'ஆஸ்திரேலியா - ஒரு இந்திய புகைப்படக் கலைஞனின் பார்வையில்' என்ற தலைப்பில் சென்னை லலித் கலா அகடமியில் அக்டோபர் 11-முதல் 20 வரை ஒரு புகைப்படக் கண்காட்சிக்கு ஆஸ்திரேலிய தூதரகம் ஏற்பாடு செய்திருந்தது. புதுதில்லி இந்திய சர்வதேச மையத்தில் உள்ள லலித் கலா அகடமி வளாகத்திலும், பெங்களூரில் உள்ள கர்நாடகா சித்ரகலா பரிஷத் வளாகத்திலும் மார்ச் 99 ல் நடைபெற்ற இப் புகைப்படக் கண்காட்சி தற்போது சென்னைக்கு வந்துள்ளது.
இங்கிருந்து கல்கத்தா, மும்பை, டாக்கா நகரங்களுக்குப் பயணமாக உள்ளதாம். நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் ஆஸ்திரேலிய நாட்டின் பூகோள, சரித்திர, கலாச்சாரப் பின்னணியைப் பிரதிபலிக்கும் விதமாக தம் கண்முன்னே விரிகையில் ஓர் சிற்றுலா சென்று வந்த பிரமிப்பு எழுகிறது. ''எல்லோரும் அறிந்த வழக்கமான அடையாளங்களைத் தவிர்த்து எனது வித்தியாசமான பார்வையில் புதுமையான கோணத்தில் ஆஸ்திரேலிய நாட்டை அறிமுகம் செய்ய முயற்சித்துள்ளேன்'' என்கிறார் புகைப்படக் கலைஞர் சதீஷ் சர்மா.
ஆஸ்திரேலியாவைப் புகைப்படங்களால் ஆன ஓர் ஓவியமாகத் தீட்டும் தனது முயற்சியில் சதீஷ் சர்மா வெற்றியடைந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ல் பஞ்சாப் (இ ந்தியா) மாநிலத்தில் பிறந்த சதீஷ் சர்மா சுயமாகவும், சுதந்திரமாகவும் இயங்கும் ஒரு புகைப்படக் கலைஞர். தனது அரிய புகைப்படங்களைப் பொக்கிஷமாகப் போற்றிப் பாதுகாத்து வருகிறார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் (1998) ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் சென்றிருந்த சதீஷ் சர்மா தனது முயற்சிக்குப் பல வகையிலும் உதவி செய்த ஆஸ்திரேலியத் தூதரக அதிகாரிகளை நன்றியுடன் நினைவு கூர்கிறார்.
ஆஸ்திரேலிய மக்களின் இல்லறவியலில் தனது கவனத்தை அதிக அளவில் சதீஷ் சர்மா செலுத்தியிருப்பதை உணர முடிகிறது. அங்குள்ள மக்களின் குடும்பச் சூழலில் ஒரு இந்தியத் தன்மை வெளிப்படுவது வியப்படைய வைக்கிறது. கண்ணைக் கவரும் மலர் முக மழலைகள், தாய்மையின் பெருமையில் பூரிக்கும் பெண்கள், குழந்தைகளை அன்புடன் அரவணைத்து ஆதரிக்கும் ஆண்கள் மற்றும் வாழ்க்கை வானில் மகிழ்ச்சியாக சிறகடிக்கும் பட்டாம்பூச்சியாய்க் காதலர்கள் என தனது புகைப்படங்களை அவர் வரிசைப்படுத்தியிருப்பதும், அப் புகைப்படங்களில் பொங்கி வழியும் உணர்வுகளும் நம் கண்களுக்கும் கருத்துக்கும் விருந்தாகின்றன.
ஆளரவமோ, வாகனமோ ஏதும் காணப்படாத வெறிச்சோடிய சாலை. தூரத்தில் மலையென உயர்ந்து நிற்கும் மண் மேடு! அந்தச் சாலையின் நடுவே வேகத்தடை அமைக்கப்பட்டிருப்பதை உணர்த்தும் குறியீட்டுப் பலகை என்று அவர் தனது புகைப்படக் கோணத்தை அமைத்திருக்கும் விதம் பாராட்டுக்குரியது. மேடுபள்ளமற்ற அந்த 'நாட்டுப்புறச் சாலை' யின் பராமரிப்பு நம்மை ஏங்க வைக்கிறது.
ஆஸ்திரேலியாவின் தனித்த அடையாளமான கங்காருவைப் படமெடுக்காமல் அந்தக் கங்காருக்களின் நடமாட்டத்தை உணர்த்தும் வகையில் சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள எச்சரிக்கைக் குறியீட்டுப் பலகையை முன்னிறுத்தி அதை ஈடுகட்ட முயற்சிக்கிறார்.
வானுயர்ந்த கட்டிடங்கள், கிங்ஸ் பார்க்கில் உள்ள புகழ் பெற்ற இங்கிலாந்து ராணியின் யூகலிப்டஸ் மரம் உடைந்து சிதிலமாகிப் போயிருக்கும் 'லண்டன் பிரிட்ஜ்' அதன் முந்தைய தோற்றத்தைக் காட்டும் அறிவிப்புப் பலகை, இயற்கைக் காட்சிகள், கலை நிகழ்ச்சிகள் என சதீஷ் சர்மா சிறைப்பிடித்திருக்கும் காட்சிகள் நம்மையும் கட்டிப் போட்டு விடுகின்றன. குடியேற்ற நாடுகளுக்கே உரித்தான அந்தக் கலாச்சாரப் பின்னணியை அளவோடு, அழகோடு வெளிப்படுத்துகிறார்.
கண்காட்சியைத் துவக்கி வைத்த 'ஃபிரன்ட்லைன்' ஆங்கில இதழின் ஆசிரியர் என். ராம் ஒரு கிரிக்கெட் பிரியர். கிரிக்கெட் தொடர்பான புகைப்படங்களை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த அவர், அது குறித்து சதீஷ் சர்மாவிடம் குறிப்பிட அதற்கு அவர் ஒரு புன்னகையை மட்டுமே பதிலாக்குகிறார். ஆம், அநேகரும் அறிந்திருக்கும் விஷயங்களை அவர் உள்நோக்கத்தோடேயே தவிர்த்திருக்கிறார் என்பது புலனாகிறது. பிரபலமான கிரிக்கெட்டைத் தவிர்த்தவர், தவிக்க வைக்கும் அலைச்சறுக்கு விளையாட்டை அற்புதமாகப் படம் பிடித்து அசத்தி விடுகிறார்.
ஒரு புகைப்படக் கலைஞராக மட்டுமின்றி, எழுத்தாளராக, நிகழ்ச்சி நடத்துனராக, காப்பாளராக பல முகங்களைக் கொண்டுள்ள சதீஷ் சர்மாவை வித்தியாசமான கலைஞர் என்றே அறிய முடிகிறது.
புகைப்படக்கலை குறித்து வர் எழுதியுள்ள ஏராளமான புத்தகங்களும், கண்காட்சி அறிமுக வடிவங்களும் அவர் மீதான அபிப்ராயங்களைப் புதிய உயரத்துக்குக் கொண்டு செல்கின்றன.
'Street Dreams', 'Fotofeis 95', 'Taj Mahal', '../images and Words', 'Actors Pilgrims, Kings and Gods', 'Artists, Protest', 'Prathibimb : Photography in India', 'Art Heritage Catalogue' and 'Das Endlose Rad' என நீளும் அவரது வெளியீடுகள் கவனத்துக்குரியவை.
பத்திரிகையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், கலை ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரையும் கவர்ந்த ப் புகைப்படக் கண்காட்சி ஆஸ்திரேலியத் தூதரகத்தின் ஒத்துழைப்போடு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.
கண்காட்சி அமைக்கப்பட்டதன் நோக்கம், ஆஸ்திரேலிய நாட்டைப் புகைப்படங்களின் வாயிலாக வித்தியாசமானதொரு கோணத்தில் அறிமுகம் செய்யும் அவர்களின் முயற்சி குறிப்பிடத்தக்க வரவேற்பைப் பெறத் தவறவில்லை.
சதீஷ் சர்மாவின் 'காமிரா'க் கண்களூடே வித்தியாசமான ஒரு ஆஸ்திரேலியாவைத் தரிசித்த திருப்தி.
பா. சங்கர்
ஆறாம்திணை இணைய இதழில் வெளியானது (1999)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக