டம்...

தேர்தல் நெருங்குகிறது. யார் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறார்கள், எந்த கட்சி எங்கே தாவப் போகிறது, யாருக்கு சாதகமாக அலை வீசுகிறது? அனல் பறக்கும் பிரச்சாரங்கள், கருத்துக் கணிப்புகள்… இப்படி ஒவ்வொன்றாய் அணிவகுக்க காத்திருக்கின்றன. அன்றாட நிகழ்வுகளை, அரசியல் போக்கை விருப்பு வெறுப்பு இல்லாமல் நடுநிலையோடு பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.  
களத்தில் இறங்குவதற்கு முன், 1999 தேர்தலின்போது ஆறாம்திணை இணைய இதழில் எழுதிய பதிவுகளை படித்து வைக்கலாம் என்று தேடிப் பிடித்து தூசி தட்டினேன். ஒரு சில சொந்த சிந்தனைகள், பல செய்தி தொகுப்புகள், மொழிபெயர்ப்புகள். கொஞ்சம் சுமாராக இருக்கிற மாதிரிதான் தோன்றியது. நல்ல தமிழில் எழுதும் முயற்சியை ஆறாம்திணை ஊக்குவித்தது. அதைத் தொடர முடியாமல் போனது துரதிர்ஷ்டம்.
இந்தப் பதிவுகள் காலக் கண்ணாடியாக அன்றைய நிலையை பிரதிபலிக்கின்றன. மாறுபட்ட கருத்துகளுக்கும், முரண்பாடுகளுக்கும் நிறையவே வாய்ப்பு உள்ளது. அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு, மேலோட்டமாய் படித்து வையுங்கள்.     

வன்முறை முகத்தைத் தொலையுங்கள்!

புதிய தமிழகம் கட்சியுடன் வன்முறையும் வால் பிடித்து வருவது வருத்தமளிக்கிறது. மாஞ்சோலைத் தொழிலாளர்களுக்காக நெல்லையில் நடைபெற்ற பேரணியில் கலவரம் வெடித்ததும், 18 உயிர்கள் தாமிரபரணியில் ஜலசமாதியடைந்ததும் நினைவில் இருந்து அகலும் முன்பே தேனியில் மற்றொரு சம்பவம். புதிய தமிழகம் கட்சி சார்பாகப் பெரியகுளம் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காகத் தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் சென்றபோதும் கலவரம் வெடித்துள்ளது.

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே மாட்டு வண்டிகளில் புறப்பட்ட புதிய தமிழகம், .மா.கா., விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும், தொண்டர்களும் ஊர்வலமாக வந்துள்ளனர். மனு தாக்கலுக்காக வந்திருந்த ஃபார்வர்டு பிளாக் கட்சித் தொண்டர்களுடன் வாக்குவாதத்தில் இறங்க கல்வீச்சு நடந்துள்ளது. காவலர்கள் தலையிட்டு ஃபார்வர்டு பிளாக் கட்சித் தொண்டர்களை மாற்றுப் பாதையில் அனுப்பியுள்ளனர்.

ஆட்சியாளர் அலுவலகத்தை அடைந்த புதிய தமிழகம் கட்சியினரின் ஊர்வலம் காவலர்களின் கட்டுப்பாட்டையும் மீறி உள்ளே நுழைந்துள்ளது. புதிய தமிழகம் கட்சியின் தொண்டர்களில் சிலர், ஃபார்வர்டு பிளாக் கட்சியினரின் வாகனம் ஒன்றை (ஜீப்) அடித்து நொறுக்கி தீ வைக்கவும் முயற்சித்துள்ளனர். நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து காவலர்கள் தடியடிப் பிரயோகம் செய்துள்ளனர். இங்கும் கல்வீச்சு நடந்துள்ளது. பாண்டியன் என்ற காவலருக்கு அரிவாள் வெட்டும் விழுந்துள்ளது. அருகில் இருந்த கரும்புத் தோட்டத்திற்குத் தீ வைக்கப்பட்டது. மீண்டும் தடியடி. மாவட்ட எஸ்.பி. தலைமையில் அதிரடிப்படை வருகை. எஸ்.பி. மீதும் சரமாரி கல்வீச்சு. அதிரடிப்படையினர் கலவரக்காரர்களை விரட்டுதல் என்ற பரபரப்பான காட்சிகள். நெல்லைக் கலவரத்தின் மறு பதிப்பாகவே தேனி கலவரமும் விளங்குகிறது. ஒரே ஆறுதல் இங்கு உயிர்ப்பலி ஏதும் நிகழவில்லை என்பதுதான்.

தொண்டர்கள் உணர்ச்சிவசப்படுவதென்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் அவர்களைக் கட்டுக்குள் கொண்டுவருவது, அவர்களை வழி நடத்தும் தலைவர்களின் தலையாய கடமை அல்லவா ? நெல்லையிலும், தேனியிலும் தொண்டர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் புதிய தமிழகம் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தவித்திருப்பது அவர்களின் இயலாமையை வெளிப்படுத்துகிறது. தங்கள் கட்சிக் கூட்டங்களுக்கு, ஊர்வலங்களுக்குப் பெருங்கூட்டம் கூட வேண்டும் என்று தலைவர்கள் எதிர்பார்ப்பது இயற்கைதான். அப்படிக் கூடும் கூட்டத்தை வன்முறை வழி செல்லாது கட்டுப்படுத்தும் வல்லமை புதிய தமிழகம் கட்சிக்கு இல்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. மலரும் நிலையில் உள்ள புதிய தமிழகம் போன்ற கட்சிக்கு இது போன்ற சம்பவங்கள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்ட தலித் இன மக்களுக்காகப் போராடும் இக் கட்சியும், குழுக்களும் காந்திய வழியில் அறப் போராட்டங்களில் ஈடுபடுவதை விடுத்து அடிக்கடி வன்முறையில் ஈடுபடுவது அழிவுப்பாதையில் செல்வதாக அமைந்து விடும்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தனது தொண்டர்களை நெறிமுறைப்படுத்த வேண்டும். அக் கட்சியுடன் கூட்டணி கண்டுள்ள .மா.கா. தலைவர் மூப்பனார் இது குறித்து தக்க அறிவுரை அளித்தல் மிக அவசியமாகின்றது. நாடாளுமன்ற உறுப்பினராக விரும்பும் நடிகர் மன்சூரலிகானும் தனது சினிமா பாணி வில்லத்தனங்களை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டுப் பண்புடன் நடந்துகொள்ளப் பழக வேண்டும். எந்த ஒரு சமூகமும் வன்முறை வழி நடந்து வளம்பெற்று விட முடியாது. புதிய தமிழகம் கட்சி, மக்களிடம் இருந்து அன்னியப்பட்டுவிடும் அபாயம் இருப்பதை உணர்ந்து அமைதிப்பாதைக்கு உடனடியாகத் திரும்ப வேண்டும். இல்லையேல் தலித் இன மக்களின் நியாயமான கோரிக்கைகள் கூட சந்தேகக் கண்கொண்டே பார்க்கப்படும் பேரிழப்பு நேர்வதைத் தடுக்க முடியாது.

பா. சங்கர்

'விரிவடையும் விரிசல்கள்' - பரிதவிக்கும் காங்கிரஸ்

.தி.மு.. - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்கள் விரிவடைய ஆரம்பித்துள்ளது கண்கூடாகத் தெரிய ஆரம்பித்துள்ளது. சோனியாவுடனான கூட்டுப் பிரச்சாரத்தை ஜெயலலிதா தவிர்த்தது அக் கூட்டணிக்கு மிகப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீரும், எண்ணையுமாக ஒட்டாமல் தனித்தனியே நிற்கிறது இக் கூட்டணி.

இதற்கு ஜெயலலிதாவை மட்டுமே குறை சொல்ல முடியாது. ஜெயலலிதா தனது பிரச்சாரங்களில் பிரதமர் பதவிக்கான வேட்பாளராக சோனியா பெயரை முன்னிறுத்துவதில்லை. காங்கிரஸ் கட்சியே அதில் தயக்கம் காண்பிக்கும் போது ஜெயலலிதாவைக் குறை கூற முடியவில்லை. மின்னல் வேகத்தில் கூட்டணி அமைத்து தொகுதிப் பங்கீட்டையும் முடித்துவிட்ட ஜெயலலிதா தீவிர பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டார். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 12 தொகுதிகளில் வேட்பாளர்களை முடிவு செய்வதில் ஏற்பட்ட குழப்பமும், தாமதமும் ஜெயலலிதாவைக் கடும் எரிச்சலுக்குள்ளாக்கியது.

தி.மு.. கூட்டணியில் யார் ஜெயித்தாலும் மத்திய அமைச்சர்தான் என்று நம்பிக்கையோடு இருக்க, காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி அமைப்போம் என்று கூறி வருவதில் ஜெயலலிதாவுக்கு எரிச்சல். இந்த நிலையில் திருச்சி பொதுக்கூட்டத்தில் சோனியா, கூட்டணி ஆட்சிகளின் குழப்பங்களைக் கடுமையாகத் தாக்கிப் பேசியது 'அம்மாவுக்கு' அதிர்ச்சியளித்தது.

மன்மோகன்சிங் வேறு தன் பங்குக்கு 'ஊழல் அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதற்குரிய தண்டனையை அனுபவித்தாக வேண்டும்' என்று திருவாய் மலர்ந்தது ஜெயலலிதாவை மேலும் கோபாவேசப்படுத்திவிட்டது. இவற்றுக்கெல்லாம் தக்க முறையில் பதிலடி கொடுக்க வேண்டும் என்று நினைத்தார் ஜெயலலிதா. சோனியாவுடன் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்யவிருந்த விழுப்புரம் பொதுக்கூட்டத்தைப் புறக்கணிப்பதென்று முடிவெடுத்தார்.

போயஸ் தோட்ட வீட்டை விட்டு மிகத் தாமதமாக மாலை 3.30 மணி அளவில் புறப்பட்ட .தி.மு.. தலைவி வழி நெடுக தெருமுனைப் பிரச்சாரம் செய்தபடி ஊர்ந்து செல்ல ஆரம்பித்தார்.

காங்கிரஸ் தரப்பு மண்டை காய்ந்துவிட்டது. பாவம் சோனியா. திருச்சியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு அவசரம் அவசரமாக விழுப்புரத்துக்குப் பறந்து வந்தார். ஒரு மணி நேரத்திற்கும் கூடுதலாக ஜெயலலிதாவிற்காகக் காத்திருந்த சோனியா விழுப்புரத்தில் தனியாகப் பிரச்சாரம் செய்தார்.

காங்கிரஸ் வேட்பாளர்கள் திண்டிவனம் ராமமூர்த்தி (திண்டிவனம்), கே.வி. தங்கபாலு (அரக்கோணம்), கிருஷ்ணசாமி (வந்தவாசி), டாக்டர் சுமதி (சிதம்பரம்), ஃபரூக் மரைக்காயர் (பாண்டிச்சேரி) ஆகியோரை மட்டும் அறிமுகப்படுத்தினார். .தி.மு.. வேட்பாளர்களைக் கண்டுகொள்ளவில்லை.

விழுப்புரம் மாவட்ட .தி.மு.. செயலர் எஸ்.எஸ். பன்னீர்செல்வம், '' மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளதால் ஜெயலலிதாவால் இக் கூட்டத்திற்கு வரமுடியவில்லை'' என்று தயங்கித் தயங்கி மேடையில் விளக்கமளித்ததைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

ஜெயலலிதாவின் இந்தப் புறக்கணிப்புக்குப் பல்வேறு காரணங்கள் முன் வைக்கப்பட்டாலும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் பெரிதும் சோர்வடைந்து விட்டனர் என்றே சொல்ல வேண்டும். இரண்டு தலைவர்களும் ஒன்றாகப் பிரச்சாரம் செய்வதன் மூலம் மக்களை, குறிப்பாகத் தாய்க்குலத்தைப் பெருவாரியாகக் கவர்ந்து விடலாம் என்ற நம்பிக்கையில் மண் விழுந்ததில் காங்கிரஸ்தான் கலகலத்துப் போய் உள்ளது. சோனியாவுடன், ராகுல் காந்தியும் வந்ததால் திருச்சியிலும், விழுப்புரத்திலும் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தனர்.

ஆனால், ஜெயலலிதாவின் புறக்கணிப்பு அதை புஸ்வாணமாக்கி விட்டது. வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஒருமித்துப் பணியாற்ற வேண்டிய தேர்தல் களத்தில் இத்தகைய பிணக்குகள் எதிரிகளுக்கு சாதகமாகி விடும் என்பதை இத் தலைவர்கள் கருத்தில் கொள்ளாததுதான் ஆச்சரியம்.

'வெண்ணை திரளும்போது தாழியை உடைக்கிறாரே' என்று .தி.மு..வினரே ஆதங்கப்படுகின்றனர். ஜெயலலிதாவின் சுபாவத்தை நன்கறிந்தவர்களுக்கு இது எந்த ஆச்சர்யத்தையும் கொடுக்கவில்லை. இப்போது கூட காங்கிரஸ் கட்சிதான் சமாதானங்களைக் கூறி சமாளித்துக் கொண்டிருக்கிறது.

ஒரு தேசியக் கட்சியின் தலைவருக்கு நேர்ந்த அவமானமாக இதை பா... கூட்டணி வர்ணிக்கும்போது அதை மறுக்கும் திராணி காங்கிரசுக்கு நிச்சயம் இல்லை.

விரிசல்கள் இதே வேகத்தில் விரிவடைந்தால் .தி.மு.. கூட்டணிக்கு வெற்றியும் விரிசல் கண்டுவிடும்.

பா. சங்கர்

புகுந்து விளையாடும் தேர்தல் ஆணையம்

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் தேர்தல்களைச் சுமூகமாக நடத்தி முடிப்பதென்பது உண்மையிலேயே மிகப் பெரிய சாதனைதான். இந்தியத் தேர்தல் ஆணையத்தை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். அதன் கெடுபிடியில் அரசியல் கட்சிகள் அஞ்சி ஒடுங்குவது வேடிக்கையாக உள்ளது. இப்படி ஒரு நல்ல அங்குசம் இல்லாவிட்டால் அரசியல் யானையை அடக்கி ஆள்வது மிகச் சிரமம். அதிலும் தேர்தல் காலங்களில் இந்த யானைக்கு 'மதம்' பிடித்துவிடுமே.

ஆளும் கட்சி வாக்காளர்களைக் கவரும் விதமாக மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதைத் தடைசெய்வது நியாயமான ஒன்றே. இதற்காக அங்கலாய்த்துக் கொள்பவரை அலட்சியப் படுத்திதான் ஆக வேண்டும்.

'அங்குசத்தை' அலட்சியமாக, லாவகமாக அழுத்தமாக பிரயோகித்த பெருமை டி.என். சேஷனுக்கு உரியது. அவரைத் தொடர்ந்து வந்த ஆணையர்களும் அவரது வழிமுறைகளைப் பின்பற்றத் துவங்கியுள்ளனர். அரசியல் கட்சிகள் ஆணையத்தின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொள்வதுதான் நியாயமாகும்.

இம்முறை தேர்தல் செலவுகள் குறித்து அவ்வளவு இறுக்கமான கட்டுப்பாட்டை ஆணையம் வற்புறுத்தாமல் இருப்பதே அரசியல் கட்சிகளுக்குக் காட்டப்படும் பெரிய சலுகை எனச் சொல்லலாம்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் செல்லும் அரசு விமானத்தில் செய்தியாளர்களை அழைத்துச் செல்ல ஆணையம் அனுமதி மறுத்துள்ளது. இந்தத் தடை புதிய ஒன்றல்ல. நீண்ட காலமாக நடைமுறையில் உள்ள விதிதான். முந்தைய பிரதமர்களுக்கும் இந்த தடை அமல்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. இதை அரசுக்கும், ஆணையத்திற்கும் இடையேயான மோதலாகச் சித்தரிக்க முனைவது சரியல்ல. ஆணையம் அதன் கடமையை சுதந்திரமாகச் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.

கார்கில் போர் தொடர்பான விவரணப் படம் ஒன்றைத் திரையிடவும் ஆணையம் தடை விதித்துள்ளது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட நமது இராணுவத்தினரின் நடுநிலைமையை எந்த வகையிலும் நேரடியாகவோ மறைமுகமாகவோ மற்றவர்கள் கருத்துக் கூறவோ, குறை கூறவோ இடம் தரக் கூடாது என்று ஆணையம் சுட்டிக் காட்டியுள்ளது. தமிழகத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவும் தன் பங்குக்குக் கலக்க ஆரம்பித்துள்ளார்.

இரவு 10 மணிக்கு மேல் கண்டிப்பாகத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசக்கூடாது. விதியை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

இரவு 10 மணிக்கு மேல் மைக் இல்லாமல் பேசுவது கூட விதியை மீறுவதாகும். சைகை மூலம் பிரச்சாரம் செய்வது, ஊர்வலமாகச் செல்வது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் .தி.மு.. பொதுச் செயலாளர் வைகோ இரவு 10 மணிக்குப் பின்னர் ஒலிபெருக்கி இல்லாமல் பிரச்சாரம் செய்துள்ளார். .தி.மு.. பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரவு 10 மணிக்குப் பின்னர் சைகை மூலம் பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் குரலுக்கு அரசியல்வாதிகள் செவிகொடுத்துத்தான் தீரவேண்டும்.

பா.சங்கர்

சோனியாவின் 'மனுதாக்கல்' மர்ம நாடகம்

ஒரு தேசியக் கட்சியின் தலைவி. பிரதமர் பதவிக்கான வேட்பாளராகக் கருதப்படுபவர். மிகப் பெரிய அரசியல் பாரம்பரியம் சார்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் வேட்பு மனு தாக்கல் செய்த விதம் அதிர்ச்சியும், அதிருப்தியும் அளிக்கிறது. சோனியா காந்தி போட்டியிடவிருக்கும் தொகுதி குறித்து ஆரம்பம் முதலே ஒருவிதமான ரகசிய அணுகுமுறையைக் காங்கிரஸ் கையாண்டது.

இந்த அணுகுமுறை எதிர்விளைவையே ஏற்படுத்தியுள்ளது. பிரதான எதிரியான பா... விழித்துக் கொண்டது. வலுவான வேட்பாளரை எதிர்கொள்ளவிருப்பதைத் தவிர்க்கவே காங்கிரஸ் தலைவர் சோனியா முயல்கிறார் என்ற உண்மையை அக் கட்சியே 'குதிருக்குள் இல்லை' எனும் விதமாக உணர்த்தியது வேடிக்கையானது.

சோனியா போட்டியிட பாதுகாப்பான தொகுதிகள் என்று அமேதி (உத்தரப்பிரதேசம்), பெல்லாரி (கர்நாடகம்), மற்றும் கடப்பா (ஆந்திரம்) ஆகிய தொகுதிகளைக் காங்கிரஸ் தேர்வு செய்திருந்தது.

அமேதி தொகுதியில் சோனியாவை எதிர்பார்த்த பா..., அங்கு அனுபவம் வாய்ந்த சஞ்சய்சிங்கைக் களமிறக்கி விட்டது. இதனால் பின்வாங்கிய காங்கிரஸ் ஆலோசகர்கள் பெல்லாரி அல்லது கடப்பாவில் சோனியாவைப் போட்டியிட வைப்பதென்று முடிவு செய்தனர். ஆனால் காங்கிரசின் ஒவ்வொரு அசைவையும் பா... கூர்ந்து கவனிக்கத் தவறவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் நெருங்கிவிட்ட நிலையில் பரபரப்பு உச்சக்கட்டத்தை அடைந்தது.

சோனியா போட்டியிடப் போவது பெல்லாரியா? கடப்பாவா? காங்கிரஸ் கட்சியினரே கைகளைப் பிசைந்தனர்.

இந்நிலையில் தான் சோனியாகாந்தி கடந்த செவ்வாயன்று (17.08.99) காலை ஹைதராபாத் வந்தார். காங்கிரஸ் தலைவர்கள் ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி மற்றும் குலாம் நபி ஆசாத் இருவரும் சோனியா கடப்பா தொகுதியில் போட்டியிடுவார் என்று குறிப்பிட்டனர். கடப்பா தொகுதியில் ஏற்பாடுகள் எப்படி உள்ளன என்று மேற்பார்வையிட, ராஜசேகர் ரெட்டி விரைந்தார். இது கடப்பாவில் சோனியா போட்டியிடுகிறார் என்ற செய்தியை ஊர்ஜிதம் செய்வதாக அமைந்தது.

புதன்கிழமை காலை குலாம் நபி ஆசாத் செய்தியாளர்களிடம், ''நாங்கள் கடப்பா செல்கிறோம் அங்கிருந்து திரும்பியதும் சோனியா உங்களைச் சந்திப்பார்'' என்று அறிவித்தார்.

''நீங்கள் பெல்லாரி செல்லவில்லையா?'' என்று செய்தியாளர்கள் மடக்கினர். ''பெல்லாரி செல்வதாயிருந்தால் நாங்கள் எதற்கு ஹைதராபாத் வரவேண்டும் ?'' என்று சாமர்த்தியமாகப் பதிலளித்தார் ஆசாத்.

சோனியா விமானநிலையத்திற்குப் புறப்படும் முன்பாக முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் முகமது கனி, கடப்பாவில்தான் சோனியா போட்டியிடுகிறார் என்று அறிவித்தார். சோனியா ஹைதராபாத் வந்தவுடனேயே பா... சுறுசுறுப்படைந்தது. கடப்பாவில் சோனியாவை எதிர்த்து யாரை நிறுத்துவது என பா... உயர்மட்டத் தலைவர்கள் அவரச ஆலோசனை செய்துள்ளனர்.

பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி இருவரும் நடிகை விஜயசாந்தியை நிறுத்த முடிவு செய்தனர். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் இதற்கு சம்மதித்துள்ளார்.

சென்னையில் இருந்த நடிகை விஜயசாந்தியை அவசரம் அவசரமாகக் கடப்பா வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கென மூன்று மூத்த தலைவர்களை நாயுடு நியமித்துள்ளார். அவர்கள் விமான நிலையத்தைத் தொடர்பு கொண்டு கேட்ட போது சோனியா பெல்லாரிக்கு சென்றிருப்பதாகத் தெரிந்தது.

கடப்பாவில் ஆவலோடு காத்திருந்த அனைவருக்கும் ஏமாற்றம். அதே வேளையில் பெல்லாரி சென்ற சோனியா அங்கு தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் . ஆனால் அங்கும் பா... தயாராகவே காத்திருந்து.

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சோனியாவை எதிர்த்து மனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் கட்சி எதைத் தவிர்க்க வேண்டும் என நினைத்ததோ அது நடக்கவில்லை.சோனியாவின் சிறப்புப் பாதுகாவலர்களுக்குக் கூட அவரது பெல்லாரி பயணம் குறித்து தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பெல்லாரி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்பது அரசியலில் அரிச்சுவடி படிப்பவருக்குக் கூட தெரிந்த விஷயம். 1957 இல் இருந்து காங்கிரஸ் வசம் உள்ள இத் தொகுதியில் காங்கிரஸ் தோற்றதாக வரலாறே இல்லை. அப்படிப்பட்ட ஒரு வலுவான தொகுதியில் ராஜ கம்பீரத்தோடு, தொண்டர்கள் புடை சூழ அமர்க்களமாக மனு தாக்கல் செய்வதை விட்டு இப்படி ஒரு மர்ம நாடகத்தைக் காங்கிரஸ் அரங்கேற்றியிருப்பது தேவைதானா?

இது அக் கட்சியின் நம்பிக்கையின்மையைப் பறைசாற்றுவதாக மக்கள் நினைக்க மாட்டார்களா? அரசியல் சாணக்கியத்தனமும் இதில் இல்லை. அப்படி இருந்தால் அதை அமல் செய்வதற்கான சாதுர்யமும் அவர்களிடம் இல்லை என்றுதான் எண்ண வேண்டியுள்ளது.

எப்படிப் பார்த்தாலும் இந்த மர்ம நாடகம் காங்கிரஸ் கட்சிக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை.

பா.சங்கர்