வியாழன், 4 நவம்பர், 2010

தஞ்சாவூர் - இசைக்கருவிகளின் பிறப்பிடம்

டிசம்பர் மாதம் சென்னையில் சங்கீத காலம். அனைத்து சபாக்களிலும் நாள் தவறாமல் இசைக்கச்சேரிகள். கர்னாடக இசை எங்கும் பொங்கி வழிகிறது. வித விதமாய் எத்தனை எத்தனை இசைக் கருவிகள். நம் செவிகளில் தேன் பாய்ச்சும் கலைஞர்களின் கைகளில் தவழும் அந்த இசைக்கருவிகள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்ற கேள்வி நம்முள் எழுகிறது. ஒருமித்த குரலில் வரும் ஒரே பதில்... தஞ்சாவூர். ஆம் கலைகளின் தாயகமான தஞ்சாவூர்தான் இசைக்கருவிகளின் பிறப்பிடமாகவும் விளங்குகின்றது.

ஓவியம், இசை, நடனம் என பாரம்பரியக் கலைகள் காலம் காலமாய் விழுதுகள் விட்டுப் படர்ந்து வரும் ஆலமரமாய் தஞ்சாவூர் நிலைத்து நிற்கிறது. இசைக்கருவிகளை உருவாக்கிக் கலைத் தொண்டு செய்து வரும் கைவினைக்கலைஞர்களின் குடும்பங்கள் தஞ்சையிலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் ஏராளம், ஏராளம். தமிழகத்திற்கே உரிய பாரம்பரிய கலாச்சார வாழ்க்கையில், இசை மற்றும் நடனத்திற்கு என்றுமே தனி மதிப்பு இருக்கத்தான் செய்கிறது. இசை இருக்கும் வரை இசைக் கருவிகளின் தயாரிப்பும் இருந்து கொண்டுதானே இருக்கும்.

வாருங்கள் தஞ்சாவூர் பக்கம் ஒரு சிற்றுலா போய் வருவோம்...

சுப நிகழ்ச்சிகள், சடங்குகள், திருவிழாக்கள் என்று ஒவ்வொன்றிற்கும் ஒரு குறிப்பிட்ட இசைக்கருவி பிரதான இடம் வகிக்கிறது.

நாதஸ்வரத்துடன் மங்களகரமாய்த் துவங்குவோம். இது ஒரு காற்று வாத்தியம். ஆச்சாமரம் என்ற குறிப்பிட்ட வகை மரத்திலிருந்து செய்யப்படுகிறது. திருமண நிகழ்ச்சிகளில் அவசியம் இருந்தாக வேண்டிய ஓர் அம்சம் நாதஸ்வர இசை. திருவாரூர் கோயிலில் (தஞ்சாவூர்) மாவுக்கல்லினால் ஆன நாதஸ்வரம் இருப்பது தனிச்சிறப்பு. தினசரி பூஜைகளின் போதும் இந்த நாதஸ்வரம் இசைக்கப்படுகிறது.

அடுத்து வருவது புல்லாங்குழல். இதுவும் கூட காற்று வாத்தியமே. குழல் அல்லது வாங்கியம் என்றும் அழைக்கப்படுகிறது. மாயக் கண்ணனின் விருப்ப வாத்தியமான குழலோசைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. மூங்கில், சந்தன மரம், செங்காலி, கருங்காலி மரங்களிலும் வெண்கலத்திலும் கூட புல்லாங்குழல் தயாரிக்கப்படுகிறது.

முதலில் மூங்கில் மரத்துண்டுகள் சூரிய ஒளியில் நன்கு காய வைக்கப்படுகின்றன. பின்னர் புடம் போட்டு அதைப் பதப்படுத்துகின்றனர். இதைத் தொடர்ந்து குழலின் நீளத்திற்கேற்ப சம இடைவெளியில் 12 துளைகள் ஸ்வரஸ்தானத்தின் அடிப்படையில் போடப்படுகின்றன. தோடர், காடர் போன்ற மலைவாழ் பழங்குடியினர் எளிமையான முறையில் குழல் வாத்தியத்தைத் தயாரித்துப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

கலைமகள் கைப்பொருளாய் விளங்கும் இசைக்கருவி வீணை. இக் கருவியிலிருந்து எழும் நாத வெள்ளத்தில் மூழ்காதவர் இருக்க முடியுமா? அத்தனை இனிமை. பழமையான 'யாழ்' என்ற தந்திக் கருவியின் முன்னேறிய வடிவம்தான் வீணை என்று சொல்லலாம். சாதாரண மூங்கில் வில் வடிவத்திலிருந்து முதலை, படகு, மீன் என பல்வேறு கவர்ச்சியான வடிவங்களில் நுணுக்கமான வேலைப்பாடுடன் யாழ்கள் தயாரிக்கப்பட்டு வந்தன. எனினும் ஒரே வகையான இசை வடிவத்தை மட்டுமே பெற முடிந்ததால் யாழ் மெல்ல மெல்ல மறைந்து வீணையின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்தது.

பொதுவாகப் பலா மரத்திலிருந்தே வீணை வடிவமைக்கப்படுகிறது. வீணையின் பல பாகங்களும் தனித்தனியே உருவாக்கப்பட்டு பின்னர் ஒருங்கிணைக்கப்படுகின்றன. பானை, மேல் தண்டு, கழுத்து, யாளி அல்லது சிங்க முகம் என்று எல்லா பாகங்களையும் மிகச் சிரத்தையுடன் இழைத்து இழைத்து உருவாக்குகிறார்கள்.

தேன்மெழுகு, கறுப்புப் பொடி இரண்டும் இணைந்த கலவை வீணை மீது பூசப்படுகின்றது. பிறகு வீணை சமநிலைப்படுத்தப்படுகிறது. 12 கட்டைகள் கொண்ட ஸ்வரஸ்தானம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த ஸ்வரஸ்தானங்கள் பாலம் மற்றும் பக்கவாட்டுத் தகடு ஆகியவை பெரும்பாலும் பித்தளை உலோகத்தினால் செய்யப்படுகின்றன. ஒரு வீணையைச் செய்து முடிக்கக் குறைந்தது 10 நாள்களாவது தேவைப்படும்.

தஞ்சாவூரில் பல குடும்பங்கள் பரம்பரையாக வீணைத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. வீணை போன்ற தோற்றத்துடன் வரும் மற்றொரு வாத்தியம் தம்புரா. ஆனால், வீணையின் குறிப்பிடத் தக்க பகுதிகளான யாளி முகம், கழுத்து ஆகியவை தம்புராவில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து வருவது முரசு, மேளம் போன்ற வாத்தியங்கள். முன்பெல்லாம் அரசாணைகளை முரசறைந்து அறிவிப்பதே வழக்கம். தண்டோரா போடுவதும் இதனடிப்படையில்தான். மேள வகையில் மிக முக்கியமான இசைக்கருவி என்று மிருதங்கத்தைச் சொல்லலாம்.

மரத்தாலான நீள் உருளையின் இரண்டு பக்க வாய்ப்புறமும் மாட்டுத் தோலால் மூடியிருப்பார்கள். தோல், நார்களால் நன்கு இழுத்துக் கட்டப்பட்டிருக்கும் வாய்ப்புறத்தை கைவிரல்களால் தாக்கும் போது எழும் மிருதங்க இசை தாளம் போட வைக்கும்.

நீள்உருளை பெரும்பாலும் பலா மரக்கட்டையில்தான் செய்யப்படுகிறது. உருளையைப் பட்டறையில் கொடுத்து கடைந்து கொள்கின்றனர்.

இதைப் போன்றே மற்றுமொரு சிறப்பான இசைக்கருவியாகக் 'கஞ்சிரா'வைச் சொல்லலாம். வட்ட வடிவிலான பலாமரக் கட்டையைக் குடைந்து உடும்புத் தோலினால் மூடி விடுகிறார்கள். கட்டையின் விளிம்புகளில் துளையிட்டு சிறு சிறு உலோகத் தகடுகள் அல்லது நாணயங்களைக் கோர்த்து விட கஞ்சிரா கலக்கத் தொடங்கி விடுகிறது.

'அட, பானை நல்லா இருக்கே. ஜில்லுன்னு தண்ணீர் குடிக்கலாம் ! ' என்று பார்த்தால்... அதைக் 'கடம்' என்ற வாத்தியக் கருவியாய் அறிமுகம் செய்கிறார்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மானாமதுரை மண் எடுத்து இந்தக் கடம் உருவாக்கப்படுகிறது. இப் பகுதியில் கிடைக்கும் தனிச்சிறப்பு வாய்ந்த களிமண் கடம் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பார்ப்பதற்குச் சாதாரண பானை போன்று காட்சியளிக்கும் கடம், வாத்தியக் கலைஞரின் கைகளில் தனி ஆவர்த்தனம் செய்யும் போது மலைத்துப் போகிறோம்.

பஞ்ச முக வாத்தியம் என்பது தனித்துவம் வாய்ந்த ஓர் இசைக்கருவி. கோயில்களில் மட்டுமே இந்த வாத்தியம் இசைக்கப்படுகிறது !

பெயருக்கேற்றாற் போல் ஐந்து சிறிய அளவிலான முரசுகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு அதே மாதிரியான பெரிய அமைப்போடு இணைக்கப்படுகிறது. யாளிமுகம், பூ வேலைப்பாடு எல்லாம் செய்து அலங்கரிக்கிறார்கள். குறுகலான அடிப்பகுதி செம்பு அல்லது பித்தளையால் செய்யப்படுகிறது. இரண்டு செம்புக் குடங்களையும் பக்கவாட்டில் இணைத்து மாட்டுத் தோலால் மூடுகிறார்கள்.

திருவாரூர் கோயிலில் மூன்று கால பூஜையின் போதும் இக் கருவி இசைக்கப்படுவது ஒரு சம்பிரதாயச் சடங்காகவே கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சுரைபிறை என்பதும் கோயில்களில் மட்டும் பயன்படுத்தப்படும் வாத்தியமாகும். கெளரிகலம், கொம்பு, உடுக்கை, சங்கு போன்ற வாத்தியக் கருவிகள் கோயில் திருவிழாக்காலங்களில் இசைக்கப்படுகின்றன. மணற்கடிகை வடிவத்தில் இருக்கும் உடுக்கையைப் பேயோட்டும் சடங்குக்கும் உபயோகப்படுத்துகிறார்கள். கிராமிய வாத்தியக் கருவிகளும் பல உள்ளன. வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளில் பயன்படும் 'வில்லடி வாத்தியம்' குறிப்பிடத் தக்கது. இதில் கடம் போன்றே பெரிய பானை ஒன்றின் கழுத்தில் நீண்ட மூங்கில் குச்சியைக் கட்டி அதில் சிறு சிறு பித்தளை மணிகளைக் கயிற்றில் தொங்க விடுகிறார்கள்.

மாட்டுத் தோலினால் ஆன, டேபிள் டென்னிஸ் மட்டை போன்ற ஒரு கருவியைப் பானையின் வாய்ப்புறத்தில் தட்டியபடி மற்றொரு கையால் மூங்கில் குச்சியில் கட்டப்பட்டுள்ள மணிகளை ஒலிக்கச் செய்ய வில்லுப்பாட்டுக் கச்சேரி சூடு பிடிக்கிறது.

இப்படி அனைத்து வகை இசைக்கருவிகளையும் கலையுணர்வோடு தயாரித்து வழங்கும் தஞ்சைக் கைவினைஞர்களை இசையுலம் இசைவிழா நடக்கும் இவ் வேளையில் நன்றியுடன் வணங்கத்தான் வேண்டும்.

பா.சங்கர்

ஆறாம்திணை இணைய இதழில் எழுதியது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக