புதன், 3 நவம்பர், 2010

தாகம் தணிக்கும் தாதுக் குடிநீர்

அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் வழங்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்ற வாக்குறுதி அனைத்துக் கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் தவறாது இடம் பெறும். எத்தனையோ ஐந்தாண்டுத் திட்டங்கள். எல்லாம் கடலில் கரைத்த பெருங்காயமாக! (உண்மையில் கரைத்தார்களா? என்பது வேறு விஷயம்). முன்பெல்லாம் கோயில் குளங்கள்தான் குடிநீர் ஆதாரமாகப் பெரிதும் விளங்கின. இன்று அத்தகைய தகுதி வாய்ந்த ஒரு குளத்தைக் கூட காண்பிக்க முடியாது. கிராமப்புறங்களிலாவது பரவாயில்லை. சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு அதிகம் இருக்காது. நகரப் பகுதிகள்தான் படுமோசம். காசு செலவழிக்காவிட்டால் ஒரு குவளை சுத்தமான தண்ணீர் கிடைப்பது குதிரைக் கொம்புதான். சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு அதிகமுள்ளதால் மக்களும் வேறு வழியின்றி விலை கொடுத்து குடிநீர் வாங்க முன் வருகிறார்கள். 'குழந்தைகளுக்கு அவசியம் 'மினரல் வாட்டர்' மட்டுமே கொடுங்கள்' என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்குவது சகஜமாகிவிட்டது. 'தாதுக் குடிநீர்' கலாச்சாரத் தாக்கம் மெல்ல மெல்ல நம்மை ஆக்கிரமிக்கத் தொடங்கியாயிற்று.

பெரியவர்களை விடுங்கள், குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீர் கொடுப்பது மிக அத்தியாவசியமான ஒன்றல்லவா? காய்ச்சி, வடிகட்டி... அதற்கெல்லாம் நமக்கு ஏது நேரம். அலட்சியமாக இருந்தாலோ வயிற்றுப்போக்கு... வாந்தி... விஷக்காய்ச்சல். குழந்தைகள் வாடிப் போய்விடுகிறார்கள். உணவகங்களில் வெளியில் எங்காவது சாப்பிட்டுவிட்டு வரும் பெரியவர்களுக்கும் இதே தொல்லைதான். இந்தியாவில் வியாதிகளின் பரவலுக்கு 35 சதவிகிதம் காரணமாக அமைவது குடிநீர்தான்.

எனவே தான் சுத்தமான குடிநீருக்காகக் கணிசமான அளவு செலவிட நம்மில் பலரும் தயாராக இருக்கிறோம். அதற்காக விலை உயர்ந்த வடிப்பான்களை வாங்கிப் பொருத்தும் வசதியும் இல்லை, பிறகு என்ன செய்வது என்ற கேள்விக்குறியுடன் இருக்கும் மக்களைக் குறிவைத்தே 'மினரல் வாட்டர்' தயாரிப்பாளர்கள் வியாபாரக் களத்தில் குதிக்கிறார்கள்.

500 எம்.எல், 1 லிட்டர் மற்றும் 20 லிட்டர் கொள்ளளவுகளில் வரும் இந்தச் சுத்தமான தண்ணீருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு. தற்போது இந்தியாவில் மட்டும் சுமார் 350 வணிகப் பெயர்களில் தாதுப்பொருளடங்கிய குடிநீர் வாடிக்கையாளர்களை நோக்கிப் படையெடுக்கிறது. சுமார் 4.24 கோடி லிட்டர் என்ற அளவிற்கு தாதுக்குடிநீர் விற்பனையாவதாக ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இத் தொழிலின் ஆண்டு வளர்ச்சி விகிதம் 45% என்றும் அடுத்த இருபதாண்டுகளுக்கு இத் தொழிலில் அமோக வளர்ச்சி இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

பிஸ்லரி, பெய்லி, டீம், கங்கா, திருப்தி, ஹலோ அக்குவாபுரா, அட்கோ, ஷ்வீப்ஸ், இமாலயன் வொண்டர், பாண்டிச்சேரி, விஜயசாந்தி, சிறுவாணி ... இப்படி பல்வேறு பெயர்களில் பல நிறுவனங்களின் தயாரிப்புகள் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளன. பார்லே நிறுவனம் ஏறத்தாழ 60 சதவிகித அளவைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பிஸ்லரி, பெய்லி என்ற பெயர்களில் வரும் பார்லே தயாரிப்புகள் வெகு பிரசித்தம்.

சதாரணமாக 1 லிட்டர் குடுவைகளில் வரும் தாதுக் குடிநீர் 10 முதல் 15 ரூபாய் வரை நிறுவனங்களின் சந்தை மதிப்புக்கு ஏற்ப விற்கப்படுகின்றது. பிஸ்லரி இப்போது வெளியிட்டுள்ள அரைலிட்டர் ( 5 ரூபாய்) பாட்டிலுக்கு அமோக வரவேற்பு + ஆதரவு.

அதே நேரத்தில் ஐந்து நட்சத்திர விடுதிகளில் விற்பனையாகும் 'ஆல்பைன் ஸ்பிரிங்கல்' ஒரு லிட்டர் பாட்டிலின் விலை 75 ரூபாய் என்பது மலைப்பூட்டுகிறது. பார்லே நிறுவனம் வரும் ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் 100 கோடி ரூபாயை இத் தொழிலில் முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளது என்பதை வைத்தே 'தாதுக்குடிநீரின்' சந்தைத் தேவையை உணர்ந்து கொள்ள முடிகிறது.

பெரிய நகரங்களை மட்டுமல்லாது சிறு நகரங்களையும் இந் நிறுவனம் குறி வைக்கிறது. 14 உற்பத்தி நிலையங்கள், இரண்டாயிரம் வாகனங்கள் மற்றும் நான்கு லட்சம் விற்பனைத் தளங்கள் என்று பார்லே நிறுவனத்தின் தாதுக்குடிநீர் வணிக வலை பரந்து விரிகிறது.

இப்படியாகக் கொழுத்த லாபம் தரும் ஒரு துறையை அந்நிய வணிக ஜாம்பாவான்கள் விட்டு வைப்பார்களா? பிரபலமான பெப்ஸி நிறுவனம் தாதுக்குடிநீர் தயாரிப்பில் குதிப்பதாக அறிவித்துள்ளது. பிரிட்டானியா, பாபா ஸர்தா, நெஸ்லே போன்ற நிறுவனங்களும் வரிந்து கட்டுகின்றன.

போட்டி அதிகரிப்பதால் விலை குறையும் வாய்ப்பு இருக்கிறது. அதே நேரம் தரம் குறைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் ஒரு தாதுக்குடிநீர் வாடிக்கையாளர்.

'சர்வதேச நிறுவனங்களின் வரவால் எங்களுக்கு எந்த பாதிப்புமில்லை, பலத்த போட்டிக்கிடையிலும் நாங்கள் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறோம் , வரும் ஆண்டுகளிலும் எங்களது ஆதிக்கம் தொடரும், எக் காரணத்தை முன்னிட்டும் 'தரம்' குறித்த விஷயத்தில் விட்டுக்கொடுக்க மாட்டோம்' என்கிறார் பார்லே நிறுவன உயரதிகாரி.

20 லிட்டர் கொள்கலன்களில் வரும் தாதுக்குடிநீருக்குக் குடும்பங்களிடையேயும், சில தனியார் அலுவலகங்களிலும் நல்ல வரவேற்பு. உபயோகித்த 'கேன்'களைத் திருப்பிக் கொடுத்து புதிய 20 லிட்டர் 'கேன்' வாங்கிக் கொள்ளும் வசதி வாடிக்கையாளர்களைப் பெரிதும் கவர்கிறது.

'நாங்கள் இவ் வணிகத்தில் ஈடுபட்டு ஒன்றரை ஆண்டுதான் ஆகிறது. தற்போது 300-400 சதவிகித! வளர்ச்சியை எட்டியுள்ளோம் என்று குதூகலிக்கிறார் மவுண்ட் எவரெஸ்ட் மினரல் வாட்டர் நிறுவனத்தின் சந்தைப்பிரிவு மேலாளர். எத்தனை பேர் வந்தாலும் தரக் கட்டுப்பாட்டைக் கவனத்தில் கொண்டால் மட்டுமே இத் தொழிலில் நிலைத்து நிற்க முடியும் என்பது தெளிவாகத் தெரிகிறது. புற்றீசல் போல் வெளிக்கிளம்பும் புதுப்புது நிறுவனங்கள் தரத்தின் மீது கவனம் வைக்காததால் வந்த சுவடு தெரியாமல் காணாமல் போய் விடுகின்றன. 'உணவுத் தரத்தை நிர்ணயிக்கும் மத்தியக் குழுவின்' பரிந்துரைக்கேற்ப தங்கள் தயாரிப்புகளை மேம்படுத்த வேண்டிய அவசியம் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தியன் ரயில்வே, அரசு மருத்துவமனைகள், அயல்நாட்டுத் தூதரகங்கள் போன்றவை சில குறிப்பிட்ட தாதுக்குடிநீர் தயாரிப்புகளுக்குத் தடை விதித்துள்ளன (தரக்குறைவு காரணமாக) என்பது குறிப்பிடத்தக்கது.'தரச் சான்றிதழ் பெறுவது ஒவ்வொரு தயாரிப்பு நிறுவனத்திற்கும் அவசியம் என்று சட்டமியற்றப்படுவது மிக, மிக அவசியம்' என்கிறார் இந்தியத் தரக்கட்டுப்பாட்டு நிறுவன அதிகாரி ஒருவர்.

'சர்வதேச நிறுவனங்கள் 'தாதுக்குடிநீர்' தயாரிப்பில் ஈடுபடுவதை வரவேற்கத்தான் வேண்டும். ஆரோக்கியமான வியாபாரப் போட்டிக்கு வழிவகுப்பதோடு தரம் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்படுத்தவும் அது உதவும்' என்கிறார் அவர்.

எப்படியோ, தரமான குடிநீர் நியாயமான விலையில் தாராளமாகக் கிடைக்கும் என்ற செய்தி மக்களின் தாகம் தணிப்பதாக அமைகிறது.

பா. சங்கர்

ஆறாம்திணை இணைய இதழில் எழுதியது (1999)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக