புதன், 3 நவம்பர், 2010

மஞ்சள் காமாலையின் புதிய அவதாரங்கள்

உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸு க்கு இணையாக, ஹெபடைடிஸ்-ஏ, பி, சி, டி, , எஃப், ஜி என்று மஞ்சள் காமாலையின் புதிய அவதாரங்கள் மனித குலத்திற்கு மாபெரும் சவாலாக விளங்குகின்றன.

சாதாரண மஞ்சள் காமாலையே அலட்சியமாக இருந்துவிட்டால் உயிரைப் பறித்துவிடும்போது அதன் வழித்தோன்றல்களான இந்தக் குட்டிப் பிசாசுகள் பதினாறடி பாய்வதில் வியப்பேதுமில்லை.

வேதனை என்னவெனில் நம்மில் யாருக்கும் இந்த நோய் வகைகள் குறித்தோ அவற்றின் தீவிரம் குறித்தோ போதிய விழிப்புணர்வு இல்லை என்பதே.

மஞ்சள் காமாலை என்பதே ஒரு நோயின் அறிகுறி மட்டும்தான். ஈரல் திசு பாதிப்பு, பித்த நீர் அடைப்பு, ரத்தச் சிவப்பணுக்களில் குறைகள் ஏற்படுவது என மூன்று வகை பாதிப்பினால் மஞ்சள் காமாலை உண்டாகிறது.

கல்லீரலில் ஹெபடைடிஸ் வைரஸ் கிருமிகள் (ஏ, பி, சி, டி, , எஃப், ஜி) தாக்குவதால் கல்லீரல் அழற்சி உண்டாகி, வீக்கம் ஏற்பட்டு மஞ்சள் காமாலை நோய்க்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

கண்கள், சிறுநீர் ஆகியவற்றில் மஞ்சள் நிறத்தின் வெளிப்பாடு, காய்ச்சல், உடல்வலி, தலைவலி போன்ற அறிகுறிகள் தோன்றும். சிறுநீர், ரத்தப் பரிசோதனை மூலம் நோய் இருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

பாதுகாப்பற்ற அசுத்தமான குடிநீர், சுகாதாரமற்ற சூழல் மட்டுமல்லாது எய்ட்ஸ் நோயினைப் போன்றே உடலில் சுரக்கும் திரவங்கள், முறையற்ற பாலியல் உறவு, பரிசோதிக்கப்படாத இரத்தம், ஊசி உபகரணங்கள் போன்றவற்றின் மூலமாகவும் இந்த நோய் பரவுகிறது.

ஹெபடைடிஸ் 'ஏ' வைரஸ் நோய்க் கிருமியினால் பாதிக்கப்படுபவர்களே மிக அதிகம். இவர்களில் ஒரு சதவீதத்தினரே படுமோசமான கல்லீரல் செயலிழப்புக்கு ஆளாகின்றனர். அப்படியிருந்தும் கடந்த இரண்டு ஆண்டு காலத்தில் தில்லி அப்பல்லோ மருத்துவமனையில் கல்லீரல் பாதிப்புக்குள்ளான 22 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

13 குழந்தைகள் 'ஏ' வகை வைரஸ் கிருமி பாதிப்புக்குள்ளாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஐந்து குழந்தைகள் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். ஒரு குழந்தைக்குக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அவசியமாயிருந்தது போன்ற தகவல்கள் நமது அச்சத்தின் அளவை அதிகரிக்கின்றன.

உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக ஹெபடைடிஸ் நோய் வகைகளால் அதிக பாதிப்படையும் நாடாக இந்தியா அடையாளம் காணப்பட்டுள்ளது.

மஞ்சள் காமாலை A, B நோய்க் கிருமிகளுக்கு எதிராக நோய்த்தடுப்பு மருந்து வழங்குவதும், ஹெபடைடிஸ் C, D, E, F, G ( இவ்வளவுதானா, இதற்கு மேலும் நீளுமா என்பது தெரியவில்லை) வைரஸ் கிருமிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் மிக மிக அவசியமாகிறது.

அரசு, சுகாதாரப் பணியாளர்கள் தன்னார்வ அமைப்புகள் என்று இந் நோய்க்கெதிராகப் பன்முனைத் தாக்குதல் நடத்தியாக வேண்டும்.

காசநோய், போலியோ, அம்மை, கக்குவான் போன்ற நோய்களுக்கெதிராக அரசு செயல்படுத்தி வரும் இலவச நோய்த் தடுப்பு மருந்து வழங்கல் திட்டத்தில் ஹெபடைடிஸ் நோய்த்தடுப்பு மருந்தினையும் சேர்த்துக் கொள்வதில் அரசு தயக்கம் காட்டி வருகிறது.

இதற்கான தடுப்பு மருந்தின் விலை மிக அதிகமாக இருப்பதே காரணம். மேலும், ஒருவருக்குத் தகுந்த இடைவெளியில் மூன்று முறை இத் தடுப்பு மருந்தினைச் செலுத்த வேண்டும் என்பதும் மற்றோர் காரணமாக அமைகிறது.

சில தொண்டு நிறுவனங்கள் நானூறு ரூபாய் பெறுமானமுள்ள தடுப்பு மருந்தினைச் சலுகை விலையில் ரூ.100 க்கு அளிக்க முன் வருவதோடு இதற்கெனச் சிறப்பு முகாம்களை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

ஹெபடைடிஸ் பி வைரஸ் கிருமியால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஒருவருக்குக் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு ஆகும் செலவு சுமார் 25 லட்சம் ரூபாய் எனக் கணக்கிடப்படுகிறது.

இத் தொகையில் 16,000 குழந்தைகளுக்கு நோய்த்தடுப்பு மருந்து வழங்கி விட முடியும். தடுப்பு மருந்தினைக் குறைந்த விலைக்கு வழங்கி மக்களை ஹெபடைடிஸ் அரக்கனின் பிடியிலிருந்து மீட்பது அரசின் கையில்தான் உள்ளது.

- பா. சங்கர்

ஆறாம்திணை இணைய இதழில் வெளியானது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக