வியாழன், 4 நவம்பர், 2010

இதயம் தருவோம் இவர்களுக்கு

அந்த அமைதியான இல்லத்தினுள் அடியெடுத்து வைக்கும் போதே இதயத்தின் ஒரு மூலையில் இரைச்சல் கேட்கத் துவங்கிவிடுகிறது. கில்டு ஆஃப் சர்வீஸ் (சென்ட்ரல்) சேவை நிறுவனம் சார்பில், மேற்கு அண்ணா நகரில் இயங்கி வரும் ஊனமுற்ற குழந்தைகளுக்கான விடுதி. ஆதரவற்ற அநாதைக் குழந்தைகள் குறிப்பாக இளம்பிள்ளை வாத நோயால் கடுமையான பாதிப்புக்குள்ளாகி உடல் ஊனமுற்ற நிலையில் உள்ள குழந்தைகள் இந்த இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.

ஓய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரி கே.ஆர்.ஷெனாய் இந்த அமைப்பின் சேர்மனாக இருந்து வருகிறார். செயலராக திருமதி சீதா விஜயன், பொருளாளராக ஓய்வு பெற்ற பொறியாளர் என்.வி.குட்வா, விடுதிக் காப்பாளராக செல்வி கிருஷ்ணா பாய் ஆகியோர் இயங்கி வருகிறார்கள். நிர்வாகக் குழு உறுப்பினர் மாயா நாயர். எந்தவிதப் பலனும் எதிர்பாராது தன்னார்வத்துடன் தொண்டு செய்து வருகிறார் இவர். மிக இளம் வயதில் மரணத்தைத் தழுவிய தங்கள் மகளின் நினைவாக விடுதிக் கட்டடத்தின் ஒரு பகுதியைத் தங்கள் சொந்த செலவில் கட்டித் தந்திருக்கின்றார் மாயா நாயர். இல்லத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார் அவர்.

''சிறுவர்கள், சிறுமியர்கள் என தற்போது 48 குழந்தைகள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் போலியோ நோயால் தாக்கப்பட்டு கை கால்கள் வலுவிழந்த நிலையில் நடக்கும் சக்தியற்றவர்கள். நோயின் தீவிரத்தினால் கை கால்கள் வெட்டி எடுக்கப்பட்ட நிலையில் உள்ள குழந்தைகளும் உண்டு. ஆதரவற்ற அநாதைக் குழந்தைகள் மட்டுமல்லாது, ஏழைப் பெற்றோர்களால் கவனிக்க வசதியற்ற ஊனமுற்ற குழந்தைகளையும் இங்கு சேர்த்துக் கொள்கிறோம்.

இக் குழந்தைகளுக்கு சென்னை எழும்பூரில் உள்ள 'அரசு குழந்தைகள் மருத்துவமனை' யில் சிகிச்சையும், அறுவை சிகிச்சையும் செய்ய ஏற்பாடுகள் செய்வதோடு அறுவை சிகிச்சைக்குப் பின்னர் செய்ய வேண்டிய முறையான பிசியோதெரஃபி பயிற்சிகளையும் விடுதி வளாகத்திலேயே மருத்துவ வல்லுநர்களின் உதவியோடு வழங்குகிறோம். சிகிச்சைக்குப் பின்னர் பெற்றோரிடம் திரும்பும் சில குழந்தைகள் மீண்டும் பிச்சை எடுப்பது போன்ற தவறான செயல்களுக்கு உட்படுத்தப்படுவதால், பெற்றோரிடம் இருக்கப் பிடிக்காமல் எங்களிடமே திரும்பி விடுகிறார்கள்.

இவர்களுக்கெல்லாம் முறையான கல்வி அறிவு தருவதன் அவசியத்தை உணர்ந்ததால், விடுதியிலேயே அவர்களுக்குக் கல்வி கற்றுத் தரப்படுகின்றது. மிகுந்த ஆர்வத்துடன் இக் குழந்தைகள் படிப்பதைப் பார்க்கும்போது, இவர்கள் எதிர்காலத்தில் தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் நடைபோட முடியும் என்ற திருப்தி உண்டாகிறது. ஒரு முழுமையான பள்ளியாக அரசு அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளோம். மிக விரைவில் அங்கீகாரம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையிருக்கிறது'' என்கிறார்.

அறுவை சிகிச்சைக்குப் பின்னர் க் குழந்தைகளுக்குத் தேவைப்படும் செயற்கைக் கால்கள், தாங்கிகள், ஸ்டீல் உபகரணங்கள் போன்றவற்றிக்குப் பெரிதும் தன்னார்வக் கொடையாளர்களையே நம்பியிருக்கிறது இச் சேவை நிறுவனம். அனைத்துக் குழந்தைகளுக்கும் உடை, உணவு, சிகிச்சை, உபகரணங்கள் என்று ஏராளமாகச் செலவாகிறது. விடுதியின் ஆசிரியைகள், ஊழியர்கள் அனைவருமே சேவை மனப்பான்மையுடன் பல்லாண்டு காலமாகத் தொடர்ந்து பணி செய்து வருவதே இவ் விடுதி வெற்றிகரமாக இயங்கி வருவதற்குக் காரணம்.

''எங்கள் சேர்மன் மிகக் கண்டிப்பானவர். அதே சமயம் குழந்தைகளுக்கான அனைத்து வசதிகளும் தரமானதாக அமைய வேண்டும் என்பதில் அதிக அக்கறையுள்ளவர் '' என்று ஷெனாய் பற்றி குறிப்பிடுகிறார் மாயா நாயர்.

வகுப்பறைகளுக்குச் சென்று படித்துக் கொண்டிருந்த குழந்தைகளைச் சந்தித்தோம். பிறவியிலேயே இரண்டு கால்களும் வலுவில்லாமல் வளைந்த நிலையில் அமைந்துவிட்ட சிறுவன் பாபு துருதுருவென தனது ரப்பர் கால்களை அகட்டி அகட்டி வைத்து அங்கும் இங்கும் அசைத்து நகர்ந்து செய்யும் குறும்புத்தனம் வியக்க வைக்கிறது. இந்தக் குறும்பாளர் மூன்றாம் வகுப்பு மாணவர்.

சூம்பிப் போன இரண்டு கால்களையும் தாறுமாறாய் மடித்து சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் சிறுவன் தமிழ்ச்செல்வன் 8 ஆம் வகுப்பு மாணவன் என்பதை அறியும் போது வியப்பு கூடுகிறது. சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ள சிறுவன் சதீஷ் மற்றும் சிறுமி நீலமணி இருவரும் ஒரே கட்டிலில் அமர்ந்தபடி படித்துக் கொண்டிருந்தனர்.
வேதனையின் சாயலை வெளிக்காட்டாது படிப்பதில் மும்முரமாக இருந்த அந்தக் குழந்தைகளைப் பார்க்கும் போது இதய இரைச்சல் 'ஹோ'வென பெரும் சத்தமாக மாறிப் போகிறது. முதல் வகுப்பு மாணவன் ஐயப்பன் செயற்கைக் கால்களை ஊன்றி எழுந்து ஆர்வத்தோடு நம்மை நோக்கி வந்தபோது ஓடிச் சென்று தாங்கிக் கொள்ளத் தோன்றியது. பார்வைக் குறைபாடும் உள்ள ஐயப்பனுக்கு இதயத்திலும் ஏதோ குறைபாடு உள்ளது என்று சொல்வதைக் கேட்கும் மன உறுதி நம்மிடமில்லை. ஆனால், அந்தச் சிறுவனோ முகமலர்ச்சியோடு சக மாணவர்களுடன் பேசிச் சிரிக்கிறான்.

தமிழ் வழியிலேயே பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. நகரில் உள்ள வேறு சில சேவை அமைப்புகள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் உயர் வகுப்புகளுக்கு இங்குள்ள மாணவர்களை சேர்ப்பதற்கு முயற்சி செய்து அதில் வெற்றியும் கிடைத்திருக்கிறது என்பதைப் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார் மாயா நாயர். 1984 ஆம் ஆண்டு ஜூலை 31 ல் கில்டு ஆஃப் சர்வீஸ் (சென்ட்ரல்) சேவை நிறுவனத்தால் துவங்கப்பட்ட இவ் விடுதி ஆர்பாட்டமின்றி 15 ஆண்டுகளைக் கடந்து விட்டது என்ற செய்தி ஆச்சரியமளிக்கிறது.

3 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை மட்டுமே சேர்த்துக் கொள்கிறார்கள். சில விதிவிலக்குகளும் உண்டு. சிகிச்சையோடு ஆரம்பக் கல்வி, கைவினைப் பொருள்கள் செய்தல் , ஓவியம் , இசை என பல கலைகளையும் இவர்கள் கற்றுக் கொள்ள இங்கே வாய்ப்பளிக்கப்படுகிறது. அரசு தரும் மிகக் குறைந்த உதவித் தொகையுடன் கொடையுள்ளம் கொண்ட மக்களின் ஆதரவில்தான் இந்த இல்லத்தின் வளர்ச்சியும், இந்தக் குழந்தைகளின் எதிர்காலமும் அடங்கியுள்ளது.

முகவரி :

HOME FOR THE HANDICAPPED CHILDREN,
(Guild Of Service Central)
D-1775, Anna Nagar West Extn,
Chennai - 600 101.

பா.சங்கர்
ஆறாம்திணை இணைய இதழில் எழுதியது (2000)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக