புதன், 3 நவம்பர், 2010

கருகும் மொட்டுகள்...கலையும் கனவுகள்

பள்ளி வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகத் தொலைபேசியில் எச்சரிக்கை வருகிறது. அடுத்து பத்து நிமிடங்களில் காவல்துறையினர், மோப்ப நாய் வெடிகுண்டு நிபுணர்கள் என்று பரபரப்பாகி அவசரம் அவசரமாக மாணவர்கள் வெளியேற்றப்படுகின்றனர். பல மணி நேர சோதனைக்குப் பின்னர் அந்தத் தொலைபேசி எச்சரிக்கை வெறும் புரளி என்பது தெரிய வருகிறது. கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதற்காக யாரோ ஒரு மாணவன் செய்த குறும்புத்தனம் அது என்பதும் தெரிய வந்தது. இந்த நிகழ்வு நம் முன் பெரிதாய் பாதிப்பு எதையும் உண்டாக்கவில்லை. லேசாய் சிரித்து விட்டுப் போய் விடுகிறோம்.

இப்போது இதே நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட மற்றொரு சம்பவத்தைப் பார்ப்போம்.

அவர்கள் பத்து வயதே ஆன மாணவ நண்பர்கள். மூவருக்கும் விடுமுறை தேவையாயிருக்கிறது. ஆனந்தமாக விளையாடிப் பொழுதைப் போக்குவதற்கு ஒன்று அல்லது இரண்டு நாள் விடுமுறை எல்லாம் அவர்களுக்குப் போதுமானதாக இல்லை. மாதக்கணக்கில் விடுமுறை வேண்டும். அதற்காக ஆண்டு இறுதித் தேர்வு முடியும் வரை காத்திருக்கவும் முடியாது. என்ன செய்யலாம் என யோசிக்கின்றனர். அவர்களுக்குள் ஒரு திட்டம் உருவெடுக்கிறது. இளைய தோழன் ஒருவனை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு அருகில் உள்ள தோப்பிற்குச் செல்கின்றனர்.

போலீஸ்-திருடன் விளையாட்டின் ஒரு அங்கமாகத் தூக்கு தண்டனை நாடகம் அரங்கேறுகிறது. இளைய தோழனின் கழுத்தில் கயிற்றை மாட்டிச் சுருக்கிடுகின்றனர். விளையாட்டுதானே என்று சிரித்தபடி கழுத்தை நீட்டுகிறான் அச் சிறுவன். முடிச்சு மெல்ல மெல்ல இறுக விழிகள் தெறிக்க மூச்சடங்கி உயிர் விடுகிறான். பள்ளி விடுமுறைக்காக சக மாணவனையே திட்டமிட்டுக் கொலை செய்த அச் சிறுவர்களின் செயல் விரைவிலேயே வெளிச்சத்திற்கு வருகிறது. தாங்கள் செய்த குற்றத்தின் அளவு, அதற்குரிய தண்டனை என்னவென்றே அறியாமல் அவர்கள் மலங்க மலங்க விழிக்கிறார்கள்.

இது நடந்தது எங்கோ அமெரிக்காவிலோ, ஐரோப்பிய நாடுகளிலோ அல்ல. நமது அண்டை மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தில்தான்.

என்ன? அதிர்ச்சியில் ஆழ்ந்து உறைந்து விட்டீர்கள்தானே! உங்கள் அதிர்ச்சியின் அளவை அதிகப்படுத்தும் விதமான இந்தச் செய்தியையும் படித்து வையுங்கள்.

உஜ்ஜயினியில் உள்ள குஜராத்தி சமாஜ மேல்நிலைப் பள்ளியில் இந்தி மொழித் தேர்வு (13.03.2000) நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 12 ம் வகுப்பு மாணவன் சஞ்சய் சுறுசுறுப்பாகக் காப்பி அடித்துக் கொண்டிருக்கிறான். கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமை ஆசிரியர் ரவீந்திர சந்திர சுக்லா (52) அந்த மாணவனைக் கையும் களவுமாகப் பிடிக்கிறார். தன்னை விட்டு விடுமாறு கெஞ்சுகிறான் சஞ்சய். தேர்வு அறையிலிருந்து உடனே வெளியேறுமாறு கண்டிப்புடன் உத்தரவிடுகிறார் தலைமை ஆசிரியர் சுக்லா. தேர்வு முடிந்து அனைவரும் வெளியேறிய பின்பு தலைமை ஆசிரியரின் அறைக்குச் செல்லும் சஞ்சய் அவரைக் கத்தியால் குத்தி விட்டுத் தப்பிக்க முயல்கிறான். மற்ற மாணவர்களும் ஆசிரியர்களும் சேர்ந்து அவனை வளைத்துப் பிடிக்கின்றனர். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட தலைமை ஆசிரியர் சுக்லா இறந்து போக, கொலைக் குற்றவாளியாகச் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் சஞ்சய்.

தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளித் தேர்வுக்கான வினாத்தாள்களைத் திருட முயன்ற மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இம் முயற்சிக்குத் தலைமையேற்ற மாணவன் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் தவப்புதல்வன் என்பது குறிப்பிடத்தக்கது.

''கல்லூரி விடுதி சாப்பாட்டுச் செலவுக்கு ரூ. 10 ஆயிரம் பணம் கட்ட வேண்டி இருந்தது. நான் ஏற்கனவே இந்தப் பணத்தை என் தந்தையிடம் வாங்கி செலவழித்து விட்டேன். எனவே விடுதிக்குப் பணம் கட்டத் திருடுவது என்று முடிவு செய்தேன். பேருந்தில் வந்த (புதுச்சேரி-சென்னை)சக பயணியான துணி வியாபாரியிடம் பேச்சுக் கொடுத்து அவர் பணம் வைத்திருப்பதைத் தெரிந்து கொண்டேன். பேருந்து சென்னை வந்த பிறகும் அந்த வியாபாரி அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். இது எனக்கு வசதியாகப் போனது. எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரி நிறுத்தத்தில் அவரது பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு கீழே இறங்கிவிட்டேன்''.

இவ்வாறாக வாக்குமூலம் அளிக்கிறார் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் இறுதியாண்டு பயிலும் மாணவர். 30 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலான பணத்தைக் கொள்ளையடித்ததாகக் கைதான அந்தக் கல்லூரி மாணவர், காவல்துறை ஊழியர் ஒருவரின் மகன்.

அன்றாட நிகழ்வுகளாய்த் தினசரிகளில் பரபரப்பாய்ப் பதிவு பெறும் இத்தகைய செய்திகள் நம்மை நிலை குலைய வைக்கின்றன.

தனியொரு இளைஞனின், மாணவனின் செயலாக அல்லாமல் ஒட்டுமொத்தமான சமுதாயத்தின் போக்காகவே இவற்றைக் கருத வேண்டியுள்ளது.

வன்முறையையும், பழிவாங்குதலையும் மையமாகக் கொண்ட திரைப்படங்களின் தாக்கம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் மேலைநாட்டு நாகரிக மோகம்... இவற்றோடு மோதும் யதார்த்த நிலைமை என்று பல்வேறு காரணிகள் காரணங்களாக உள்ளன. இந்த அபாயத்திலிருந்து இளைய தலைமுறையினரைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?  இதுவே நம் முன்னால் உள்ள கேள்வி.

முதலில் இளம் பருவத்தினர் மனதில் ஆட்டம் போடும் எதிர்மறை அனுகுமுறையை கவனமாகக் கையாள வேண்டும். அடுத்து சக மாணவனைக் கூறு போட்ட மருத்துவக் கல்லூரி மாணவன் ஜான்டேவிட் போன்றோரின் செயல்களில் இருந்து ஒவ்வொரு மாணவனும் பாடம் பயில வேண்டும். குற்றச்செயல்களில் ஈடுபடுவதனால் அவர்கள் எவற்றையெல்லாம் இழக்க வேண்டி வரும் என்பதை மாணவர்களுக்குத் தெளிவாக்க வேண்டிய கடமை அவசரத் தேவையாகிறது.

பாதுகாப்பான, அன்பான குடும்பச் சூழல், சுதந்திரம், எதிர்கால வாழ்க்கை என்று யாவற்றையும் இழந்து சிறைக் கம்பிகளுக்குப் பின்னே நாட்களைக் கழிப்பது எத்தனைக் கொடூரமானது என்பதை இளம் வயதிலேயே மாணவர்களின் மனதில் பதியச் செய்ய வேண்டியது அவசியமாகிறது.

இது தொடர்பாக ஒவ்வொரு பள்ளியிலும் கல்லூரியிலும் உளவியல் நிபுணர்களின் ஆலோசனை உரைகள், கருத்தரங்கங்கள் கலந்துரையாடல்கள் என்று நடத்தி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் காலத்தின் கட்டாயமாகிறது.

பள்ளிக்கல்வி மட்டுமே மாணவர்களை நெறிப்படுத்தும் என்று அலட்சியமாக இருப்பதையும் பெற்றோர்கள் உணர்ந்து அதனைத் தவிர்க்க முயல வேண்டும். மாணவர்களைச் சுற்றிலும் இயங்கிக் கொண்டிருக்கும் சமூகமும் ஒரு பள்ளிக்கூடமாகவே அவர்களுக்கு இருக்கிறது. ஒட்டு மொத்த சமூக அமைப்பும் இளம் சிறார்களிடம் எவற்றைப் பயிற்றுவிக்க வேண்டும் என்பதில் கவனம் எடுத்துக் கொண்டால், இந்தக் குறைபாடுகள் களையப்படலாம்.

ஆசிரியர்கள், பெற்றோர்கள், மருத்துவர்கள் மற்றும் அரசாங்கம் என்று பல்வேறு நிலைகளிலும் இதற்கான முயற்சி முடுக்கிவிடப்பட வேண்டும்.

அந்த இளங்குருத்துகள் நாளைய சமுதாயத்தின் தூண்கள்.அவர்களைக் கருகி விடாமல் காக்கும் கடமையை அலட்சியப்படுத்துவோமானால் எதிர்காலம் ஏமாற்றமளிப்பதாகவே அமையும்.

பா. சங்கர்

ஆறாம்திணை இணைய இதழில் எழுதியது (2000)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக