புதன், 3 நவம்பர், 2010

அமைதிப் பள்ளத்தாக்கு - ஓர் அற்புதம்

முகில் கூட்டம் முத்தமிடும் மரங்கள். அடர்ந்த வனம் எங்கும் பசுமை. சலசலவெனக் கிசுகிசுப்பாய்க் கதையளக்கும் சிற்றோடை. ஆரவாரமாக ஆர்ப்பாட்டமாக அமர்க்களமாகத் தனியாவர்த்தனம் செய்யும் மலையருவி. நின்று நிதானமாய் நகரும் குந்திப்புழா ஆறு. சட்டையின் கழுத்துப் பொத்தானைப் பொருத்திக் கொள்ளத் தூண்டும் குளிர்க் காற்று. அழிந்து வரும் அரிய வகை விலங்குகள், அபூர்வமான பறவைகள், வண்டுகள், செடிகள், மலர்கள் ....... யாவற்றையும் தன்னுள் பொத்தி வைத்து மெளனம் காக்கிறது அந்த 'அமைதிப் பள்ளத்தாக்கு'.

இயற்கையன்னை பெருமையுடன் கோலோச்சும் 'அமைதிப் பள்ளத்தாக்கு' கேரள மாநிலத்தின் விலை மதிப்பில்லா பொக்கிஷம். நீலகிரி மலைத் தொடர்கள் ஓங்கி உயர்ந்து நின்று காவலிருக்க, சுமார் 90 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் அமைதிப் பள்ளத்தாக்கு மர்மப் புன்னகை சிந்துகிறது. வடக்கிலிருந்து தெற்காகப் பாயும் குந்திப்புழா ஆறு பரதப் புழாவோடு கலக்கிறது. ஆண்டு முழுவதும் அடை மழைதான். ஜூலையில் மிக அதிகமான மழைப் பொழிவு. 'கேரளாவின் சிரபுஞ்சி' என்று சொல்லலாம். எளிதில் பயணிக்க முடியாத மிக அடர்த்தியான மழைக் காடாக இருப்பதால் மனிதனின் மாசுக்கரங்களில் இருந்து இன்னமும் தப்பிப் பிழைத்து வருகிறது அமைதிப் பள்ளத்தாக்கு.

இதன் மெளனத்தைக் கலைக்கவும் முயற்சி நடந்தது. குந்திப்புழா, பரதப்புழா ஆறுகள் சந்திக்கும் முகத்துவாரத்தில் அணை ஒன்றைக் கட்டி நீர் மின் உற்பத்திக்கு அடித்தளமிட்டார்கள்.1973 ல் 240 மெகாவாட் நீர் மின் திட்டத்திற்குத் திட்டக் குழுவும் ஒப்புதல் தந்துவிட்டது. ஆயத்த வேலைகளுக்காக 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட, கேரள அரசு பணிகளை முடுக்கிவிட்டது.

சற்று தாமதம் ஆனாலும் சுற்றுச் சூழலியலாளர்கள் விழித்துக் கொண்டனர். இயற்கை ஆர்வலர்கள், தாவரவியல் அறிஞர்கள், விலங்கியல் நிபுணர்கள், பறவைப் பார்வையாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் ஒருமித்த குரலில் எதிர்ப்பு தெரிவித்தனர். ஸ்டாக்ஹோம் மாநாட்டில் சுற்றுச் சூழல் குறித்த வளரும் நாடுகளின் கவலையை அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி மிகச் சிறப்பாக வெளிப்படுத்திய நேரம் அது. அவர் உரை நிகழ்த்தி ஓராண்டு காலத்திற்குள்ளாகவே இப் பிரச்சினை வெடித்தது. 'அமைதிப் பள்ளத்தாக்கைக் காப்பாற்றுங்கள்' என்ற முழக்கம் வலுப்பெற்று ஒரு இயக்கமாகவே மலர்ந்தது.

கோழிக்கோட்டைச் சேர்ந்த தாவரவியல் விரிவுரையாளர் எம்.கே. பிரசாத், போராட்டத்தை முடுக்கி விட்டார். இவர் கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத் அமைப்பின் சுற்றுச்சூழலியல் பிரிவின் அமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. டாக்டர். சதீஷ்சந்திரன் நாயர், பேராசிரியர் எம்.பி. பரமேஸ்வரன் ஆகியோர் சென்னையில் உள்ள அறிவியல் சமூகத்திற்கு இப் பிரச்சனையின் தீவிரம் குறித்து செய்தியனுப்பினர். கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத் வெளியிட்ட துண்டுப் பிரசுரங்களால் ஈர்க்கப்பட்ட மலையாள மொழிக் கவிஞர் சுகிர்தகுமாரி கேரள இலக்கிய வட்டாரத்தில் சலசலப்பை உண்டாக்கினார். சுகிர்தகுமாரியுடன் மலையாள இலக்கிய ஜாம்பவான்களான வைக்கம் முகமது பஷீர், ஓ.என்.வி.குரூப், என்.வி. கிருஷ்ண வாரியர் மற்றும் டாக்டர் சுகுமார் ஆழிக்கோடு ஆகியோர் இணைந்து கொள்ள போராட்டம் தீவிரமடைந்தது. கேரள மாநிலத்தைச் சேர்ந்திராத பிற பிரபல இயற்கை ஆர்வலர்களான சலீம் அலி, டாக்டர் ஸபார் ஃபுடேஹல்லி (பாம்பே), டாக்டர் மாதவ் காட்கில் மற்றும் பெங்களூரைச் சேர்ந்த எம்.ஏ. பார்த்தசாரதி, சென்னையிலிருந்து ரோமுலஸ் விட்டேகர் போன்றோரும் கை கோர்த்துக் கொண்டனர். வடக்கு கேரளாவில் உள்ள கல்லூரி மாணவர்களும் களத்தில் இறங்க களைகட்டிவிட்டது போராட்டம்.

இந்த மாணவர்கள் தங்கள் கல்வி சார்ந்த விலங்கியல், தாவரவியல் 'மாதிரிகள்' கண்டெடுக்க அமைதிப் பள்ளத்தாக்கையே பெரிதும் சார்ந்திருந்தனர் என்பதால் அவர்கள் தங்கள் ஒத்துழைப்பை ஆத்மார்த்தமாக வழங்கினார்கள். நாடெங்கிலுமிருந்து இயற்கைக் காதலர்கள் நீர் மின் திட்டத்தை எதிர்த்துத் தந்தியடிக்கத் துவங்கினார்கள். சர்வதேச சுற்றுச் சூழலியல் நிறுவனங்களும் தங்கள் பங்குக்கு நெருக்கடி கொடுத்தன.

மத்திய அமைச்சகத்தில் வேளாண்மைப் பிரிவு முதன்மைச் செயலராக இருந்த டாக்டர். எம்.எஸ். சுவாமிநாதன் 'அமைதிப் பள்ளத்தாக்குக்கு' ஒருமுறை விஜயம் செய்து நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து பிரதமருக்குத் தகவல் அனுப்பினார். வளர்ச்சித் திட்டத்துக்கும், சுற்றுச் சூழலியலுக்கும் ஏற்பட்ட நேரடி மோதலை அரசியல் கண்ணோட்டத்தோடு அணுகுவது தவறு என முடிவு செய்த இந்திராகாந்தி, அறிவியல் தொழில்நுட்பப் பிரிவு செயலர் பேராசிரியர் எம்.ஜி.கே. மேனன் தலைமையில் ஆய்வுக்குழு ஒன்றை அமைத்தார். இரண்டாண்டு குறுகிய இடைவெளியில் மூன்று ஆட்சி மாற்றங்கள். மொரார்ஜி தேசாய், சரண்சிங், இந்திராகாந்தி என பிரதமர்கள் மாறிக் கொண்டே இருக்க நீறு பூத்த நெருப்பாய் பிரச்சினை கனன்று கொண்டே இருந்தது.

இயற்கைவாதிகள், அமைதிப் பள்ளத்தாக்கைக் காப்பாற்றும் முயற்சியாக சட்டவழியிலும் சென்று பார்த்தார்கள். ஆனால், நீதிமன்றத்தில் அவர்களுக்குத் தோல்வியே பரிசாய் கிடைத்தது.!

1983 ல் சமர்ப்பிக்கப்பட்ட எம்.ஜி.கே. மேனன் அறிக்கை நீர் மின் திட்டத்திற்கு எதிராகவே தனது கருத்துகளைத் தெரிவித்திருந்தது.

அறிக்கையைக் கூர்ந்து ஆராய்ந்த இந்திராகாந்தி, நீர் மின் திட்டத்திற்கான அனைத்துப் பணிகளையும் கிடப்பில் போட கேரள அரசுக்கு உத்தரவிட்டார். அதோடு 'அமைதிப் பள்ளத்தாக்கை' தேசியப் பூங்காவாகவும் அறிவித்தார். இயற்கை ஆர்வலர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். ஆனால் இந்த அறிவிப்பு அமல்படுத்தப்படுவதை பார்க்கும் பாக்கியம்தான் இந்திராவுக்கு இல்லை.

1985 ஆம்ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் ராஜீவ் காந்தி அமைதிப் பள்ளத்தாக்கை தேசியப் பூங்காவாக முறைப்படி துவக்கி வைத்தார். இத்தகைய நீண்ட போராட்ட வரலாறு கொண்ட 'அமைதிப் பள்ளத்தாக்கு' எது குறித்தும் கவலை கொள்ளாது தனது மெளன ஆட்சியைப் பரிபாலித்து வருகிறது. தற்போது, கேரளாவின் கெளரவ அடையாளமாக 'அமைதிப் பள்ளத்தாக்கைக்' கருதும் கேரள வனத்துறை, 'அமைதிப்பள்ளத்தாக்கு - காரணங்களின் கிசுகிசுப்பு!' (Silent Valley : Whispers of Reason) என்ற அதி அற்புதமான கட்டுரைத் தொகுப்பைக் கண்ணைக் கவரும் வண்ணப் படங்களுடன், வியப்பூட்டும் தகவல்களுடன் கடந்த செப்டம்பர் மாதம் வெளிக் கொணர்ந்துள்ளது. இயற்கை ஆர்வலர்களின் வலிகளை, ரணங்களைத் தழும்புகளை அங்குலம் அங்குலமாகப் பதிவு செய்திருக்கும் இப் புத்தகம் அந்த தேசியப் பூங்காவின் அனைத்துச் சிறப்பியல்புகளையும் விரிவாய் அலசும் 38 கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. நூலாசிரியர்களாக டி.எம். மனோகரன், எஸ்.டி. பிஜு , டி.எஸ். சிந்தி ஆகியோர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். கேரள வனத்துறை (திருவனந்தபுரம், வழுத்தக்காடு) வெளியிட்டிருக்கும் இப் புத்தகம் 421 + XVII பக்கங்களுடன் ஓர் இயற்கைப் பொக்கிஷமாக நம் கைகளில். உள்ளிருக்கும் கருப்பொருள் விலை மதிப்பில்லாதது என்றே சொல்ல வேண்டும்.

வன வாழ்க்கை புகைப்படக் கலைஞர் சுரேஷ் இளமோன் உணர்ந்து, அனுபவித்து எடுத்துத் தள்ளியிருக்கும் புகைப்படங்கள் நமது இயற்கை மீதான மனப்புகையை விரட்டியடிக்கின்றன. எதைச் சொல்வது? எதை விடுப்பது? நமது குழப்பத்தைப் பார்த்து அமைதிப் பள்ளத்தாக்குத் தவளை வாயில் காற்றடைத்துச் சிரிக்கிறது. கிணற்றுத் தவளையாக இல்லாமல் 'அமைதிப் பள்ளத்தாக்கு'க்கு ஒரு நடை போய்விட்டு வந்துவிடுவோம்.... நம் வாழ்நாளில்.

தமிழில் : பா.சங்கர்
நன்றி : ஃப்ரண்ட்லைன்

ஆறாம்திணை இணைய இதழில் வெளியான மொழிபெயர்ப்பு கட்டுரை (2000)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக