இன்றைய இளம் தலைமுறையினரிடம் படிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது என்ற குற்றச்சாட்டு ஓங்கி ஒலித்து வருகிறது. அதாவது பாடப் புத்தகங்கள் தவிர்த்து மற்ற பல நல்ல விஷயங்களுக்காக நூல்களைப் படிப்பதென்பது அபூர்வமாகிவிட்டது என்பதை மறுக்க முடியாது. தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள பிரமிக்கத்தக்க வளர்ச்சி, கை விரலசைவில் நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி சேனல்கள் கணனி, இணையம் ... என்று இளைஞர்களை சிறைப்படுத்த ஏராளமான காரணிகள். இவற்றுக்கு மத்தியில் புத்தகம் படிப்போர் எண்ணிக்கை சுருங்கி விட்டதில் வியப்பேதுமில்லை. இதன் காரணமாகப் பத்திரிகைத் துறையின் வளர்ச்சி முடங்கிப் போய்விட்டதா என்றால் இல்லை என்ற பதிலை அச்சடித்துச் சொல்லலாம்.
உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் கோடிக்கணக்கான புத்தகங்கள் நாள்தோறும் வெளியாகிக் கொண்டுதான் இருக்கின்றன. காலை, மாலை வேளைகளில் வெளியாகும் தினசரி செய்தித்தாள்கள், வார இதழ்கள், மாதமிருமுறை, மாதாந்திரப் பத்திரிகைகள் என்று எத்தனையோ வகையான நூல் வெளியீடுகள்.
நிலைத்து நிற்பவை குறைவுதான் என்றாலும் புதிது புதிதாய் முளைப்பவையும் ஏராளம். ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகள் என்று தவழ்ந்த நிலையிலிருந்து இன்று இணைய இதழ் வரை வானுயர வளர்ந்தாகிவிட்டது. வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமின்றி ஒவ்வொரு துறை சார்ந்தும் நூல்கள், பத்திரிகைகள் வெளியாவது அதிகரித்துவிட்டது.
அறிவியல், தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், ஆன்மிகம், விளையாட்டு என தனி முக்கியத்துவம் அளித்து நூல்கள் வெளியாகி வருகின்றன.
குடும்ப நாவல்கள், கவிதை, சிறுகதைத் தொகுப்புகள், துப்பறியும் மர்மக்கதைகள், குழந்தைகளுக்கான புத்தகங்கள், திரைத்துறை தொடர்பானவை என்று இந்தப் பட்டியல் முடிவின்றி நீள்கிறது. இவற்றுக்கிடையே 'பச்சை' எழுத்துகளைத் தாங்கி வரும் 'மஞ்சள்' பத்திரிகைகளும் உண்டு. நீர் நீக்கிப் பால் அருந்தும் அன்னம் போல நல்ல புத்தகங்களைத் தேர்வு செய்து படிப்பது மிக மிக அவசியமாகிறது.
அலையன்ஸ் ஃபிரான்ஸே நிறுவனம் வெளியிட்டுள்ள 'Gum and Calico' என்ற புத்தகம் தமிழ்ப் புத்தகங்களின் பதிப்பு வரலாற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
பதிப்பகத் துறைக்கு கல்கத்தா நகரம் ஆற்றியுள்ள முக்கியமான பங்கும் நூலகங்களின் முக்கியத்துவம் குறித்தும் இப் புத்தகத்தில் மிகத் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
ஃபிரெஞ்சு நாட்டு அமைச்சகத்தின் அயலக விவகாரத்துறை நிதி உதவியோடு வெளிவந்திருக்கும் இப் புத்தகத்தில், 1578 ஆம் ஆண்டு 'தம்பிரான் வணக்கம்' (Doctrina Christinam) என்ற தமிழ் நூல் வெளியிடப்பட்டதான தகவலும் இடம் பெற்றுள்ளது.
1780 ஆம் ஆண்டில் கல்கத்தாவைச் சேர்ந்த அகஸ்டஸ் ஹிக்கி என்ற வணிகர் ஒன்பது மாத காலம் சிறையிலிருந்தபோதும் பெங்கால் கெஸட் அல்லது 'கல்கத்தா ஜெனரல் அட்வைஸர்' என்ற வார இதழை வெளிக் கொணர மேற்கொண்ட முயற்சிகளையும் அறிய முடிகிறது. இது போன்ற பல்வேறு ரீதியிலான செய்திகள், தகவல்கள் இந் நூலில் இடம் பெற்றுள்ளன. ஆக இது போன்ற வரலாற்று ரீதியிலான செய்திகள், தகவல்கள் என்பவற்றைக் கூட பத்திரிகைகள் நூல்கள் வாயிலாகவே அறிந்து கொள்ள முடிகிறது.
மேலும் பத்திரிகைகள் நூல்கள் இவற்றின் பலமே இந்தச் செய்திகளை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம். எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அத்தகையவை அல்லவே.
உயர்தரமான இலக்கியத் தகவல்களுக்காக அதீத ஆர்வலர்கள் உயர்த்திப் பிடிக்கும் சிற்றிதழ் வட்டங்களும் உண்டு. சிறந்த எழுத்தாளர்களும், கவிஞர்களும் காலத்தை வென்று வாழ்ந்து கொண்டிருப்பது கூட இந்தப் பத்திரிகைத் துறை இயங்கிக் கொண்டேயிருப்பதனால்தான் என்று சொல்லலாம்.
தங்கள் அபிமான எழுத்தாளர்களுக்காக அடித்துக் கொள்ளும் அதி தீவிர வாசகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சில சமயங்களில் படைப்பாளிகளுக்குள்ளாகவே கருத்து வேறுபாடுகளும் கடும் மோதல்களும் ஏற்படுவது மிக சகஜமான ஒன்று. இத்தகைய சர்ச்சைகளின் காரணமாகவே இத் துறை கவர்ச்சியோடு விளங்குகிறது.
மாறி வரும் உலகிற்கேற்ப பத்திரிகைத்துறையும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளத் தவறுவதேயில்லை. கணனித் துறை பற்றி தமிழில் மட்டுமே நான்கு இதழ்கள் வெளிவருவது குறிப்பிடத்தக்கது. மருத்துவ இதழ்களை எடுத்துக் கொண்டால் பல்வேறு மருத்துவ முறைகளான அலோபதி, ஹோமியோ, சித்த மருத்துவம், யுனானி, ஆயுர்வேதம், இயற்கை வைத்தியம் என்று தனித்தனியே முக்கியத்துவம் அளித்து இதழ்கள் வெளியாவது நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. வேளாண்துறை, சமையல் போன்ற துறைகள் கூட பின்தங்கி விடவில்லை.
மகளிருக்கான நூல்கள் எண்ணிலடங்கா. புலனாய்வுப் பத்திரிகைகள் மக்களிடையே பெறும் வரவேற்பும் குறிப்பிடத்தக்கது. இதையெல்லாம் பார்க்கும்போது படிக்கும் பழக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது என்ற ஆதங்கம் அர்த்தமற்றதோ என எண்ணத் தோன்றுகிறது.
பல்வேறு சந்தேகங்களையும் புறம் தள்ளி பத்திரிகைத்துறை தனது வெற்றிப் பயணத்தை இந்தப் புத்தாயிரத்தாண்டிலும் தொடரும் என்ற நம்பிக்கை எழுகிறது.
பா.சங்கர்
ஆறாம்திணை இணைய இதழில் எழுதியது (2000)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக